கை, கண்ணைக் கட்டி 30 கி.மீட்டருக்கு கொண்டு சென்று சாலையோரத்தில் விடப்பட்ட டிரெய்லர் ஓட்டுநர்!
- Muthu Kumar
- 27 Oct, 2025
ரவூப், அக்.27-
பெந்தோங்கிலிருந்து ரவூப்பிற்கு 34 கி.மீட்டர் தூரத்திற்கு 3 ஆடவர்களால் கடத்திச் செல்லப்பட்ட 1 டிரெய்லர் ஒட்டுநர் கை, கண் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணிக்கு நிகழ்ந்த இச்சம்பவத்தில் தாமான் ஸ்ரீ வாவாசான் அருகிலுள்ள சாலை ஓரத்தில் 37 வயதுடைய ஆடவர் உதவி கேட்டுக் கத்தும் சத்தத்தை ஒருவர் கேட்டதாக ரவூப் மாவட்ட போலீஸ் தலைவர் எஸ்பி முகமட் ஷாரில் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
அதன் பிறகு ரோந்து போலீசார் 1 குழுவாகச் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்குச் சென்று மேல் நடவடிக்கைக்காக அவரை மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்குக் கொண்டு வந்தனர்.தொடக்கக்கட்ட விசாரணைப்படி டிரெய்லர் ஓட்டுநரான இவர் சிலாங்கூர், பலாக்கோங்கிலிருந்து கிளந்தான், குவா மூ சாங்கிற்கு இரும்புகளை ஏற்றிச் சென்று பிறகு பெந்தோங்-ரவூப் எல்லைப் பகுதியிலுள்ள உணவுக் கடையில் ஒய்வெடுத்துக் குளித்து உடையை மாற்றிக் கொள்வதற்காக நிறுத்தினார்.
குளித்த பிறகு அவரிடம் 3 ஆடவர்கள் வந்து கேபிள் வயரால் அவரைக் கட்டி காரினுள் கொண்டு சென்றனர்.1 மணி நேரத்திற்குப் பிறகு கருமை நிற ஒட்டும் நாடாவால் கண்ணை மூடி தாமான் ஸ்ரீ வாவாசானிலுள்ள சாலையோரத்தில் அவரை இறக்கி விட்டுச் சென்றனர்.இக்கும்பலின் முக்கிய நோக்கம் அந்த இரும்புக் கம்பிகளை ஏற்றி வந்த டிரெய்லரை எடுத்து தப்பிப்பதாகும் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
இவருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை. தற்போது அவர் நல்ல நிலையில் இருக்கிறார்.
இச்சம்பவம் 395ஆவது குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்படுவதாக ஓர் அறிக்கையில் எஸ்பி முகமட் ஷாரில் அப்துல் ரஹ்மான் குறிப்பிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



