மத்திய கிழக்கிலிருந்து அவசரமாக வெளியேறும் அமெரிக்க ராணுவம்!
- Muthu Kumar
- 21 Feb, 2026
மத்திய கிழக்கிலிருந்து அமெரிக்க படைகள் தற்போது அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு வருவதாக 'நியூயார்க் டைம்ஸ்' தெரிவித்திருக்கிறது.இதனால் மத்திய கிழக்கு முழுவதும் பதற்றம் அதிகரித்திருக்கிறது.
ஈரான் விஷயத்தில் அமெரிக்கா ரொம்பவும் கோபமாக இருக்கிறது. நிலைமை இவ்வாறு இருக்கையில், கத்தாரில் உள்ள, அமெரிக்காவின் 'அல் உதைத்' விமானப்படைத் தளத்திலிருந்து நூற்றுக்கணக்கான வீரர்கள் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள் என்று பென்டகன் தரப்பு தகவலை குறிப்பிட்டு நியூயார்க் டைம்ஸ் கூறியிருக்கிறது.
அதேபோல அமெரிக்க கடற்படையின் 5வது கடற்படை பிரிவு பஹ்ரைனில் நிலை நிறுத்தப்பட்டிருந்தது. இங்கிருந்தும் கடற்படை வீரர்கள் வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர். இந்த இரண்டு இடங்களில் இருந்து மட்டும் வீரர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு இருக்கின்றனர். மற்றபடி, ஈராக், சிரியா, குவைத், சவுதி அரேபியா, ஜோர்டன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமெரிக்க ராணுவ வீரர்கள் அதே இடங்களில் நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றனர்.
ஈரான் மீது அமெரிக்க எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தக்கூடும் என்று Axios செய்தி ஊடகம் தெரிவித்திருந்தது. இதை வைத்து பார்க்கும்போது, இந்த தாக்குதல் நடத்தப்பட்டால், பதிலுக்கு மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் தளங்கள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தும். இது குறித்து ஐநாவின் ஈரான் தூதர், வெளிப்படையாகவே எச்சரித்திருந்தார். எங்கள் நாட்டின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளம் நிச்சயமாக தாக்கப்படும் என்று கூறியிருந்தார்.
எனவே, இந்த தாக்குதலில் இருந்து தப்பிக்கவே மத்திய கிழக்கின் முக்கிய படைத்தளத்திலிருந்து ஆட்களை அமெரிக்கா பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்கிறது என்று சொல்லப்படுகிறது. ராணுவ வீரர்களை வெளியேற்றியது மட்டுமல்லாது மத்திய கிழக்கில் அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல் விமானங்கள் மற்றும் ஏவுகணை தடுப்பு அமைப்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கின்றன.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், மத்திய கிழக்கில் அமெரிக்காவுக்கு இருக்கும் ராணுவ தளங்களில் மிகப்பெரியது 'அல் உதைத்' விமானப்படைத்தளம்தான். இங்கு நூற்றுக்கணக்கான அமெரிக்க போர் விமானங்கள் நிலை நிறுத்தப்பட்டு இருக்கின்றன. அதேபோல, இரண்டாவது பெரிய ராணுவ தளம் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படையின் 5வது கடற்படை பிரிவுதான். இரண்டு இடத்திலிருந்தும் ராணுவ வீரர்கள் வெளியேற்றப்பட்டு இருப்பது சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
முன்னதாக மத்திய கிழக்கு நாடுகள், ஈரானை தாக்க எங்கள் வான் பரப்பை பயன்படுத்த கூடாது என அமெரிக்காவுக்கு சொல்லிவிட்டன. எனவே மத்திய கிழக்கில் உள்ள ராணுவ தளங்களிலிருந்து விமானங்களை ஏவி ஈரானை தாக்க முடியாது. எனவேதான், அமெரிக்க கடற்படை இந்த விஷயத்தில் களமிறக்கப்பட்டு இருக்கிறது.
தற்போது ஈரான் பக்கத்தில் அமெரிக்காவின் மிகவும் சக்தி வாய்ந்த போர் கப்பல்களான யுஎஸ்எஸ் ஜெரால்டு போர்டு மற்றும் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் போன்ற கப்பல்கள் நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றன. இந்த கப்பல்களை அணு குண்டு போட்டு மட்டுமே அழிக்க முடியும்.அதேபோல இந்த கப்பல்களிலிருந்து ஏவப்படும் ஏவுகணைகள் சர்வதேச வான் எல்லையை பன்படுத்தி ஈரானை தாக்கும். இந்த தாக்குல் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



