மனசாட்சி - சிறுகதை
- THINAGAREN SANGGAREN
- 16 Jul, 2026
மனசாட்சி
கண்ணாடி மாளிகையில் வாழ்பவர்களின் கண்ணீரும் கூட வைரத்தைப் போலத்தான் பிரகாசிக்கும்
என்று நினைக்கிறது இந்த உலகம். ஆனால், அந்த மாளிகைக்குள்
இருக்கும் இருட்டு, வெளியில் உள்ளவர்களுக்குத் தெரிவதில்லை.
அகிலாவின் வாழ்க்கையும் அப்படித்தான்தொடங்கியது. அகிலா... பெயரைக் கேட்டாலே ஒரு கம்பீரம்
தெரியும். கோடீஸ்வரக் குடும்பத்தின் ஒரே வாரிசு. பிறந்தது முதல் அவளுக்கு என்னவெல்லாம் வேண்டும் என்று அவள் நினைத்தாளோ,
அத்தனையும் நொடிப் பொழுதில் அவள் காலடியில் வந்து விழுந்தன.
அவளது வாழ்க்கையில் எந்த ஒரு கஷ்டமும் இருந்ததில்லை. வறுமை என்ற சொல்லின் அர்த்தமே அவளுக்குத் தெரியாது. அவளது அழகும், குணமும் பலரைக் கவர்ந்தாலும்,
அவள் தன் பெற்றோர் பார்த்த அந்த வரனைத்தான் ஏற்றுக்கொண்டாள்.
அவனும் ஒரு பெரிய கோடீஸ்வரன் தான். அகிலாவை
அவனுக்குத் துணையாக அடைந்ததில் அவனுக்கு அத்தனை பெருமை. இருவருக்கும்
திருமணம் நடந்து, வாழ்க்கை ஒரு அழகான நந்தவனமாகப் போய்க்கொண்டிருந்தது.
ஆனால், அந்த நந்தவனம் வெறும் நான்கு மாதங்கள்
மட்டுமே பூத்துக் குலுங்கும் என்று அகிலா கனவிலும் நினைக்கவில்லை. விதி ஒரு கொடூரமான விபத்தின் வடிவில் வந்தது. அகிலாவின் கணவன் அந்த விபத்தில் மரணமடைந்தான்.
நான்கே மாதங்களில் அவளது நெற்றிக் குங்குமம் கலைந்து போனது.
அந்த விபத்து அவளது கணவனின் உயிரை மட்டும் பறிக்கவில்லை, அவளது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டது.
நேற்று வரை அவளைப் போற்றிப் புகழ்ந்த அதே சொந்த பந்தங்கள்,
அடுத்த கணமே அவளை ஒரு 'ராசி இல்லாதவள்'
என்று முத்திரை குத்தினார்கள். "ஏண்டி! இப்படி வந்து நின்னுகிட்டு
இருக்கே? என் மகனை நீதான் முழுங்கிட்ட! உனக்குத்தான் புள்ள பாக்கியமே இல்லை... ஏன் இங்க
வந்து சாவடிக்கிற? என் மகனுக்கு இப்பதான் இத்தனை வருஷம் கழிச்சு,
உன்னால வந்த கெட்ட விஷயங்கள் எல்லாம் விலகி, நல்ல காலம் பிறக்கப்போகுது. என்னோட மருமகள் கர்ப்பமா
இருக்கா... அவளுக்கு வளைகாப்பு நடத்துற இடத்துல நீ எதுக்கு
வந்து நிக்கிற? அவளோட கணவனுக்கும் உன்னை மாதிரி ராசி இல்லாம
போயிட போகுது! போ... இங்கிருந்து
போயிரு!"
அகிலாவின் முன்னாள் மாமியார் அவளை வீட்டை விட்டு துரத்தாத குறையாகப்
பேசினாள். வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஈட்டியாக அவளது இதயத்தைத்
துளைத்தன.கண்ணீர் அவளது கண்களைக் குளமாக்கியது. "நான் யார்கிட்ட போய் கேட்பேன்? எனக்கு ஏன் இந்த
நிலைமை?" என்று அவள் கதறினாள். ஆனால், அவளது கண்ணீரைத் துடைக்க அங்கு யாரும் இல்லை.
