PAS-உடனான ஒத்துழைப்பு முடிந்ததால் மலாய் அல்லாத மக்களின் ஆதரவு அதிகரிக்கும் – முகைதீன் யாசின் நம்பிக்கை

top-news
FREE WEBSITE AD

நீலாய், ஜூலை 18: PAS-உடனான ஒத்துழைப்பு முடிவுக்கு வந்துள்ளதால், இனி மலாய் அல்லாத மக்களின் ஆதரவை அதிகம் பெற முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாக பெர்சாத்து தலைவர் முகைதீன் யாசின் தெரிவித்துள்ளார்.

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலுக்கான பெர்சாத்து வேட்பாளர்களை அறிவித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், PAS-உடன் இருந்த கூட்டணியே மலாய் அல்லாத மக்களின் ஆதரவைப் பெறுவதில் பெர்சாத்துவுக்குத் தடையாக இருந்ததாகக் கூறினார்.

PAS-இன் அரசியல் அணுகுமுறையைப் பற்றி பல மலாய் அல்லாத மக்கள் அச்சம் கொண்டிருந்ததால், பெர்சாத்துவுக்கு அவர்கள் முழுமையாக ஆதரவு அளிக்க தயங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

PAS-உடன் இனி இணைந்து செயல்படாததால், மலாய் அல்லாத மக்களும், PAS அரசியல் பாணியை விரும்பாத மலாய்க்காரர்களும் பெர்சாத்துவுக்கு ஆதரவு வழங்க வேண்டிய சரியான நேரம் இதுவே என்றும் முகைதீன் கூறினார். மேலும், நெகிரி செம்பிலான் தேர்தலில் பெர்சாத்து சார்பில் மலாய் அல்லாத வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருப்பது, கட்சி தற்போது சுயாதீனமாக செயல்படுவதைக் காட்டுகிறது என்றார்.

அதேவேளை, புதிய அரசியல் கூட்டணியை அமைக்கும் முயற்சியில் இருந்தாலும், பெர்சாத்து இன்னும் பெரிக்காத்தான் நேஷனல் (PN) கூட்டணியின் உறுப்பினராகவே உள்ளது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில், PAS மற்றும் பாரிசான் நேஷனல் (BN) தேர்தல் உடன்பாட்டை எட்டியுள்ள நிலையில், BN 25 தொகுதிகளிலும், PN 11 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இதேவேளை, பெர்சாத்து தனது சொந்த சின்னத்தில் 24 வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *