தமிழ்ப்பள்ளியில் திருவள்ளுவர் சிலையை அகற்ற உத்தரவிடவில்லை! தவறான செய்திகளைப் பரப்பாதீர்! கல்வி இலாகா!
- Thinagaren Sanggaren
- 02 Dec, 2025
டிசம்பர் 2,
ஜொகூரில் உள்ள ஒரு தமிழ்ப்பள்ளியில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டதற்கு எதிராகக் கல்வி அமைச்சு, கல்வி இலாகா செயல்பட்டதாக வெளி வந்த செய்திகளில் எந்தவோர் உண்மையுமில்லை என ஜொகூர் மாநிலக் கல்வி இலாகா அறிக்கை வெளியிட்டுள்ளது. ஜொகூர் மாநிலக் கல்வி இலாகா தமிழ்ப்பள்ளியில் உள்ள சிலையை அகற்றும்படி எந்தவோர் உத்தரவையும் வெளியிடவில்லை என்றும் இது தொடர்பாகச் சம்மந்தப்பட்ட தரப்புகளிடையே பேச்சுவார்த்தை மேற்கொள்ளவிருப்பதாகவும் ஜொகூர் மாநிலக் கல்வி இலாகா தெரிவித்துள்ளது. பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் கற்பித்தலுக்கு இந்த தவறான கருத்துகளால் பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து தரப்பினரும் நடந்துகொள்ள வேண்டும் என்றும், இன மத உணர்வுகளையும் பிற சமூகங்களில் உணர்வுகளையும் மதிக்கும் தன்மையுடன் அனைத்து தரப்பினரும் செயல்பட வேண்டும் என ஜொகூர் மாநிலக் கல்வி இலாகா நினைவூட்டியுள்ளது.
முன்னதாகத் தமிழ் நாளிதழ் ஒன்றில் ஜொகூரிலுள்ள தமிழ்ப்பள்ளியில் உள்ள திருவள்ளுவர் சிலையை அகற்ற மாநிலக் கல்வி இலாகா நோட்டிஸ் அனுப்பியிருப்பதாகத் தெரிவித்த நிலையில் சமூக ஆர்வலர்கள் அந்த தமிழ்ப்பள்ளி செகாமாட் மாவட்டத்தில் உள்ள பள்ளி என கருத்துகளையும் கண்டனங்களைப் பதிவு செய்தனர். அதன் தொடர்ச்சியாக ஜொகூர் மாநிலத் தலைமையாசிரியர் மன்றத்தின் தலைவர் டோமினிக் சவரிமுத்து இது ஒரு தமிழ்ப்பள்ளியில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டதும் ஒரு சில தரப்பினர் மாவட்டக் கல்வி இலாகாவில் புகார் அளித்ததாகவும் கிடைக்க பெற்ற புகாரின் அடிப்படையில் மாவட்டக் கல்வி இலாகா சம்மந்தப்பட்ட பள்ளியிடமிருந்து விளக்கம் மட்டுமே கேட்கப்பட்டதாகவும் திருவள்ளுவர் சிலையை அகற்றுவதற்கான எந்தவோர் உத்தரவையும் கல்வி இலாகா வெளியிடவில்லை என்றும் ஜொகூர் மாநிலத் தலைமையாசிரியர் மன்றத்தின் தலைவர் டோமினிக் சவரிமுத்து விளக்கக் குரல் பதிவை வெளியிட்டார்.
இதன் தொடர்ச்சியாக இன்று காலை செகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் யுனேஸ்வரன் குறிப்பிடப்பட்ட தமிழ்ப்பள்ளி SEKIJANG நாடாளுமன்றத்தின் கீழ் இருப்பதாகவும் அதிலுள்ள இரு சட்டமன்ற உறுப்பினர்களும் இது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இப்படியான சூழலில் கல்வி அமைச்சர் fadhlina sidek-இன் சிறப்பு அதிகாரி Thiyagaraj Sankaranarayanan தவறான செய்திகளை வெளியிட வேண்டாம் என்றும் பொதுமக்களையும் இந்திய சமூகத்தையும் உணர்ச்சிவசப்பட வைக்கும் வகையில் தரவுகளற்ற செய்திகளை வெளியிட வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் மலாயாப் பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கையை இந்திய பிரதமர் மோடியின் விருப்பத்திற்கிணங்க அமைத்து அழகு பார்த்தவர் நமது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார். அதோடு, தற்போது தமிழகத்திலிருந்து சிறப்பு பேராசியர் ஒருவரும் திருக்குறள் இருக்கைக்காக நியமிக்கபப்ட்டுள்ளார். மேலும் திருக்குறளின் மேன்மை உணர்ந்ததால்தான் பட்ஜெட் உட்பட பல இடங்களில் திருக்குறளை உதாரணம் காட்டி பேசி வருகிறார் பிரதமர் அன்வார். எனவே, அரசு ஒருபோதும் திருக்குறளுக்கோ, திருவள்ளுவருக்கோ எதிராக செயல்பட்டதில்லை. தேவையில்லாமல் சுயநலத்திற்காக செய்தியை முழுமையாகத் தெரிந்துகொள்ளாமல் மக்களின் கவனத்தை திசைதிருப்ப வேண்டாம் என்று தியாகராஜ் சங்கரநாராயணன் கேட்டுக்கொண்டார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