அவளது சொந்த அம்மாவே அவளுக்கு ஆறுதலாக இல்லை. "அகிலா, நீ ஏன் இப்படி எல்லாரையும்
போன் பண்ணி தொந்தரவு பண்ற? நீதான் ராசி இல்லாதவளாச்சே...
நாங்க என்ன செய்ய முடியும்? அதனால்தான் எல்லாரும்
உன்னை ஒதுக்குறாங்க. உனக்கு எப்ப கல்யாணம், எப்ப கல்யாணம்னு எல்லாரும் என்கிட்ட கேட்கும்போது எனக்கு எப்படி இருக்கும்?
உனக்கு மறுபடியும் ஒரு கல்யாணம் பண்ணி வச்சாலும், அவனும் உன்னால மேல போயிருவான் போல... நல்லா இருக்குற
பையனும் உன்னால அழிஞ்சுடக் கூடாதுல்ல?" என்று பெற்ற தாயே
முகத்தில் அடித்தாற்போல் பேசினாள்.
ஒரு பெண்ணாக, ஒரு விதவையாக இந்தச் சமுதாயத்தில்
வாழ்வது எவ்வளவு நரகம் என்பதை அகிலா ஒவ்வொரு நொடியும் உணர்ந்தாள். எந்த ஒரு சுப நிகழ்ச்சியிலும் அவளுக்கு அனுமதியில்லை. ஒரு குழந்தையைத் தொடப் போனால் கூட, "அவள்
ஒரு விதவை, ராசி இல்லாதவள்" என்று குழந்தையைப் பிடுங்கிக் கொண்டு ஓடினார்கள். காசு, பணம் அத்தனையும் இருந்தும், அவளுக்கு ஒரு பெண்ணுக்கான மரியாதையோ, நிம்மதியோ
கிடைக்கவில்லை.
காலங்கள் ஓடிக்கொண்டிருந்தன. ஒரு நாள்,
அவளது தொலைபேசி ஒலித்தது.
"ஹலோ, அகிலா... நான் கார்த்திக் பேசுறேன். உங்க கணவரோட பிரண்ட்.
அவரோட பிசினஸ் விஷயமா சில விபரங்கள் உங்ககிட்ட பேசணும். நாளைக்கு நம்ம ஒரு இடத்துல மீட் பண்ணலாமா?" அந்தக் குரலில் ஒரு மென்மை இருந்தது. அகிலாவும்
வேறு வழியின்றி சம்மதித்தாள். மறுநாள் அவர்கள் சந்தித்தனர்.
கார்த்திக் மிகவும் நாகரீகமாக, அன்பாகப்
பேசினான். பிசினஸ் விஷயங்களை விவரித்தவன், கடைசியாக அவளிடம் கேட்டான்: "என்ன அகிலா,
சாப்டீங்களா? உடம்பை நல்லா பார்த்துக்கிறீங்களா?"
அந்த ஒரு கேள்வி... "சாப்டீங்களா?"
என்ற அந்த சாதாரண வார்த்தை, அகிலாவின் வறண்ட
இதயத்தில் மழையாகப் பொழிந்தது. அவளது கணவன் மறைந்த பிறகு,
அவளது நலம் குறித்து யாரும் அப்படி அக்கறையாகக் கேட்டதே இல்லை.
கார்த்திக்கின் அந்த ஆறுதலான வார்த்தைகள் அவளுக்குள் ஒரு புதிய நம்பிக்கையை
விதைத்தன.
அவர்களின் சந்திப்புகள் தொடர்ந்தன. பிசினஸ் நிமித்தமாகத் தொடங்கிய
நட்பு, மெல்ல மெல்ல அன்பாக மாறத் தொடங்கியது. கார்த்திக் அவளிடம் காட்டிய அக்கறையும், பாசமும்
அவளைப் பைத்தியமாக்கியது. சமுதாயத்தால் ஒதுக்கப்பட்ட அவளுக்கு,
கார்த்திக் ஒரு பெரும் நிழலாகத் தெரிந்தான்.
