துங்கு பங்லீமா பெசார் இடைநிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் ஒன்றுகூடல்!
- Muthu Kumar
- 10 Oct, 2025
(கே.ஆர். மூர்த்தி )
கூலிம், அக்.10-
கூலிம் துங்கு பங்லீமா பெசார் இடைநிலைப்பள்ளியில் படித்த முன்னாள் இந்திய மாணவர்கள் ஒன்று கூடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் 40க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.
1974 ஆம் ஆண்டிலிருந்து 1979 ஆண்டு வரை இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் அனைவரும் பினாங்கு மாநிலத்தில் பத்து பிரிங்கியில் அமைந்துள்ள பிரதான தங்கும் விடுதியில் ஐந்தாம் ஆண்டாக இச்சந்திப்பை நடத்தினார்கள்.
இந்த நிகழ்விற்கு முன்னாள் மாணவர் ராஜூ ஏற்பாட்டுக்குழு தலைவராகவும் அவருக்கு துணையாக செயலாளர் எஸ். பி. விஜயன் மற்றும் முன்னாள் மாணவரும் பணி ஓய்வு பெற்ற முன்னாள் போலீஸ் அதிகாரியுமான மாரியப்பன் ஆகியோர் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்துள்ளனர்.
அவர்களுக்கு பல்வேறு வகையில் பல உதவிகளை கெடா மாநில கராத்தே கழகத்தின் தலைவரும் முன்னாள் மாணவருமான மாஸ்டர் ஸ்டாலின் சவரிமுத்து மற்றும் எம். குருசிங்கம் துணைக்குழுவில் இருந்து செயல்பட்டார்கள். பள்ளிப்பருவத்தை முடித்து பல திசைகளுக்கு சென்ற இம்மாணவர்கள் நாடு தழுவிய நிலையில் (வட மலேசியாவிலிருந்து தெற்கு மலேசியா வரை) முன்னாள் மாணவர்கள் 40க்கும் மேற்பட்டவர்கள் இச்சந்திப்பில் கலந்து கொண்டார்கள்.
தமிழ்ப்பள்ளி மற்றும் மலாய் பள்ளிகளிலிருந்து இடைநிலைப்பள்ளிக்கு சென்ற இம்மாணவர்கள் தமிழுக்கு முதல் மரியாதை செய்யும் பொருட்டு இந்த நிகழ்வு தமிழ் வாழ்த்தோடு தொடங்கியது.தமிழ் வாழ்த்துக்கு பிறகு இறைவனடி சேர்ந்த சில முன்னாள் மாணவர்களுக்காக ஒரு நிமிடம் அஞ்சலிசெலுத்தப்பட்டு, ஏற்பாட்டுக்குழு தலைவரின் வரவேற்புரை யோடு இந்நிகழ்வு அதிகாரப் பூர்வமாக தொடங்கியது.
நாடு தழுவிய நிலையிலிருந்து வருகை தந்த இவர்கள் அனைவரும் கடந்த பள்ளிக்கால நினைவுகளையும் இன்றைய நிலையில் தங்கள் குடும்ப சூழ்நிலையை பகிர்ந்து கொண்டார்கள். இதில் இன்பத்தோடு துன்பங்களும் கலந்திருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
மேலும் இந்த நிகழ்விற்கு வருகை தந்த அனைவருக்கும் இச்சந்திப்பின் அடையாளமாக நினைவுச் சின்னங்களை வழங்கி தங்களின் அன்பையும் பாசத்தையும் இன்முகத்தோடு பகிர்ந்துகொண்டார்கள்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



