சபா சட்டமன்றத் தேர்தலில் தேமுவுக்கு புறநகர் தொகுதிகள்,பக்காத்தானுக்கு நகர்ப்புற தொகுதிகள்!
- Muthu Kumar
- 19 Aug, 2025
பொந்தியான், ஆக. 19-
இவ்வாண்டு இறுதியில் நடைபெற இருக்கும் சபா மாநில சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி புறநகர் தொகுதிகளிலும், பக்காத்தான் ஹராப்பான் நகர்ப்புறத் தொகுதிகளிலும் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டிருப்பதாக. அம்னோ உச்சமன்ற உறுப்பினர் அஹ்மாட் மஸ்லான் கூறியுள்ளார்.
சபா சட்டமன்றத் தேர்தலில் தேமுவும் பக்காத்தானும் தொகுதிகளை பங்கீடு செய்திருப்பது உறுதியாகி இருப்பதாகவும் இதன் தொடர்பான பேச்சுகள் மிக நேர்த்தியான முறையில் நடந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
"தேசிய முன்னணிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பதை என்னால் கூறமுடியாது. தேசிய முன்னணியின் உச்ச தலைமைத்துவமே அதை அறிவிக்கும் என்று. அஹ்மாட் கூறியதாக ஹரியான் மெட்ரோ தெரிவித்தது.
"நகர்ப்புறத் தொகுதிகள் பக்காத்தான் ஹராப்பானுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அங்கு ஜசெக அல்லது பிகேஆர் போட்டியிடலாம். தேசிய முன்னணி புறநகர் தொகுதிகளில் போட்டியிடும்' என்று ஜொகூரின் பொந்தியானில் அஹ்மாட் நேற்றுமுன்தினம் தெரிவித்தார்.
தொகுதிகள் பிரிக்கப்பட்டுவிட்ட காரணத்தினால், தேசிய முன்னணியும் அம்னோவும் முன்கூட்டியே தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றன. கடந்த 2020ஆம் ஆண்டில் நடந்ததைக் காட்டிலும் இம்முறை தேர்தல் முன்னேற்பாடுகள்
முறையாகவும் திட்டமிட்டபடியும் நடைபெறும் என்று அவர் கூறினார்.
சபா சட்டமன்றத் தேர்தல் தொடர்பில், தேசிய முன்னணிக்கும் பக்காத்தானுக்கும் இடையிலான தொகுதி ஒதுக்கீடு உறுதியாகி விட்டதாக, தேமு தலைவர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி நேற்றுமுன்தினம் கூறியிருந்தார்.
எனினும், தேசிய முன்னணிக்கும் காபுங்ஙான் ரக்யாட் சபாவுக்கும் (ஜி.ஆர்எஸ்) இடையில் தொகுதி ஒதுக்கீடு குறித்து எந்த ஒரு பேச்சும் நடத்தப்படவில்லை. மாநில அரசாங்கத்தில் இடம் பெற்றிருப்பதால் பக்காத்தான் ஹராப்பானும் ஜிஆர்எஸ்சும் அது குறித்து பேச்சுக்களை நடத்தும் என்று ஸாஹிட் தெரிவித்திருந்தார்.
சபா மாநில சட்டசபையின் ஐந்தாண்டு முழுத் தவணைக் காலம் வரும் நவம்பர் 11ஆம் தேதியோடு நிறைவடைய விருக்கிறது. அதற்கு முன்னதாகவேகூட சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படலாம்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