ஒரு நாள், ஒரு காபி ஷாப்பில் அமர்ந்திருந்தபோது,
அகிலா தன் தலையில் கை வைத்துக்கொண்டு, "கார்த்திக், நான் ஒரு ராசி இல்லாதவள். என்னோட சேர்ந்தா உங்க வாழ்க்கையும்..." என்று
இழுத்தாள்.
கார்த்திக் அவளது கைகளைப் பற்றிக்கொண்டான். "அகிலா! இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும்,
நான் உன் கூடத்தான் இருப்பேன். நீ ராசி இல்லாதவள்
இல்லை, என் வாழ்க்கையின் அதிர்ஷ்டம். உனக்கு என்ன வேணுமோ, அதை நான் உனக்குக் கொடுப்பேன்"
என்று காதலைக் கொட்டினான்.
அவள் நினைத்ததை விட அவளது வாழ்க்கை சந்தோஷமாகப் போய்க்கொண்டிருந்தது.
இருந்தாலும், அவளுக்குள் ஒரு பயம் இருக்கத்தான்
செய்தது.
அன்று ஒரு அமைதியான இரவு. இருவரும் ஒரு அழகான
உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு, வெளியே நடந்து வந்துகொண்டிருந்தனர்.
மெல்லிய குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தது. அந்தச் சூழல் அவர்களுக்குள் இருந்த காதலை இன்னும் அதிகமாக்கியது.
குடும்பத்தினரால் ஒதுக்கப்பட்ட இடத்தில், கார்த்திக் அவளுக்கு ஒரு முழு மனிதனாக, உறுதுணையாக
nன்றான். அகிலாவும் அவனை முழுமையாக நம்பினாள்.
அங்கு, அவர்களின் காதல் எல்லையைக் கடந்தது.
உணர்ச்சிகளின் வேகத்தில், அவர்கள் தங்களுக்குள்
இருந்த கட்டுப்பாட்டை இழந்தனர். திருமணம் ஆகும் முன்பே,
அவர்கள் ஒரு தகாத உறவில் இணைந்தனர்.
மறுநிமிடம், அகிலாவிற்குள் ஒரு பெரும் பதற்றம்
தொற்றிக்கொண்டது. "கார்த்திக்... நாம என்ன பண்ணிட்டோம்? இது தப்பு இல்லையா?"
என்று கண்களில் கண்ணீருடன் கேட்டாள்.
கார்த்திக் அவளது கண்களை நேராகப் பார்த்து, "அகிலா, பதற்றப்படாதே. இந்த உலகமே அழிந்தாலும் நான் உன்னை விட்டுப் போக மாட்டேன். நீதான் என் உசுரு. நீ இல்லாம நான் என்னைக்கும்
இருக்க மாட்டேன். நான் கண்டிப்பா உன்னைத் திருமணம் பண்ணிப்பேன்.
இது உன்னோட உணர்வுகளின் வெளிப்பாடு தான், தப்பில்லை. என்னை நம்பு" என்று அவளது நெற்றியில் முத்தமிட்டு, சத்தியம்
செய்தான்.
அவளது பயம் நீங்கியது. கார்த்திக்கின் வார்த்தைகளை
நம்பி, அவள் அந்த இன்பத்தில் திளைத்தாள். நாட்கள் நகர்ந்தன.
சில வாரங்களுக்குப் பிறகு, அகிலாவிற்குள்
ஒரு மாற்றம் தெரிந்தது. அவளது மாதவிடாய் தள்ளிப் போனது.
பதற்றத்துடன் அவள் மருத்துவப் பரிசோதனை செய்து பார்த்தாள்.
அவள் கர்ப்பமாக இருந்தாள்!
