தலைவர் 173 படத்திலிருந்து சுந்தர்.சி விலகல்!
- Muthu Kumar
- 14 Nov, 2025
சில நாட்களுக்கு முன்பு, ரஜினிகாந்த் - கமல்ஹாசன் இணையும் படத்தின் அறிவிப்பு வெளியானது.இதற்கு தலைவர் 173 என்று தற்போதைக்கு டைட்டில் வைக்கப்பட்டிருந்தது. இந்த படத்தை சுந்தர்.சி இயக்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இதிலிருந்து தான் விலகுவதாக அவரே அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், கனத்த இதயத்துடன் இந்த பதிவை வெளியிடுவதாகவும், எதிர்பாராத மற்றும் தவிர்க்க முடியாத காரணங்களினால் தலைவர் 173 படத்திலிருந்து விலகுவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
இதற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்துள்ளார். ரஜினி, கமல், சுந்தர்.சி கூட்டணி குறித்த அறிவிப்பு 4 நாட்களுக்கு முன்புதான் வெளியானது. அதற்குள்ளாக அவர் இப்படியொரு முடிவெடுக்க காரணம் என்ன என்பது குறித்து ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
"கனத்த இதயத்தோடு முக்கியமான செய்தியை உங்களுடன் பகிர்கிறேன். எதிர்பாராத மற்றும் தவிர்க்க முடியாத சூழல் காரணமாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தலைவர் 173 படத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். இந்த படம், உலகநாயகன் கமல்ஹாசனின் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாக இருந்தது. இது, நான் பலநாள் கண்ட கனவு போல இருந்தது.
சில நேரங்களில் நம் கனவுகளில் இருந்து விலகினாலும், விதி நமக்காக அமைத்த பாதையை பின்பற்ற வேண்டிய தருணங்கள் வரும். ரஜினி-கமலுடனான எனது தொடர்பு நீண்ட காலமாக உள்ளது. அவர்கள் மீது மிகுந்த மதிப்பு வைத்துள்ளேன். கடந்த சில நாட்களில் அவர்களுடன் பகிர்ந்த தருணங்கள் பொக்கிஷமான நினைவுகளாக இருக்கும். எனக்கு அவர்கள் வாழ்க்கை பாடங்களை கற்பித்துள்ளனர்.
இந்த வாய்ப்பிலிருந்து விலகுகிறேன் என்றாலும், அவர்களின் வழிகாட்டுதலை எப்போதும் நாடுவேன்.இந்த செய்தி எதிர்பார்ப்புடன் இருந்தவர்களை ஏமாற்றி இருந்தால் அவர்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்" என்று இயக்குனர் சுந்தர்.சி குறிப்பிட்டிருக்கிறார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



