‘திருச்செந்தூர் முருகன் கோவிலில் கட்டண உயர்வு இல்லை’; அமைச்சர் ரமேஷ் விளக்கம்
- Surendran Sumdraraj
- 24 Jun, 2026
சென்னை, ஜூன் 24 –
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு தரிசனம் மற்றும் சேவைகளுக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டதாக வெளியான தகவல்களுக்கு அமைச்சர் ரமேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், தற்போது எந்தவித கட்டண உயர்வும் அமல்படுத்தப்படவில்லை என்றும், கோவில் நிர்வாகம் சார்பில் பொதுமக்களிடம் கருத்து கேட்கும் நடவடிக்கை மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
சமீபத்தில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் அபிஷேகம், தங்கத்தேர் உலா, சண்முகார்ச்சனை உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்களை உயர்த்தும் பரிந்துரைகள் தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இது குறித்து பக்தர்களின் கருத்துகளும் எதிர்ப்புகளும் பெறப்பட்டு வருகின்றன.
இதனால் பக்தர்கள் மத்தியில் கட்டண உயர்வு ஏற்கனவே அமலுக்கு வந்துவிட்டதாகத் தகவல்கள் பரவிய நிலையில், அவற்றை அமைச்சர் மறுத்துள்ளார். “மக்களின் கருத்துகளைக் கேட்டறிந்த பிறகே எந்த முடிவும் எடுக்கப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கோவில் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பக்தர்களின் நலன் பாதுகாக்கப்படும் என்றும், பொதுமக்களின் கருத்துகள் பரிசீலிக்கப்பட்ட பிறகே அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் ரமேஷ் உறுதியளித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