மகிழ்ச்சியும் பயமும் ஒருசேர, அவள் உடனே
கார்த்திக்கிற்குத் தொடர்பு கொண்டாள். ஆனால், அவன் போனை எடுக்கவில்லை. பலமுறை முயற்சித்த பிறகு,
அவன் போனை எடுத்து, "நான் பிஸியா இருக்கேன்,
அப்புறம் பேசுறேன்" என்று சுருக்கமாகக்
கூறி இணைப்பைத் துண்டித்தான்.
அகிலாவிற்கு ஏதோ தவறாகப் பட்டது. அவளது நெஞ்சம்
படபடவென அடித்துக்கொண்டது. உடனே அவளது காரை எடுத்துக்கொண்டு
கார்த்திக்கின் வீட்டிற்குச் சென்றாள்.
அங்கு அவளது கார் நின்றபோது, அவள் கண்ட காட்சி
அவளது இதயத்தை நொறுக்கியது. கார்த்திக் தன் வீட்டிற்கு முன்னால்,
வேறொரு பெண்ணுடன் மிகவும் நெருக்கமாக, உல்லாசமாகப்
பேசிக்கொண்டிருந்தான். அந்தப் பெண்ணின் இடுப்பில் கை போட்டுக்கொண்டு
அவன் சிரித்த சிரிப்பு, அகிலாவின் நெஞ்சில் ஈட்டியாகப் பாய்ந்தது.
அவள் பயந்தது நடந்துவிட்டது!
கோபத்தின் உச்சிக்கே சென்ற அகிலா, காரை விட்டு
இறங்கி சத்தமிட்டாள்: "கார்த்திக்!"
அவனும் அந்தப் பெண்ணும் திடுக்கிட்டுத் திரும்பினர். கார்த்திக்கின் முகத்தில் எந்த ஒரு பயமும் இல்லை, மாறாக ஒரு ஏளனச் சிரிப்பு இருந்தது.
"என்னடா... நான் உன்னை உயிர விட அதிகமா
நம்புனேன். நேத்து நீ என்கூட எப்படி இருந்தே? யார் இந்த ஆள்? இந்த போட்டோவுல இருக்குறது நீதானே?"
என்று தன் போனில் இருந்த சில புகைப்படங்களைக் காட்டி அகிலா கத்தினாள்.
அவள் மனதிற்குள் ஏதோ ஒரு மூலையில், "இதெல்லாம் பொய், நான் உன்னை மட்டும்தான் காதலிக்கிறேன்"
என்று கார்த்திக் கூறிவிடுவான் என்று ஒரு ஏழை நம்பிக்கை இருந்தது.
கடைசி வரை அவனது பதிலைக் எதிர்பார்த்துக் காத்திருந்தாள்.
ஆனால், கார்த்திக் அவளை உற்று நோக்கி,
பலமாகக் சிரித்தான்.
"ஏய்! என்னடி என் வீட்டுக்கு முன்னாடி
வந்து கத்துற? ஆமாண்டி... நான் உன்னைச்
சும்மாதான் பயன்படுத்திக்கிட்டேன். உன்னோட இன்பத்துக்காக மட்டும்தான்
நான் உன் கூட இருந்தேன். இப்போ உன்னால என்ன பண்ண முடியும்?
நீ ஒரு விதவை! உன்னையே ராசி இல்லாதவள்னு
உன் குடும்பமே துரத்திடுச்சு. உன்னைத் தாலி கட்டி என் வீட்டுக்குக்
கூட்டிட்டு வந்து நான் என்ன பிச்சைக்காரனா ஆகப்போறேனா? ஏதோ
தோணுச்சு, உன் கூட இருந்தேன். உன்னைத்
கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னா நீயே வந்து படுத்துகிட்ட...
இதுல நான் என்ன பண்ண முடியும்? இப்போ உன்னோட வயித்துல வளர்ற குழந்தைக்கு நான் அப்பாவா?
நீ யாருக்குப் போய் இந்த மூஞ்சியை வச்சுக்கிட்டு சொல்லுவ?
நீ கர்ப்பமா இருக்கேன்னு தெரிஞ்சா இந்த ஊரே உன்னைத் தூற்றிப் பேசும்.
