மெளனமான விடியல்! - சிறுகதை

top-news
FREE WEBSITE AD

மாலையின் மங்கலான வெளிச்சத்தில் அந்தப் பெருநகரத்தின் வணிக வீதி பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. சூரியன் மேற்கே மறைந்து கொண்டிருக்க, நகரத்தின் செயற்கை விளக்குகள் ஒவ்வொன்றாகக் கண்விழிக்கத் தொடங்கின. மனிதர்களின் சத்தமும், வாகனங்களின் ஒலியும், சாலையோரக் கடைகாரர்களின் கூச்சல்களும் அந்த இடத்தையே ஒரு பெரிய சத்தக் கடலாக மாற்றியிருந்தன. அந்தப் பெரும் கூட்டத்திற்கு நடுவே, தமிழ் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தான். சுற்றிலும் ஆயிரக்கணக்கான மனிதர்கள் நடமாடிக் கொண்டிருந்தாலும், அவனுக்குள் ஒரு சூனியமே நிலவியது. அவனுடைய கண்கள் வெறித்த பார்வையோடு சுற்றிலும் இருந்த மனிதர்களைப் பார்த்துக் கொண்டிருந்தன. கடந்த சில வாரங்களாகவே அவனுக்குள் ஒரு விவரிக்க முடியாத தனிமை குடியேறியிருந்தது. அந்தத் தனிமை அவனது ஆன்மாவை மெல்ல மெல்ல அரித்துக் கொண்டிருந்தது.

ஆபீஸ் வேலை
, கணினியின் திரை, கோப்புகளின் சுமை என எதிலும் அவனால் கவனம் செலுத்த முடியவில்லை. வீடு திரும்பும் இந்த மாலை நேரங்கள் அவனுக்கு எப்போதுமே நரகமாக இருந்தன. கூட்ட நெரிசலில் அவதிப்படும் மனிதர்களுக்கு மத்தியில், அவன் தன் சொந்த எண்ணங்களின் நெரிசலில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தான். திடீரென்று, அவனுடைய கண்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிலைத்து நின்றன. கால்கள் தானாக நடைவேகத்தைக் குறைத்தன. சாலைக்கு எதிர்புறம் இருந்த ஒரு ஜவுளிக்கடையின் வாசலில், நீல நிறப் புடவை கட்டிய ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள். அவளுடைய நடையும், அவள் தன் தோளில் கையை வைத்திருந்த விதமும் தமிழுக்கு மிக மிக பழகின ஒன்றாக இருந்தது. அந்தப் புடவையின் நிறம், அந்த உடலமைப்பு அவனுக்குள் ஒரு மின்னலை ஏற்படுத்தியது.

"அம்மா!..." என்று அவனறியாமல் அவனுடைய உதடுகள் அந்த வார்த்தையை மெல்ல உச்சரித்தன.

அவனுடைய இதயம் பந்தயக் குதிரையைப் போல வேகமாகத் துடிக்கத் தொடங்கியது. அந்தப் பெண் கூட்டத்திற்குள் மெதுவாக நகர்ந்து கொண்டிருக்க, தமிழ் தன் பார்வையை அவளிடமிருந்து ஒரு நொடி கூட விலக்காமல் அவளையே பின்தொடர்ந்து நகர்ந்தான். அவளுடைய முகம் முழுமையாகத் தெரியவில்லை என்றாலும், அவளுடைய முதுகுப்புறத் தோற்றமே அவனுக்குப் போதுமானதாக இருந்தது. அது தன் அம்மாதான் என்பதில் அவனுக்கு எந்த ஐயமும் இல்லை.

அவளை நோக்கி ஓடிச் சென்று கட்டிப்பிடிக்க வேண்டும் என்று அவனுடைய கால்கள் துடித்தன. ஆனால், அவளைத் தூரத்திலிருந்து பார்ப்பதே அவனுக்கு ஒருவித நிம்மதியைக் கொடுத்தது. உடனே, இந்த மகிழ்ச்சியான செய்தியைத் தன் உடன்பிறந்தவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில், அவன் தன் கோட் பையில் இருந்த கைபேசியை அவசர அவசரமாக எடுத்தான். கைபேசியில் எண்களைத் தட்டி, காதில் வைத்தான். மறுமுனையில் சில ரிங்காரங்களுக்குப் பிறகு அவனுடைய அக்கா கவிதா அழைப்பை ஏற்றாள்.

