ஒப்பந்தத்தை மீறினால் மீண்டும் குண்டுவீச்சு; ஈரானுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை
- Surendran Sumdraraj
- 19 Jun, 2026
பிரான்ஸ், ஜூன் 19 –
ஈரானுடன் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் இறுதியானது அல்ல என்றும், அந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை ஈரான் மீறினால் அமெரிக்கா மீண்டும் ராணுவத் தாக்குதலைத் தொடங்கும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜி7 உச்சி மாநாட்டில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ஈரானுடனான ஒப்பந்தம் நிரந்தரமாக செயல்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். “ஒப்பந்தம் நிரந்தரமாக இருக்க வேண்டும். அது அவ்வாறு இல்லாவிட்டால் மீண்டும் குண்டுவீச்சு நடத்தப்படும்” என்று அவர் தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே சமீபத்தில் கையெழுத்தான 14 அம்சங்கள் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம், ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்தை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதையும், பதற்றத்தை குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இருப்பினும், அணுசக்தி திட்டம் மற்றும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் தொடர்பான முக்கிய விவகாரங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
இந்த ஒப்பந்தம் தற்போது அமலில் இருந்தாலும், அது முழுமையான அமைதி ஒப்பந்தமாக மாறுவதற்கு இன்னும் பல கட்ட பேச்சுவார்த்தைகள் அவசியம் என அமெரிக்க நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