உன்ன மாதிரி ஒரு ராசி இல்லாத விதவை கூடலாம் என்னால வாழ முடியாது.
போடி இங்கிருந்து!" என்று அவளைக் கேவலமாகப்
பேசி, கழுத்தைப் பிடித்துத் தள்ளினான்.
அகிலாவின் மனம் அப்படியே சுக்குநூறாக உடைந்தது. இவனையா நாம் நம்பினோம்? அவளது உடம்பெல்லாம் பயத்தில்
நடுங்கியது. அவமானம் அவளைக் குத்தியது.
பயத்துடனும், கண்ணீருடனும் அங்கிருந்து தப்பித்து
ஓடி வந்தாள் அகிலா. ஒரு பெண்ணுக்கு இப்படி ஒரு நிலைமையா?
"இந்தக் குழந்தையை நான் வளர்த்தாலும், இந்தச் சமுதாயம் அதை அப்பா இல்லாத பிள்ளை என்றுதானே ஏசும்? என் குடும்பமே என்னை இன்னும் என்னவெல்லாம் பேசுமோ?" அவளுக்குத் தலை சுற்றுவது போல இருந்தது.
வேறு வழியின்றி, அவளது நெருங்கிய நண்பரான
ஒரு மருத்துவருக்குப் போன் செய்தாள். மலேசியச் சட்டப்படி என்ன
செய்வது என்று அவளுக்குத் தெரியவில்லை. அவள் ஒரு கோடீஸ்வரி
என்பதால், அவசர அவசரமாக அந்த மருத்துவரைச் சந்தித்து,
பெருந்தொகைப் பணத்தை அவர் முன் வைத்தாள்.
"டாக்டர்... எனக்கு இப்ப நீங்க மட்டும்தான்
இருக்கீங்க. தயவுசெய்து எனக்கு உதவி செய்யுங்க. நான் ஒரு இக்கட்டான சூழ்நிலையில இருக்கேன். இவனை
நம்பி நான் ஏமாந்துட்டேன். இந்த வாழ்க்கை எனக்கு வேண்டாம்,
இந்தக் குழந்தையும் வேண்டாம். எனக்குக் கருவைக்
கலைக்கிற மருந்து கொடுங்க" என்று கெஞ்சினாள்.
முதலில் அந்த மருத்துவர் மறுத்தாலும், அகிலா
கொடுத்த பெரும் பணத்தைப் பார்த்ததும் மனம் மாறினார். அவளுக்கு
ஒரு சக்திவாய்ந்த மாத்திரையைக் கொடுத்து, அதை எப்படிப் பயன்படுத்த
வேண்டும் என்று கூறினார்.
மாத்திரையை வாங்கிக்கொண்டு தன் வீட்டிற்கு வந்தாள் அகிலா.
ஒரு பெண்ணாகத் தன் சொந்தக் குழந்தையையே கொல்லப் போகிறோம் என்ற குற்ற
உணர்ச்சி அவளை வாட்டியது. ஆனால், சமுதாயத்தின் பழியும், அவமானமும் அவளை அந்த முடிவை
நோக்கித் தள்ளினாள்.
பாத்ரூமிற்குச் சென்று, தண்ணீரைக் குடித்துவிட்டு
அந்த மாத்திரையை விழுங்கினாள்.
சில நிமிடங்கள் கழித்து... அவளது அடிவயிற்றில்
ஒரு பயங்கரமான வலி ஏற்பட்டது. நரக வேதனை! அவளது கருவிலிருந்து இரத்தம் வெடித்து வெளியேறியது. அந்த இரத்தத்தோடு கலந்து, ஒரு சிறு சிசுவாக அவளது
கரு வெளியே வந்து விழுந்தது.
