வீட்டிலேயே காய்கறி வளர்ப்பு - மார்டி அறிமுகப்படுத்திய புதிய தொழில்நுட்பம் மக்கள் மத்தியில் வரவேற்பு
- Surendran Sumdraraj
- 22 May, 2026
கோலாலம்பூர், மே 22-
மலேசிய வேளாண்மை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (MARDI) அறிமுகப்படுத்தியுள்ள புதிய காய்கறி வளர்ப்பு தொழில்நுட்பம், பொதுமக்கள் வீட்டிலேயே எளிதாக காய்கறிகளைப் பயிரிட உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சமையல் செலவினங்களைக் குறைப்பதுடன், இறக்குமதி உணவுகளின் மீதான சார்பையும் குறைக்க முடியும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
MARDI தலைமை இயக்குநர் Datuk Dr Mohamad Zabawi Abdul Ghani கூறுகையில், மேற்கு ஆசியாவில் நிலவி வரும் அரசியல் பதற்றம் உலகளாவிய உணவு விநியோகச் சங்கிலியை பாதித்துள்ளதாகத் தெரிவித்தார். இதனால் காய்கறி மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு ஏற்பட்டுள்ள நிலையில், மக்கள் தங்களே வீட்டில் காய்கறி வளர்ப்பது அவசியமாகியுள்ளது என்றார்.
மேலும் அவர் கூறுகையில், வீட்டுத் தோட்டப் பயிரிடலுக்காக மிகவும் சிக்கலான தொழில்நுட்பம் தேவையில்லை என்றும், அதிக செலவு மற்றும் தொழில்நுட்ப திறன் தேவைப்படும் தானியங்கி கண்காணிப்பு அமைப்புகளை விட எளிமையான முறைகளையே MARDI ஊக்குவித்து வருவதாகத் தெரிவித்தார்.
“MARDI அறிமுகப்படுத்தியுள்ள ‘Self-Watering’ முறை மிகவும் பயனுள்ளதாகும். இந்த முறையில் தினமும் தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியமில்லை. தானாகவே நீர்ப்பாசன அமைப்பு செயல்பட்டு செடிகளுக்கு தேவையான நீரை வழங்கும்,” என்று அவர் விளக்கினார்.
இந்த புதிய முயற்சி நகர்ப்புற மக்களிடையே வீட்டுத் தோட்ட கலாசாரத்தை ஊக்குவிப்பதுடன், உணவு பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