"ஹலோ, தமிழ்? சொல்லுடா, எப்படி இருக்கே? ஆபீஸ் முடிஞ்சுதா?" என்று கவிதாவின் குரல் தம்பியின் மீதான அக்கறையோடு ஒலித்தது. தமிழ் அளவற்ற உற்சாகத்தோடு பேசத் தொடங்கினான். "ஆபீஸ் முடிஞ்சுதுக்கா. இப்போதான் வெளில வந்தேன். இன்னைக்கு ஒரு முக்கியமான ப்ராஜெக்ட் முடிஞ்சதுக்கா, மேனேஜர் கூட பாராட்டினாரு. சரி, தம்பி கார்த்தி எங்க? அவனையும் லைன்ல எடு, மூணு பேரும் பேசி ரொம்ப நாள் ஆச்சு”.

கவிதா உடனே தம்பி கார்த்தியையும் கான்ஃபரன்ஸ் காலில் இணைத்தாள். கார்த்தி இணைந்ததும் உரையாடல் இன்னும் சுறுசுறுப்பானது. "என்னடா தமிழ், திடீர்னு அக்கா தம்பி ஞாபகம் வந்திருக்கு? அங்கே ரூம்ல சமையல் எல்லாம் எப்படி போகுது? ஒழுங்கா சாப்பிடுறியா இல்லையா?" என்று கார்த்தி கிண்டலாகக் கேட்டான்.

"டேய், நான் சூப்பரா சமைக்கிறேன்டா. போன வாரம் கூட அம்மா சொல்லிக் கொடுத்த மாதிரி காரக்குழம்பு வச்சேன். ஆனா என்ன... அம்மாவோட கை பக்குவம் வரல. அக்கா, உனக்கு ஞாபகம் இருக்கா? சின்ன வயசுல நாம சண்டை போடும்போதெல்லாம் அம்மா அந்த காரக்குழம்பை ஊட்டிவிட்டு நம்மள சமாதானப்படுத்துவாங்க..." தமிழ் பழைய நினைவுகளில் மூழ்கிப் பேசினான்.

மறுமுனையில் கவிதாவும் கார்த்தியும் ஒரு கணம் மௌனமாயினர். கவிதா லேசான நடுக்கத்துடன், "தமிழ்... ஏன்டா இப்போ பழசையெல்லாம் பேசிட்டு இருக்கே? இன்னைக்கு உன் குரல் ஒரு மாதிரி இருக்கு. உடம்புக்கு எதுவும் முடியலையாடா?" என்று வினவினாள்.

"இல்லக்கா, நான் ரொம்ப நல்லா இருக்கேன். இன்னைக்கு சாயங்காலம் ஏன் இவ்வளவு அழகா இருக்கு தெரியுமா? நான் இப்போ மெயின் ரோட்ல நடந்துட்டு இருக்கும்போது ஒரு ஆச்சரியம் காத்துட்டு இருந்ததுடா கார்த்தி!" என்றான் தமிழ், அவனது கண்கள் இன்னும் அந்த நீல நிறப் புடவையையே பின்தொடர்ந்தன.

"என்ன ஆச்சரியம்டா? சீக்கிரம் சொல்லு, சஸ்பென்ஸ் தாங்கல," என்றான் கார்த்தி, ஆனால் அவனது குரலில் ஒருவித பதற்றம் கலந்திருந்தது. தமிழ் மெதுவாகச் சிரித்துக் கொண்டே சொன்னான், "டேய், நீங்க நம்பவே மாட்டீங்க. நான் இப்போ மெயின் ரோட்ல நின்னுட்டு இருக்கேன். எனக்கு முன்னாடி கூட்டத்துல அம்மா நடந்து போயிட்டு இருக்காங்கடா! அதே நீல கலர் புடவை... போன வருஷம் தீபாவளிக்கு நான் எடுத்துக்கொடுத்தேனே, அதே புடவை! அதே மாதிரி கொண்டை போட்டிருக்காங்க. அம்மா கடைக்கு வந்திருக்காங்கன்னு நினைக்கிறேன். நான் அம்மாவைப் பார்த்துட்டேன்டா!"

