சீனர்களின் ஆதரவைப்பெற மசீசவுக்கு இன்னும் சுமார் 10 ஆண்டுகளாகும்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 8-

எந்தக் கூட்டணியில் சேர்ந்தாலும் அல்லது எத்தகைய மாற்றங்களைச் செய்தாலும், சொந்த சமூகத்தினரின் ஆதரவைப்பெற மசீசவுக்கு இன்னும் சுமார் பத்து ஆண்டுகளாவது தேவைப்படும். இந்த பத்து ஆண்டு காலகட்டத்தில் சீனர்களின் ஆதரவை மசீசவினால் நிச்சயம் பெறமுடியாத நிலை தற்போதைக்கு நிலவுவதாக, தாஸ்மானியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் சின் என்ற அரசியல் ஆய்வாளர் கூறினார்.

நாடு சுதந்திரம் அடைந்தது முதல், பல ஆண்டுகளாக மசீச மூலமான தங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் போன காரணத்தினால், சீன சமூகத்தினர், கடந்த 2013ஆம் ஆண்டு முதல் தங்களின் ஆதரவை ஜசெக பக்கம் திருப்பி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்."சீனர்கள் முழுமையாக ஜசெக பக்கம் திரும்பி இருக்கின்றனர். இன்னும் 10 ஆண்டுகளுக்காவது அவர்கள் தங்களின் ஆதரவை ஜசெகவுக்கே வழங்கி வருவார்கள்.

"ஆதலால், ஜசெக என்ன செய்தாலும் இன்னும் பத்து ஆண்டுகளுக்கு சீனர்களின் ஆதரவை இழக்காது. ஜசெகவின் செயல்பாடுகள் சீனர்களின் ஆதரவை எந்த வகையிலும் பாதிக்கச் செய்தும் விடாது என்று எஃப்எம்டியிடம் சின் தெரிவித்தார்.தேசிய முன்னணியை விட்டு விலகி, சீன வாக்காளர்கள் மீது கவனம் செலுத்தக் கூடிய ஒரு சுயேச்சை எதிர்க்கட்சியாக மசீச தன்னை உருமாற்றிக் கொள்ள வேண்டும் என்று. சுங்கைபட்டாணி மசீச தொகுதித் தலைவர் செங் ஜூ சோய் அண்மையில் வெளியிட்டிருந்த அறிக்கை குறித்து கருத்துரைக்கும்போது சின் இவ்வாறு குறிப்பிட்டார்.

சுதந்திர போராட்டத்தில் அம்னோவின் பங்காளியாகவும் தேசிய முன்னணி உருவாக்கப்பட்டதில் முக்கிய பங்களிப்பையும் ஆற்றியிருந்த மசீச, நாடு சுதந்திரம் அடைந்தது முதல், அம்னோ தலைமையிலான தேசிய முன்னணி கூட்டணியின் நலனுக்கான முதன்மை குரலாக இருந்து வந்துள்ளது. ஆனால், கடந்த 2008ஆம் ஆண்டில் நாட்டில் அரசியல் சுனாமி ஏற்பட்டது முதல், அதன் செல்வாக்கு மோசமான நிலைக்குச் சரியத் தொடங்கியது. அதன் பின்னர், 2022ஆம் ஆண்டில் நடந்த 15ஆவது பொதுத் தேர்தலில் அது இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

ஆயர் ஈத்தாம் தொகுதியில் கட்சித் தலைவர் வீ கா சியோங்கும் தஞ்சோங் பியாய் தொகுதியில் அதன் உதவித் தலைவர் வீ ஜெக் செங்கும் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.இதனிடையே, மசீசவின் தோற்றப் பிரச்சினை, தேர்தல் செயல்திறன் அல்லது கூட்டணி சீரமைப்புக்கு அப்பாற்பட்டது என்று, சிங்கப்பூர் அனைத்துலக விவகார கல்விக்கழகத்தைச் சேர்ந்த ஓ இய் சுன் தெரிவித்தார்.

"பெரும்பாலான சீனர்களைப் பொறுத்த வரையில், மசீச சரி செய்ய முடியாத அளவுக்கு ஊழல் நிறைந்த ஒரு கட்சி என்று கருதுகின்றனர். அம்னோவில் நிகழ்ந்துள்ள ஊழல்களுக்கு எதிராக குரல் கொடுக்காமல் அமைதியாக இருந்து அம்னோவுக்கு அது அடிபணிந்திருப்பதாகவும் சீனர்கள் கருதுகின்றனர்” என்று அவர் கூறினார்.

ஜசெக குறித்து கருத்துரைத்த அவர், சீனர்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் ஜசெக வேறு வகையில் மிகவும் அமைதியாக இருப்பதாக சீனர்கள் மத்தியில் கருத்து நிலவுவதை  ஒப்புக் கொண்டார். "சீனர்களின் உரிமைகளை தற்காப்பதில் ஜசெக மெத்தனமாக இருப்பதைக் காணமுடிகிறது. ஆனால், இப்போதையை அரசாங்கம் தொடர்ந்து நீடித்திருப்பதை அது தற்காக்க வேண்டியுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.

சீனர்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் கெராக்கான் கட்சி பின்பற்றி வரும் போக்கை மசீசவினால் விஞ்ச முடியுமா என்று கேட்டபோது, பாஸ் கட்சியுடன் அது கூட்டுச் சேர்ந்திருப்பதால், அதன் நிலை தற்போது மிகவும் மோசமாக இருப்பதாக ஓ கூறினார்.

அதேவேளையில், சொந்த காலில் நிற்பதென்று முடிவு செய்து பாஸ் கட்சி குறிப்பாக பெரிக்காத்தான் நேஷனலிலிருந்து கெராக்கான் விலகினால், தேர்தலில் அதன் வேட்பாளர்கள் வைப்புத்தொகைகளை இழந்து விடுவார்கள் என்றும் பாஸ் மற்றும் அதன் இஸ்லாமிய நாடு திட்டத்திற்கு கெராக்கான் ஆதரவு வழங்கி வருவதால் சீனர்கள் சினமடைந்திருப்பதே இதற்கு காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.

சீனத் தலைவர்களை அதிக எண்ணிக்கையில் கொண்டிருக்கும் கெராக்கான், முன்பு தேசிய முன்னணியில் ஒரு பங்காளிக் கட்சியாக இருந்தது. ஆனால், கடந்த 2018ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அது படுதோல்வி அடைந்ததோடு, பினாங்கு மாநிலத்தையும் ஜசெகவிடம் பறிகொடுத்தது. அதன் பின்னர் அது பெரிக்காத்தான் நேஷனலில் இணைந்து, 2022ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தொகுதியை பெறுவதிலும் தோல்வியுற்றது.

Penganalisis politik, James Chin berkata MCA perlukan sekurang-kurangnya 10 tahun lagi untuk dapatkan semula sokongan masyarakat Cina. Sokongan kini kekal kepada DAP sejak 2013. MCA perlu ubah strategi, namun imej rasuah dan hubungan dengan UMNO sukar dipulihkan dalam masa terdekat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *