“Thaipusam action plan” – பினாங்குத் தைப்பூசத் திருவிழாவில் பக்தர்களின் நலனுக்காகப் புதியதொரு செயல்திட்டம்

top-news

தி. கிரிஷன் 

பினாங்கு, ஜன 26, பினாங்கு மாநிலத்தில் நடைபெறவுள்ள 240ஆம் ஆண்டு தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முக்கிய ஏற்பாடுகள் குறித்து ஆலயத் தலைவர் குமரதிரவியம் காசிநாதன் ஆலய அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் விரிவாகத் தெரிவித்தார்.

கடந்த ஆண்டைப் போலவே இவ்வருடமும் அதிகளவான பக்தர்கள் தைப்பூசத் திருவிழாவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, தைப்பூசத்திற்கு முந்தைய நாள் 31.01.2026 அன்று காலை 5 மணி முதல் 10 மணி வரை ஆலயப் படிகளில் கடும் கூட்ட நெரிசல் ஏற்படும் நிலை வழக்கமாக காணப்படுகிறது. இந்த நிலைமையைக்  கருத்தில் கொண்டு, பக்தர்கள் எளிதாகவும் பாதுகாப்பாகவும் ஆலயத்திற்குள் செல்வதற்காக இவ்வருடம் “Thaipusam action plan” என்கிற புதியதொரு  செயல்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இப்புதிய திட்டத்தின் ஒரு பகுதியாக, கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் ஆலயத்தைச் சுற்றி விசாலமான கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தக் கூடாரங்களுக்குள் காற்றாடிகள் பொருத்தப்பட்டு, நான்குத் திசைகளிலும் தொலைக்காட்சித் திரைகள் நிறுவப்பட்டுள்ளன. இதன் மூலம் பக்தர்கள் ஆலயப் படிகளில் மேலே ஏறிச் செல்லும் போதே,  கருவறையில் முருகன் சன்னதியிற்கு நடைபெறும் அபிஷேகங்களையும் பூஜைகளையும் நேரடியாகக் கண்டுகொண்டே செல்லலாம். 

மேலும், ஆலய வளாகம் முழுவதும் மருத்துவ உதவிகள், முதலுதவி வசதிகள், குடிநீர் ஏற்பாடுகள் போன்றவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவையனைத்தும் பக்தர்களின் நலனையும் வசதியையும் கருத்தில் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆலயத் தலைவர் குமரதிரவியம் காசிநாதன் தெரிவித்தார்.

அதேபோல், ஆலய படிகளில் மேலே செல்லும் போது மூன்று வழித்தடங்களாக பிரிக்கப்பட்ட நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த வழித்தடங்களைக் கண்காணிக்க தன்னார்வலர்களும் பாதுகாப்புப் பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பக்தர்கள் ஒழுங்காக செல்லும் பட்சத்தில், கூட்ட நெரிசல் இல்லாமல் எளிதாக ஆலயத்தை அடைய முடியும் என அவர் கேட்டுக்கொண்டார்.

பூச நட்சத்திரம் அதிகாலை 4.30 மணிக்கு பிறப்பதால், அதே நேரத்தில் அனைவரும் காணிக்கை செலுத்த வேண்டும் என நினைப்பது இயல்பானதே. எனினும், காலை 4.30 மணி முதல் 10.30 மணி வரை கூட்டம் அதிகமாக இருக்கும் என்றும், அதன் பின்னர் காலை 11 மணி முதல் கூட்டம் கணிசமாகக் குறையும் என்றும்  குமரதிரவியம் காசிநாதன் தெரிவித்தார். ஆகவே, சுமையின்றியும் கூட்ட நெரிசலின்றியும் நேர்த்திக்கடனை செலுத்த விரும்பும் பக்தர்கள், அந்த நேரத்தையும் பரிசீலிக்குமாறு அவர் வலியுறுத்தினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *