தமது மனைவி ஷிஷி வெ.28 லட்சம் பெற்றது தமக்குத் தெரியாது-புங் மொக்தார் சாட்சியம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப். 3-

தமது மனைவி ஷிஷி இஷெத்தே அப்துல் சமாட் கடந்த 2015ஆம் ஆண்டில் இரண்டு யூனிட் டிரஸ்ட் முகவர்களிடம் இருந்து 28 லட்சம் வெள்ளியைப் பெற்றது தமக்குத் தெரியாது என்று, சபாவின் கினாபாத்தாங்ஙான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ புங் மொக்தார் ராடின் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.

அப்பணத்தைப் பெற்றது குறித்து, முன்னாள் நடிகையுமான தமது மனைவி தம்மிடம் எதுவும் தெரிவிக்கவில்லை என்று. 66 வயதுடைய புங் மொக்தார் தமது சாட்சியத்தில் தெரிவித்தார்.
"கடந்த 2016 அல்லது 2017ஆம் ஆண்டில். மலேசிய லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) விசாரணைக்கு உதவ வருமாறு நான் அழைக்கப்படும் வரையில் இந்த விவகாரம் குறித்து யாரும் என்னிடம் தெரிவிக்கவில்லை என்று அவர் கூறினார்.

மொத்தம் 28 லட்சம் வெள்ளி சம்பந்தப்பட்ட ஒரு லஞ்ச ஊழல் வழக்கில் தமது தற்காப்பு வாதத்தின் முதல் நாளான நேற்று செவ்வாய்க்கிழமை, நீதிமன்றத்தின் தமது சாட்சி அறிக்கையை புங் மொக்தார் வாசித்தார்.

கோலாலம்பூரில் உள்ள தாமான் மெலாவாத்தி பப்ளிக் வங்கியில், கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் தேதி நோர்ஹைலி அஹ்மாட் மொக்தார் மற்றும் மட்ஹி அப்துல் ஹமிட் ஆகியோரிடமிருந்து 22 லட்சம் வெள்ளியை தமது மனைவி ஷிஷி பெற்ற விவகாரம் தமக்குத் தெரியாது என்று அவர் கூறினார்.

அதோடு, கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் 17ஆம் தேதி முதலீட்டு கணக்குகள் மூலம் நோர்ஹைலியிடமிருந்து 3 லட்சத்து 37 ஆயிரத்து 500 வெள்ளியையும் மட்ஹிடமிருந்து 2 லட்சத்து 62 ஆயிரத்து 500 வெள்ளியையும் ஷிஷி பெற்றதும் தமக்குத் தெரியாது என்று புங் மொக்தார் தெரிவித்தார்.நோர்ஹைலி மற்றும் மட்ஹிடமிருந்து 28 லட்சம் வெள்ளியைப் பெறுமாறு ஷிஷி இஷெத்தேவுக்கு தாம் உத்தரவிட்டதாக அல்லது கேட்டுக் கொண்டதாகக் கூறப்பட்டதை அவர் மறுத்தார்.

மொத்தம் 15 கோடி வெள்ளிக்கு யூனிட் டிரஸ்டில் முதலீடு செய்ய ஃபெல்க்ரா நிறுவனத்திற்கு நிதி அமைச்சின் இன்கோப்பரேட் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.பப்ளிக் மியூச்சுவல் யூனிட் டிரஸ்டில் ஃபெல்க்ரா செய்யும் முதலீட்டிலிருந்து நோர்ஹைலிக்கும் மட்ஹிவுக்கும் கமிஷன் பணம் ஏதும் கிடைக்குமா என்பது குறிப்பிட்ட அளவுக்கு தமக்குத் தெரியாது என்றும் புங் மொக்தார் தெரிவித்தார்.

பப்ளிக் மியூச்சுவல் நிறுவனத்தில் முதலீடு செய்வதற்காக நிதி அமைச்சின் அனுமதி கிடைப்பதை விரைவுபடுத்தினீர்களா என்று தற்காப்பு தரப்பு வழக்கறிஞர் எம். ஆதிமூலம் கேள்வி கேட்டபோது. தாம் அவ்வாறு செய்யவில்லை என்று புங் மொக்தார் பதிலளித்தார்.ஃபெல்க்ரா தலைவராக இருந்தபோது, அதிகாரப்பூர்வ ஃபெல்க்ரா பணி குறித்து உங்கள் மனைவி ஷிஷியுடன் கலந்து பேசியிருக்கின்றீர்களா என்ற மற்றொரு கேள்விக்கு, அப்படி பேசியது கிடையாது என்று அவர் பதிலளித்தார்.

பப்ளிக் மியூச்சுவல் யூனிட் டிரஸ்டில் 15 கோடி வெள்ளி முதலீடு செய்ய ஃபெல்க்ராவின் அங்கீகாரத்தைப் பெற்றதற்கு கைமாறாக, 22 லட்சம் வெள்ளியையும் 2 லட்சத்து 62 ஆயிரத்து 500 வெள்ளியையும் லஞ்சமாக பெற்றதாக, அப்போது ஃபெல்க்ராவின் அதிகாரமற்ற தலைவராக இருந்த புங் மொக்தார் மீது, கடந்த 2019ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் தேதி நண்பகல் 12.30 மணிக்கும் மாலை 5 மணிக்கும் இடையில், கோலாலம்பூரில் உள்ள தாமான் மெலாவாத்தி பப்ளிக் வங்கிக் கிளையில், ஷிஷி இஷெத்தே மூலம் பப்ளிக் மியூச்சுவல் யூனிட் டிரஸ்ட் முகவர்கள் நோர்ஹைலி மற்றும் மட்ஹிடமிருந்து அந்த லஞ்சப் பணத்தைப் பெற்றதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

அதே ஆண்டில், மாதத்தில், நாளில் மற்றும் இடத்தில் இந்த விவகாரம் குறித்து தமது கணவரை தூண்டி விட்டதாக ஷிஷி இஷெத்தே மீது மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.நீதிபதி ரோஸ்லி அஹ்மாட் முன்னிலையில் நேற்று தொடங்கிய இவ்விசாரணை இன்று தொடரும்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *