பொது இடங்களில் குப்பை கொட்டினால் கடும் நடவடிக்கை! - ஜனவரி 1 முதல் அமல்
- Shan Siva
- 28 Dec, 2025
கோலாலம்பூர், disa 28: பொது இடங்களில் குப்பை வீசுபவர்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் வரும் 2026 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என வீடமைப்பு மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஙா கோர் மிங் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொது தூய்மை மற்றும் குடிமக்கள் பொறுப்புணர்வை வலுப்படுத்தும் நோக்கில், புதிய சட்டத்தை கடுமையாக அமல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பொது இடங்களில் குப்பை வீசும் யாராக இருந்தாலும் – வெளிநாட்டவர்கள் உட்பட – அவர்களுக்கு RM2,000 அபராதமும், 12 மணி நேர பொது தூய்மை பணியும் தண்டனையாக விதிக்கப்படும் என்று அவர் தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, நகரங்களின் தூய்மை என்பது அரசாங்கம் அல்லது உள்ளாட்சி அமைப்புகளின் பொறுப்பு மட்டும் அல்ல, அது பொதுமக்களின் கூட்டு பொறுப்பு என்றும் அமைச்சர் வலியுறுத்தியிருந்தார்.
நகர மையங்கள் மற்றும் பொது இடங்களில் தொடர்ந்து குப்பை வீசப்படுவது குறித்து அவர் வருத்தம் தெரிவித்தார்.
மலேசியா ஒரு மேம்பட்ட நாடாக மாறிக் கொண்டிருக்கிறது. மேலும் Visit Malaysia 2026 நிகழ்ச்சியை நடத்த உள்ள நிலையில், இத்தகைய பொறுப்பற்ற செயல்கள் நகரங்களின் மற்றும் நாட்டின் பெயருக்கு, குறிப்பாக சுற்றுலாப் பயணிகளிடையே, களங்கம் விளைவிக்கிறது என அவர் கூறினார்.
திருவிழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகளின் போது,குப்பைகளை முறையாக அகற்றி, சட்டத்தைப் பின்பற்றி, தூய்மையான, ஒழுங்கான நகரங்களை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



