12 ஆண்டுகளுக்கு பிறகு அத்திவரதர் தரிசனம் - மார்ச் 1 முதல் 10 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி!

top-news
FREE WEBSITE AD

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வரதராஜப் பெருமாள் கோயிலில் பாதாள அறையில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீதேவி, பூதேவி உடனாய அத்திவரதரை 12 ஆண்டுகளுக்கு பிறகு மார்ச் 1-ம் தேதி முதல் 10 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பொதுவாக 'அத்திவரதர்' என்றாலே காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில்தான் நினைவுக்கு வரும். அத்திவரதர் என்பது காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜர் பெருமாள் ( Varadaraja Perumal Temple ) கோவிலின் அரிய திருவுருவம். இது அத்தி மரத்தால் (Fig tree wood) செதுக்கப்பட்டதால் அத்திவரதர் என அழைக்கப்பட்டு மிகுந்த ஆன்மிக, வரலாற்று முக்கியத்துவம் பெற்றதாகிறது. அத்திமரம் மருத்துவ குணங்கள் நிறைந்ததாக மட்டுமின்றி ஆன்மீக ரீதியில் நன்மை தரும் புனித மரமாக கருதப்படுகிறது. அதனால் அந்த மரத்தில் செய்யப்பட்ட திருமேனி "சக்தி நிறைந்தது" என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.

பழமையான கதைகளின்படி, மூல வரதராஜர் சிலை சேதமடைந்ததால், இந்த அத்தி மர மூர்த்தி நீரில் பாதுகாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி இந்த அத்திவரதர் ஆலயத் தெப்பக்குளமான அனந்த சரஸ் குளத்தில் நீரில் பாதுகாக்கப்பட்டு 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே 48 நாட்களுக்கு பொதுமக்கள் தரிசனத்திற்கு எடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2019-ல் வெளியே எடுக்கப்பட்டு முதல் 24 நாட்கள் சயன (படுக்கை) நிலையிலும் அடுத்த 24 நாட்கள் நின்ற நிலையிலும் தரிசனம் வழங்கினார். அப்போது தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தது பக்தர்களுக்கு மறக்க முடியாத நிகழ்வாகியது.

அந்தளவுக்கு ஆன்மீக சிறப்பு மிக்க காஞ்சி அத்திவரதரின் மறு பிம்பமாக சில வித்யாசங்களுடன் இருக்கிறார் கும்பகோணம் அத்திவரதர். காஞ்சிபுரம் அத்திவரதர் போல 40 வருடங்களுக்கு ஒரு முறை என்ற அரசு விதிப்படி இல்லாமல் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியில் எடுக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்பட்டு, மீண்டும் பாதாள அறைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

கும்பகோணம் பிரம்மன் கோயில் தெருவில் உள்ள வரதராஜப் பெருமாள் கோயிலில் மூலவர் சந்நிதிக்கு கிழக்கில் உள்ள பாதாள அறையில் அத்தி மரத்தாலான, சுமார் ஒன்றரை அடி உயரம் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி உடனாய அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீதேவி, பூதேவி உடன் காட்சி தரும் இந்த அத்திவரதர், ஸ்ரீதேவி மற்றும் பூதேவி தாயார்களுடன் அமைந்திருப்பதால் "திவ்ய தம்பதி தரிசனம்" என பக்தர்கள் கருதுகின்றனர்.சிலையின் பழமையை கருத்தில் கொண்டு, அது பாதாள  அறையில் அடித்தளத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இங்கு உள்ள அத்திவரதர், காஞ்சிபுரம் அத்திவரதர் போல 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியில் எடுக்கப்படுவது போன்ற வழக்கம் இல்லை. குறிப்பிட்ட சமயங்களில் மட்டுமே சிறப்பு பூஜைகள் நடைபெறுவதாகத் தகவல்கள் கூறுகின்றன.1915-ம் ஆண்டுக்குப் பின் பல்வேறு காரணங்களால் இந்த சிலை வெளியே எடுத்து வைக்கப்படவில்லை. 98 ஆண்டுகளுக்கு பிறகு 2013-ம் ஆண்டு இந்த சிலை வெளியே எடுக்கப்பட்டு, பக்தர்களின் தரிசனத்துக்காக வைக்கப்பட்டது. பின்னர் அந்த சிலை மீண்டும் பாதாள அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

இந்தநிலையில், 12 ஆண்டுகளுக்குப் பிறகு, ஸ்ரீதேவி, பூதேவி உடனாய அத்திவரதர் சிலை மார்ச் 1-ம் தேதி வெளியில் எடுக்கப்பட்டு, சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்பட உள்ளது. தொடர்ந்து, மார்ச் 10-ம் தேதி வரை இந்த சிலையை பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என்றும் அப்போது ஆகம விதிகளின்படி இந்திய நேரப்படி காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை சுவாமிக்கு தைலக்காப்பு, புஷ்ப சேவை, ஊஞ்சல் போன்ற சேவைகளை பக்தர்களே செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுவாக அத்திவரதரை தரிசனம் செய்தால் கல்வி, வேலை வாய்ப்பு முன்னேற்றம், குடும்ப நலன், நோய் பாதிப்பு நிவாரணம் என பல நன்மைகள் கிடைக்கும் என பக்தர்கள் நம்புவதால் இந்த கும்பகோணம் அத்திவரதரையும் தரிசிக்க திரளான பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *