உதவித்தொகை பெற்ற சமையல் எண்ணெயும் ரோன்95 பெட்ரோலும் தாய்லாந்தில் சுதந்திரமாக விற்கப்படுகின்றன!
- Muthu Kumar
- 01 Nov, 2025
கோலாலம்பூர், நவ. 1-
மலேசிய அரசாங்கத்தின் உதவித்தொகை பெற்ற சமையல் எண்ணெயும்,ரோன்95 பெட்ரோலும் தென் தாய்லாந்தில் குறிப்பாக சுங்கை கோலோக்கில் கட்டுப்பாடின்றி சுதந்திரமாக விற்கப்பட்டு வருகின்றன. உள்நாட்டு வாணியம் மற்றும் வாழ்க்கைச் செலவினத்துறை அமைச்சின் விசாரணை இதை அம்பலப்படுத்தி இருப்பதாக, அதன் துணை அமைச்சர் ஃபூஸியா சாலே தெரிவித்துள்ளார்.
ரோன் 95 பெட்ரோல், திரவ பெட்ரோலிய எரிவாயு, சமையல் எண்ணெய், சீனி மற்றும் கோதுமை மாவு ஆகியவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ள ஒப்ஸ் திரிஸ் நடவடிக்கையின் கீழ், தமது அமைச்சு அமலாக்க நடவடிக்கையை மேற்கொண்ட பின்னர் இது அம்பலமாகி தனிமைப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு மையங்களில் அமைச்சின் அதிகாரிகள் கண்காணிப்புப் பணியில் அமர்த்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
"உதவித்தொகை வழங்கப்பட்டுள்ள பொருட்கள் முறைகேடாக பயன்படுத்தப்படுவதையும், கடத்தப்படுவதையும் துடைத் தொழிப்பதற்காக, இந்த நான்கு மாநிலங்களில் நாங்கள் கண்காணிப்பை மேற்கொண்டு வருவதோடு அமலாக்க நடவடிக்கைகளையும் கடுமையாக்கி இருக்கின்றோம்" என்று எஃப்எம்டியிடம் நேற்று வெள்ளிக்கிழமை அவர் தெரிவித்தார்.
பதினைந்து லட்சம் வெள்ளிக்கும் மேல் மதிப்புள்ள ரோன் 95 பெட்ரோல் கடத்தல் தொடர்பான 1,646 சம்பவங்கள் நாடு முழுமையிலும் நிகழ்ந்திருப்பது பதிவாகி இருக்கிறது.முப்பத்தாறு லட்சம் வெள்ளி மதிப்புள்ள சமையல் எண்ணெய் சம்பந்தப்பட்ட 829 சம்பவங்களும் பதிவாகி இருக்கின்றன.இவை அனைத்தும் கடந்த 2024ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் இம்மாதம் 3ஆம் தேதி வரையில் பதிவான சம்பவங்களாகும் என்றும் ஃபூஸியா தெரிவித்தார்.
இக்காலகட்டத்தில் அந்த நான்கு மாநிலங்களிலும் மொத்தம் 25,457 பரிசோதனைகள் நடத்தப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.இந்த நான்கு மாநிலங்களிலும் கிளந்தானில்தான் அதிக அளவில் சமையல் எண்ணெய்யும் ரோன் 95 பெட்ரோல் எண்ணெய்யும் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
உதவித்தொகை பெற்ற சமையல் எண்ணெய்யும் ரோன் 95 பெட்ரோலும் சுங்கை கோலோக் உட்பட தென் தாய்லாந்தில் பரவலாகக் கிடைக்கின்றன. அங்கு எந்த ஒரு கட்டுப்பாடுமின்றி ஒருவர் எவ்வளவு வேண்டுமானாலும் இப்பொருட்களை வாங்கவும் முடிகிறது
மலேசியாவில் ஒரு பாக்கெட் சமையல் எண்ணெய் 2 வெள்ளி 50 காசுக்கு விற்கப்படும் வேளையில், தாய்லாந்தில் அது 5 வெள்ளி 30 காசு முதல் 6 வெள்ளி 60 காசு வரையில் விற்கப்படுகிறது.மலேசியாவில் 1 வெள்ளி 99 காசுக்கு விற்கப்படும் ஒரு லிட்டர் ரோன் 95 பெட்ரோல், தாய்லாந்தில் 3 வெள்ளி 30 காசு முதல் 3 வெள்ளி 60 காசு வரையில் விற்கப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