மறுமுனையில் திடீரென்று ஒரு பயங்கரமான, மயான அமைதி நிலவியது. அதுவரை கேட்ட சாதாரண பேச்சுகள் யாவும் நொடியில் மறைந்தன. கைபேசியின் வழியே கவிதா மற்றும் கார்த்தியின் மூச்சுக்காற்று மட்டுமே பலத்த சத்தமாக அவனுக்குக் கேட்டது. "ஹலோ... அக்கா, கார்த்தி, கேக்குதா? அம்மா இப்போதான் அந்தப் பக்கமா போறாங்க, நான் ஓடிப்போய் கூப்பிடவா?" என்று தமிழ் மீண்டும் ஆவலோடு கேட்டான்.

"தமிழ்..." கவிதாவின் குரல் உடைந்தது. அவளுடைய அழுகையை அடக்க முயலும் சத்தம் தெளிவாகத் தெரிந்தது. "தமிழ்... என்ன பேசுற நீ? உனக்கு என்னாச்சுடா? தயவுசெஞ்சு விளையாடாதே...”


"நான் ஏன் அக்கா விளையாடப்போறேன்? அம்மா இங்கேதான் இருக்காங்க, இன்னும் கொஞ்ச நேரத்துல கூட்டத்துல மறைஞ்சுடுவாங்க..."

"தமிழ்! நிஜத்தை எதிர்கொள்டா..." இப்போது கார்த்தி சத்தமாக அழத் தொடங்கியிருந்தான். "அம்மா நம்மளை விட்டுப் பிரிஞ்சு இன்னையோட ஒரு வருஷம் முடியுதுடா! போன வருஷம் இதே நாள், இதே சாயங்காலம் தானே ஹாஸ்பிடல்ல வச்சு அம்மாவோட மூச்சு நின்னுச்சு...” அந்த வார்த்தைகள் தமிழின் காதுகளில் விழுந்த கணத்தில், சுற்றியிருந்த ஒட்டுமொத்த உலகமும் அப்படியே தலைகீழாகக் கவிழ்வது போல் இருந்தது. காதுகளில் ஒருவித ரீங்காரம் மட்டுமே கேட்டது.

"ஒரு வருஷமா? அம்மாவா? இல்லை... இல்லை... தமிழ் பதற்றத்துடன் கத்தினான். அவனுடைய நெற்றியில் வேர்வைத் துளிகள் அரும்பின. "தமிழ், டாக்டர் கொடுத்த மாத்திரையை நீ இன்னிக்கு சாப்பிட்டியா? அம்மா இறந்த அதிர்ச்சியில இருந்து உன்னால வெளில வர முடியலன்னுதானே டாக்டர் அந்த ஆன்டி-டிப்ரஸன்ட் மாத்திரைகளைக் கொடுத்தாங்க? ப்ளீஸ் டா, பையில் இருக்க மாத்திரையை எடுத்து முதல்ல சாப்பிடு..." கவிதாவின் கதறல் போனின் வழியே கேட்டது.

அக்காவின் வார்த்தைகள் அவனுடைய மூளையின் மூடியிருந்த ஏதோ ஒரு கதவைத் தட்டின. தமிழ் மெதுவாகத் தன் கையைத் தன் கோட் பைக்குள் விட்டான். அங்கே ஒரு சிறிய பிளாஸ்டிக் டப்பா இருந்தது. அது அவனுடைய மன அழுத்தத்திற்கான மாத்திரைகள். கடந்த இரண்டு நாட்களாக அவன் அந்த மாத்திரைகளைத் தொடவே இல்லை. மாத்திரைகளைத் தவிர்க்கத் தொடங்கியதால் அவனது ஆழ்மனம் அவனுக்குப் பிடித்தமான ஒரு கற்பனை உலகை உருவாக்கி
, அதில் அம்மாவை வாழ வைத்திருந்தது.