அகிலாவின் கைகள் நடுங்க ஆரம்பித்தன. "நான் ஒரு கொலை செய்துவிட்டேனே... என் சொந்தப் பிள்ளையையே
கொன்றுவிட்டேனே..." என்ற பயமும், அதே நேரத்தில் "அப்பாடா... இனி இந்த விஷயம் யாருக்கும் தெரியாது" என்ற
ஒரு தற்காலிக நிம்மதியும் அவளுக்குள் மோதினாள்.
ஆனால், அந்த நிம்மதி நீடிக்கவில்லை.
"காசு இருந்து என்ன இருக்கு? ஒரு பெண்ணாக
என் வாழ்க்கை இவ்வளவுதானா? அவனை நம்பி என் பிள்ளையையே கொல்ற
நிலைமை எனக்கு வந்துடுச்சே..." என்று பித்து பிடித்தவள்
போல, பாத்ரூம் தரையிலேயே அமர்ந்து கதறி அழுதாள். அவளது கண்ணீர் அந்த இரத்தத்தோடு கலந்தது.
அப்போது அவளது போன் அடித்தது. ஸ்கிரீனில்
'அப்பா' என்று காட்டியது.
கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, குரலை மாற்றிக்கொண்டு
போனை எடுத்தாள். "சொல்லுங்கப்பா..."
"அம்மா... அகிலா! நீ இன்னும் எவ்வளவு நாள்தான் இப்படியே தனியா இருக்கப்போற? நாங்க உனக்கு ஒரு நல்ல வரன் பார்த்திருக்கோம். உனக்கு மறுமணம் செய்ய நாங்க முடிவு பண்ணிட்டோம். நீயும் கொஞ்சம் கூட யோசிக்காம இதுக்குச் சம்மதிக்கணும்" என்றார் அப்பா.
அப்பாவின் வார்த்தைகளைக் கேட்டதும், அகிலாவின்
இதயம் உறைந்து போகும்படியானது.
சில நிமிடங்களுக்கு முன்னால், ஒரு தகாத உறவின்
அடையாளமாகத் தன் வயிற்றுக்குள் வளர்ந்த கருவை, இரத்தமும் சதையுமாகத்
தன் கைகளாலேயே கலைத்துவிட்டு, கைகளில் இன்னும் அந்த இரத்தக்
கறை காய்வதற்குள்... இப்போது பெற்றோர் அவளிடம் மறுமணம் பற்றிப்
பேசுகிறார்கள்!
அவளால் 'சரி' என்றும்
சொல்ல முடியவில்லை, 'முடியாது' என்றும்
சொல்ல முடியவில்லை. அவளது தொண்டை அடைத்தது.
"சரிங்கப்பா... நீங்க சொல்றபடியே நான்
மறுமணத்துக்குச் சம்மதிக்கிறேன்..." என்று கூறினாள்.
ஆனால், அந்த வார்த்தைகள் அவளது வாயிலிருந்து
வரும்போது, அவளது கண்கள் கவலையாலும், கண்ணீராலும் நிறைந்திருந்தன.
"இதுதான் ஒரு பெண்ணின் நிலையா? எதற்காக
இந்த வாழ்க்கை?" என்று நினைத்து, தன் நிலையை எண்ணி அவளது உள்ளம் வருந்தியது. சமுதாயத்தின்
விதிகளுக்கும், பெற்றோரின் கட்டாயத்திற்கும் கட்டுப்பட்டு,
தன் துரோகத்தையும், வலியையும் நெஞ்சிற்குள்ளேயே
புதைத்துக்கொண்டு, ஒரு இயந்திரமாக வாழச் சம்மதித்த அந்தப்
பெண்ணின் கண்ணீரோடு………
பெயர் : திவினா த/பெ கணசேகரன்
மின்னஞ்சல் : [email protected]
விரிவுரையாளர் : இணைப்பேராசிரியர் முனைவர் முனீஸ்வரன் குமார்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
Swethashne
The story was amazing🔥
Swethashne
The story was amazing🔥
Yuktha
Amazing work , keep writing ❤️
Lathisha Suraish
So nice and nice flow of story... keep your work forward....🥰
Rattna
Amazing 😍
Maha
Nics story....good jobbbbb❤❤❤😍



