நஜிப் வீட்டுக் காவல் மனு நிராகரிப்பு: மடானி அரசின் கொள்கையை உறுதிப்படுத்துகிறது
- Tamil Malar (Reporter)
- 23 Dec, 2025
புத்ராஜெயா, டிச. 23-
முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் தொடர்பான டிட்டா அடெண்டம் (அரச கூடுதல் உத்தரவு) விவகாரத்தில் நீதிமன்றம் நேற்று வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து, மடானி அரசு சட்டத்தின் ஆட்சி, அதிகாரப் பிரிவினை கொள்கைகளை உறுதியாகப் பின்பற்றுவதாக அறிவித்துள்ளது.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று வெளியிட்ட அறிக்கையில், நீதித்துறை எந்தவித வெளிப்புற தலையீடும் இன்றி முழுமையாக சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்றும், அதுவே அரசின் கொள்கை என்றும் வலியுறுத்தினார். "இந்தக் கொள்கையின் அடிப்படையிலேயே நீதிபதியின் தீர்ப்பை மதிக்கிறேன்" என்று அவர் கூறினார்.
நஜிப் ரசாக், SRC இன்டர்நேஷனல் ஊழல் வழக்கில் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் மன்னிப்பு வாரியத்தால் 6 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. ஆனால் வீட்டுக் காவலில் தண்டனை நிறைவேற்ற அனுமதிக்கும் கூடுதல் அரச உத்தரவு உள்ளதாகக் கூறி அவர் மனு தாக்கல் செய்திருந்தார். கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி அலிஸ் லோக் யீ சிங் நேற்று இந்த மனுவை நிராகரித்தார். அந்தக் கூடுதல் உத்தரவு மன்னிப்பு வாரியக் கூட்டத்தில் விவாதிக்கப்படவோ முடிவெடுக்கப்படவோ இல்லை என்பதால் அது செல்லாது என்று தீர்ப்பளித்தார்.
சட்டத்தின் இறையாண்மைக்கு ஏற்ப அனைவரும் நீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். இந்தத் தீர்ப்பு நீதித்துறையின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதாகவும், அரசு தலையீடு இல்லை என்பதை வெளிப்படுத்துவதாகவும் கருதப்படுகிறது. நஜிப் மேல்முறையீடு செய்யவுள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



