அவர் பெயரை சொல்வதே அவமானம் - ஈபிஎஸ் குறித்து ஓபிஎஸ் காட்டம்!
- Muthu Kumar
- 24 Dec, 2025
"எடப்பாடி பழனிசாமி என்கிற பெயரை சொல்வதே அவமானமாக இருக்கிறது. அவருக்கு தக்க பாடத்தை புகட்டுவோம். அதிமுகவில் இணையமாட்டோம்" என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம் சார்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று சென்னையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் பேசுகையில், "இந்த இயக்கத்தை எம்ஜிஆர் ஆரம்பித்து அவர்கள் உயிரோடு இருக்கும் வரை ஆட்சி கட்டிலில் இருந்தார்.
அவருக்கு பிறகு ஜெயலலிதா இந்த கட்சியை கட்டி காத்தார். அண்ணா திமுக என்ற பூ மாலை, குரங்கு கையில் மட்டியுள்ளது. எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை நாங்கள் அதிமுகவில் இணைய போவது இல்லை. ஓபிஎஸ் என்ன முடிவு எடுத்தாலும் அதன் வழியில் செல்ல தயார்" என்றார்.
தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர் செல்வம், "எம்ஜிஆர் அவர்களுக்கும், ஏழை எளிய மக்களுக்கும், காவல் தெய்வமாக நின்று கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்று முப்பது ஆண்டு காலம் இந்த இயக்கத்துக்கு உயிர் கொடுத்தவர் ஜெயலலிதா. இன்று கட்சி எந்த நிலையில் இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், 7 இடங்களில் டெபாசிட் தொகையை இழந்திருக்கிறது அதிமுக.
ஏழு நாடாளுமன்ற தொகுதிகள் என்றால் 42 சட்டமன்ற தொகுதிகள் வருகின்றன. எடப்பாடி பழனிசாமி என்ற பெயரை சொல்வதற்கு வெட்கமாக இருக்கிறது. அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்பதனால் தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் உருவாக்கப்பட்டது.
ஒற்றை தலைமை வேண்டும், பழனிசாமி சிறப்பாக கட்சி வழிநடத்திக் கொண்டிருக்கிறார், அவர் வந்தால் அனைத்து தேர்தலிலும் நம் மாபெரும் வெற்றி பெறுவோம் என்று சொன்னார்கள். மிகப்பெரிய மாயை உருவாக்கி, அதன் பின்னர் 11 தேர்தல்களில் பழனிசாமி பொதுச் செயலாளராக பதவி ஏற்ற பிறகு அதிமுகவுக்கு தோல்வியே மிஞ்சியது.
இந்த மாபெரும் இயக்கத்தை படு பாதாளத்தில் தள்ளியுள்ளனர். இதனால் தொண்டர்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் மனம் வெதும்பி தவிக்கின்றனர். அந்த நிலையை உருவாக்கிய பழனிச்சாமிக்கு வரும் காலங்களில் நாம் சரியான பாடத்தை புகட்ட வேண்டும். உங்களது கருத்துக்களை உணர்வுகளை நீங்கள் அனைவரும் தெரிவித்து இருக்கிறீர்கள், பல கூட்டங்களில் நம் பிரச்சனைகளை பேசி முடித்து விட்டோம். அதிமுகவில் ஒருபோதும் இணையமாட்டோம்" என தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



