சிறப்புமிக்க பசுமைக் கொடி' விருதைப் பெற்றது சுங்கை பட்டாணி சரஸ்வதி தமிழ்ப்பள்ளி!
- Muthu Kumar
- 31 Aug, 2025
சுங்கை பட்டாணி, ஆக 31-
உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ECO SCHOOLS திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மிக உயர்ந்த GREEN FLAG எனப்படும் சிறப்புமிக்க பசுமைக் கொடி விருதை, கெடா மாநிலத்தில் பெறும் முதல் தமிழ்ப்பள்ளியாக சுங்கை பட்டாணி சரஸ்வதி தமிழ்ப்பள்ளி விளங்குகிறது.
தீபகற்ப மலேசியாவைப் பொறுத்தவரை
இயற்கையோடு ஒன்றித்து, பசுமை திட்டத்தின் கீழ் உயரிய விருதைப் பெறும் இரண்டாவது தமிழ்ப்பள்ளியாகவும் இப்பள்ளி இடம்பெற்றுள்ளது.ஆசிரியை அனிதா லெட்சுமணியின் பொறுப்பில் கடந்த மூன்று ஆண்டுகளாக, பல்வேறு பசுமைத் திட்டங்கள் பள்ளியில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தன.
குறிப்பாக, மலேசிய கல்வித் திட்டத்தின் வரையறைக்கு உட்பட்டு கற்றல் கற்பித்தலில் இயற்கையைப் பாதுகாக்கும் அமைப்பு முறை குறித்து. மாணவர்களுக்கு வலியுறுத்தப்பட்டதன் விளைவாக இந்த வெற்றி சாத்தியமாகி உள்ளதாக பள்ளியின் தலைமையாசிரியர் ஜெயசந்திரன் மாரிமுத்து தெரிவித்தார். "தொடர்ந்து நடைபெற்ற பசுமை ஆய்வுகள். மாணவர்கள் முன்னிலை வகுத்த திட்டங்கள், ஆகியவற்றுடன் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் ஆகியோரின் கூட்டு முயற்சியின் பயனாகவும் இந்த வெற்றி அமைந்துள்ளது.
இதை ஒரு விருதாக மட்டுமின்றி சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பள்ளியின் உறுதிப்பாட்டையும் இது பிரதிபலிக்கின்றது. அவற்றுடன் பொறுப்பையும் குறிக்கின்றது." கூறினார்.பயன்படுத்தப்பட்ட எண்ணெய், மறுசுழற்சி பொருட்கள் என்று மொத்தம் 1,450 டன் பொருட்கள் சேகரிக்கப்பட்டு உள்ளதோடு, மழைநீர் சேகரிப்பு, விவேக விவசாயத்திலும் பள்ளி புதிய புரட்சியைப் படைத்திருந்ததாக பொறுப்பாசிரியர் அனிதா லெட்சுமணி கூறினார்.
இவற்றைத் தவிர்த்து, பசுமை திட்டத்தின் கீழ் மின்சார சேமிப்பு, சுயமாக மண் உரம் தயாரிப்பு, பழைய பொருட்களுக்குப் புத்துயிர்,
தொழில்நுட்ப வேளாண்மை ஆகிய திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றி பெற்றுள்ளதாக அவர் விவரித்தார்.
"அனைவரின் கூட்டுமுயற்சியாலேயே பள்ளிக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. இப்பள்ளியைப் பார்த்து மற்ற பள்ளிகளும் பசுமைத் திட்டத்தை ஊக்குவிக்க வேண்டும் என்பது என் ஆவலாகும்" என்றார் அவர்.
சரஸ்வதி தமிழ்ப்பள்ளியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ECO SCHOOL ஆய்வுக்குப் பின்னர், அதன் பொறுப்பதிகாரிகள் இவ்விருதை பள்ளிக்கு வழங்கி கெளரவித்தனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