திடீரென்று, அவனுடைய நினைவுகள் அதிவேகமாகப் பின்னோக்கி ஓடின. மருத்துவமனையின் வெண்மை நிறச் சுவர்கள்...ஐசியூ வார்டில் எக்கோ அடித்த மெஷின்களின் மரண ஓசை... மருத்துவர் தலை குனிந்து 'ஸாரி, எங்களால அவங்களக் காப்பாத்த முடியல' என்று சொன்ன தருணம்... வீட்டின் வாசலில் வைக்கப்பட்டிருந்த, மாலையிடப்பட்ட அம்மாவின் அந்தப் புன்னகையான புகைப்படம்...

எல்லாமே மின்னலாக அவனுடைய மனக்கண்ணில் வந்து போயின. உண்மை அவனுடைய நெஞ்சில் சுத்தியலால் அடிப்பது போல் இறங்கியது. அவன் மெதுவாகத் தலை நிமிர்ந்து, அந்த நீல நிறப் புடவை கட்டிய பெண்ணைப் பார்த்தான். அவளுடைய முகம் இப்போது திரும்பியது. அது அம்மா இல்லை... முற்றிலும் யாரோ ஒரு புதிய முகம். அவனுடைய பிரம்மை கண்ணாடிப் பாத்திரத்தைப் போல நொறுங்கிச் சிதறியது.

கைபேசி அவனறியாமல் அவனுடைய கையை விட்டு நழுவித் தரையில் விழுந்தது. கண்களில் இருந்து கண்ணீர் அருவியாகக் கொட்டியது. அவனால் அந்த நிஜத்தின் வழியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இத்தனை நாட்களாக அவனுடைய மனதுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஏமாற்றமும், துக்கமும், இழப்பை ஏற்க மறுத்த மனநிலையும் அந்த ஒரே கணத்தில் உடைந்து வெடித்தன.

வழியின் நடுவிலேயே மண்டியிட்டு அமர்ந்து, தமிழ் தன் முகத்தை மூடிக் கொண்டு மனமுடைந்து அழுதான். "அம்மா... ஏன் என்னை விட்டுட்டு போனீங்க..." என்று அவன் கதறிய அழுகை, அந்தப் பெருங்கூட்டத்தின் சத்தத்தில் கரைந்து போனது. சுற்றியிருந்தவர்கள் அவனை ஒரு விசித்திரமான பிறவியைப் போலப் பார்த்துவிட்டு கடந்து சென்றனர்.

ஆனால், அந்த அழுகை அவனுக்குள் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அதுவரை அவனுடைய இதயத்தை அழுத்திக் கொண்டிருந்த ஒரு இமயமலைப் பாரம், கண்ணீரோடு சேர்ந்து மெல்ல மெல்லக் கரைந்து போவதை அவன் உணர்ந்தான். நீண்ட நேர அழுகைக்குப் பிறகு, அவனுடைய இதயம் வியக்கத்தக்க வகையில் அமைதியடைந்தது. ஏதோ ஒரு நிம்மதி அவனுக்குள் பரவியது. அம்மா இனி உடலால் வரமாட்டாள் என்ற கசப்பான உண்மையை அவனுடைய மனம் இறுதியாக முழுமையாக ஏற்றுக்கொண்டது.

மெதுவாகத் தரையில் கிடந்த கைபேசியை எடுத்தான். திரையில் விரிசல் விழுந்திருந்தது. அக்காவுடனான அழைப்பு எப்போதோ துண்டிக்கப்பட்டிருந்தது. கைபேசியின் 'கால் லாக்' (Call Log) பக்கம் திறந்திருந்தது. அவனுடைய கண்கள் மீண்டும் கலங்கின, ஆனால் இந்த முறை அதில் பிரம்மை இல்லை, தெளிவு இருந்தது.

இப்போது அக்காவிடமும் தம்பியிடமும் பேசிய அழைப்பைத் தவிர, அவனுடைய போன் திரையில் இருந்தவை எல்லாமே... “அம்மா – கோல் துண்டிக்கப்பட்டுள்ளது” என்ற சிவப்பு நிற எண்கள் மட்டும்தான். அந்தப் பதிலளிக்கப்படாத அழைப்புகளைப் பார்த்ததும் அவனுக்குள் குற்ற உணர்வும், நினைவலைகளும் சுழன்றடித்தன. அம்மா உயிருடன் இருந்தபோது, ஆபீஸிலிருந்து வரும் வழியில் தினமும் அம்மா அவனுக்கு போன் செய்வாள்.

