அக்மால் எதிர்காலம் குறித்து முடிவு அவரிடமே – ஜாஹிட் ஹமிடி
- Shan Siva
- 14 Jan, 2026
கோலாலம்பூர், jana 14: அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மால் சலே தொடர்பான கட்சிக்குள் உருவான விவகாரத்தில், அவருக்குத் தேவையான சிறந்த வழிகாட்டலும் ஆலோசனையும் வழங்கியுள்ளதாகவும், ஆனால் கட்சியில் அவரின் இடம் மற்றும் எதிர்கால திசை குறித்து முடிவெடுக்க முழு உரிமையும் அக்மாலிடமே விட்டுவிடுவதாகவும் அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
நேற்று புத்ரா உலக வர்த்தக மையத்தில் (PWTC) நடைபெற்ற சந்திப்பு முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜாஹிட், “அக்மாலுடன் நடந்த சந்திப்பு இப்போதுதான் முடிந்தது. அவருக்கு எனது சிறந்த ஆலோசனைகளை வழங்கியுள்ளேன். அவர் தனது முடிவை நாளை அறிவிப்பார்" என்றார்.
PWTC-யில் உள்ள டேவான் துன் ஹுசைன் ஓன் மண்டபத்தில் நடைபெற்ற அம்னோ பேட்ரியாட்டிக் பள்ளியின் நிகழ்வில் அவர் இந்தக் கருத்துகளை தெரிவித்தார்.
இதற்கு முன்னர், அக்மாலுடன் சந்திப்பு நடைபெறவுள்ளதாக ஜாஹிட் கூறியிருந்தாலும், அதன் விவரங்களை அவர் வெளியிடவில்லை.
ஆனால், அக்மால் தனது கட்சிப் பதவிகளிலும், மலாக்கா மாநில அரசுப் பதவிகளிலும் இருந்து விலகக்கூடும் என அவர் சமீபத்தில் தெரிவித்த கருத்துகளே இந்தச் சந்திப்பின் முக்கிய காரணமாக இருந்ததாக நம்பப்படுகிறது.
நேற்று, மெர்லிமாவ் சட்டமன்ற உறுப்பினருமான அக்மால், தன்னிடம் உள்ள பதவிகள் குறித்து ஜாஹிட் மற்றும் மலாக்கா முதலமைச்சர் அப்துல் ரஃபு யூசோஃப் எடுக்கும் எந்த முடிவையும் ஏற்றுக்கொள்வதாக் கூறியிருந்தார்.
மெர்லிமாவ் தொகுதியில் போட்டியிடவும், கிராமப்புற மேம்பாடு, விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு துறைகளுக்கான மாநில நிர்வாகக் குழு உறுப்பினராக செயல்படவும் அவர்கள் தன்னைத் தேர்வு செய்ததாக அக்மால் குறிப்பிட்டார்.
இந்த விவகாரத்தில் தனது மனநிலையை அப்துல் ரஃபுவிடம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