 "தம்பி, கிளம்பிட்டியா? பஸ் ஏறிட்டியா? வரும்போது பார்த்து பத்திரம்டா... தக்காளி வாங்கிட்டு வாடா..." என்று தினமும் சலிக்காமல் ஒலிக்கும் அதே குரல்.அப்போதெல்லாம் வேலை பளுவிலும், நண்பர்களின் அரட்டையிலும் அவன் பலமுறை, "அம்மா, நான் பிஸியா இருக்கேன், அப்புறம் பேசுறேன்" என்று எரிச்சலோடு போனை வைத்த தருணங்கள் அவனுக்குள் குற்ற உணர்ச்சியாக வந்து போயின. அன்று அவன் அலட்சியப்படுத்திய அந்த அழைப்புகள், இன்று அவனுக்குக் கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத வரம் போலத் தோன்றின.

கடைசியாக அம்மா நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய நாள் இரவு, அவனது போனுக்கு வந்த அம்மாவின் 'மிஸ்ட் கோல்' திரையில் மின்னியது. "நாளைக்குக் காலைல பேசிக்கலாம்" என்று அவன் அன்று கூப்பிடாமல் அலட்சியமாக விட்ட அந்த ஒரு அழைப்பு... இன்று அவனால் எப்போதுமே பதில் பேச முடியாத, ஆயுள் காலத்திற்கும் மௌனமாகிப்போன அழைப்பாக மாறிவிட்டது.


கடந்த ஒரு வாரமாக, அம்மா இல்லாத அந்தப் பாழடைந்த வீட்டிலிருந்து, தினமும் இரவு அவளுடைய பழைய சுவிட்ச்-ஆஃப் செய்யப்பட்ட எண்ணிற்கு அவன் நூற்றுக்கணக்கான முறை போன் செய்திருந்தான். அந்தப் பதிலளிக்கப்படாத அழைப்புகளின் பட்டியல், அவனுடைய தீராத அன்பின், ஏக்கத்தின், மன்னிப்புக் கோரலின் சாட்சியாக அங்கே நின்றிருந்தது.

தமிழ் கைபேசியை தன் நெஞ்சோடு இறுக்கமாக அணைத்துக் கொண்டான். பையிலிருந்த மாத்திரை டப்பாவை எடுத்து ஒரு மாத்திரையை வெளியில் எடுத்தான். அருகில் இருந்த கடையிலிருந்து தண்ணீர் பாட்டில் வாங்கி, அந்த மாத்திரையை விழுங்கினான். மெதுவாக எழுந்து நின்று, இருண்டுவிட்ட அந்த வானத்தைப் பார்த்து மென்மையாகப் புன்னகைத்தான். கண்களில் இன்னும் கண்ணீரின் ஈரம் இருந்தது, ஆனால் இதயத்தில் ஒரு நிம்மதியான அமைதி குடியேறியிருந்தது.

அம்மா அவனோடு உடல்ரீதியாக இல்லைதான், ஆனால் அவளுடைய நினைவுகளும், அவள் ஊட்டிய காரக்குழம்பின் சுவையும், அவளது மாறாத அன்பும் என்றும் தனக்குள்ளேயே வாழும் என்பதை அவன் புரிந்து கொண்டான். நிஜத்தை ஏற்றுக்கொண்டு வாழ பழகிய ஒரு புதிய மனிதனாக, தமிழ் அந்தப் பெருங்கூட்டத்திற்குள் நிமிர்ந்த நடையோடு நடக்கத் தொடங்கினான்.


பெயர் : தருஷினி த/பெ இரவிச்சந்திரன் 
மின்னஞ்சல் : darishiniravichandran1@gmail.com 
விரிவுரையாளர் : இணைப்பேராசிரியர் முனைவர் முனீஸ்வரன் குமார்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *