அப்பா என்ற ஓர் அழைப்பு - சிறுகதை
- THINAGAREN SANGGAREN
- 15 Jul, 2026
"அப்பா, இன்னும் எவ்வளவு நாள் இந்த லாரி ஓட்டும் வேலையைச் செய்வீர்கள்?"என்று காவியா சிரித்தபடி கேட்டாள். வடிவேலு தனது மரக்கட்டை கனவுந்தின் கண்ணாடியைத் துடைத்துக் கொண்டிருந்தார். ஐம்பத்தெட்டு வயதான அவரின் முகத்தில் காலத்தின் சுவடுகள் தெரிந்தாலும், கண்களில் மகளுக்கான பாசம் மட்டும் குறையவில்லை. காவியா அவருடைய ஒரே மகள். அவள் பிறந்த சில ஆண்டுகளிலேயே மனைவியை இழந்த வடிவேலு, தந்தையாகவும் தாயாகவும் இருந்து அவளை வளர்த்திருந்தார். பள்ளி, பல்கலைக்கழகம், வேலை என அவளது ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னால் அவரது உழைப்பும் தியாகமும் இருந்தது.
"நீ கல்யாணம் ஆகி மகிழ்ச்சியா வாழ்றதைப் பார்த்த பிறகு யோசிக்கிறேன்," என்று புன்னகைத்தார் வடிவேலு.
"என் கல்யாணத்துக்குப் பிறகும் நீங்க என்னோடதான் இருக்கணும் அப்பா," என்று காவியா கூறினாள்.
"நீ எங்கே இருந்தாலும், உன் நிழலா இருப்பேன்," என்றார் வடிவேலு.
அந்த வார்த்தைகளைக் கேட்ட காவியா அவரை அணைத்துக்கொண்டாள். அடுத்த நாள் மாலை, வானம் கருமேகங்களால் சூழப்பட்டிருந்தது. மழை மெதுவாகப் பெய்யத் தொடங்கியது. காவியா தனது வருங்கால கணவர் அரவிந்தைச் சந்திக்கச் செல்லத் தயாரானாள்.
"மழை அதிகமா இருக்கு. கொஞ்சம் கவனமா போ மா ," என்று வடிவேலு எச்சரித்தார்.
"அப்பா, நான் குழந்தையில்லை," என்று சிரித்தபடி அவளது சிவப்பு நிற மைவி மகிழுந்தில் ஏறினாள்.
வடிவேலுவும் தனது மரக்கட்டை கனவுந்தை இயக்கி வேலையை முடிக்கப் புறப்பட்டார்.
சாலையில் போக்குவரத்து அதிகமாக இருந்தது. மழை காரணமாக காட்சி தெளிவாகத் தெரியவில்லை. சாலை போக்குவரத்து விளக்கு சிவப்பாக மாறியது. வடிவேலுவின் லாரி நின்றது. அதே நேரத்தில் சிவப்பு நிற மகிழுந்து
லாரியின் வலது பக்கமாக வந்து நின்றது.
ஆனால் அந்தக் மகிழுந்து
நின்ற இடம் மிகவும் ஆபத்தானது. அது கனவுந்தின் ‘திதிக் பூதா’ பகுதி. வடிவேலுவின்
கண்ணாடிகளில் அந்த மகிழுந்து தென்படவில்லை. மழை வேகமாகப்
பெய்துக்கொண்டிருந்தது. சாலை போக்குவரத்து விளக்கு பச்சை நிறமாக மாறியது. வடிவேலு மெதுவாக கனவுந்து இயக்கினார். அதே நேரத்தில் அந்த மகிழுந்தும் வேகமாக முன்னேற முயன்றது. மழை அப்பொழுது இன்னும் வேகமாகப்
பெய்துகொண்டிருந்தது.
அப்பொழுது வடிவேலுவின் பார்வையில் ஒரு அதிர்ச்சியான காட்சி தென்பட்டது. சாலையின் இடது புறத்திலிருந்து கட்டுப்பாட்டை இழந்த ஒரு மோட்டார் சைக்கிள் வேகமாக வந்துகொண்டிருந்தது. மழைநீரால் சாலை வழுக்கலாக இருந்ததால், அந்த மோட்டார் சைக்கிள் நேராக முன்னே கனவுந்தின் பின்புறத்தை நோக்கி சறுக்கிக்கொண்டிருந்தது. வடிவேலுவின் இதயம் ஒரு கணம் நின்றது. "ஐயோ! லாரிமேல மோதப்போகுதே!" என்று பதறினார். அந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர் யார் என்று அவருக்குத் தெரியவில்லை. ஆனால் ஒரு உயிர் ஆபத்தில் இருப்பது மட்டும் தெரிந்தது. ஒரு நொடி.. ஒரே ஒரு நொடி.. உடனே அவர் ‘ஸ்டீரிங்கை’ வலப்புறமாகத் திருப்பினார். மோட்டார் சைக்கிள் லாரி தயர் பக்கத்தில் மோதுவதைத் தடுக்க நினைத்தார். ஆனால் மழை, பாரம் ஏற்றிய கனவுந்து அனைத்தும் அவருக்கு எதிராக இருந்தன.
டமீர்...! அடுத்த கணம் காதைப் பிளக்கும் அளவுக்கு ஒரு பெரிய சத்தம் கேட்டது. கனவுந்தின் முன்பகுதி மகிழுந்தின் ஓரப்பகுதியில் மோதியது. மகிழுந்து சுழன்று சாலையோர தடுப்பில் மோதி நின்றது. கண்ணாடித் துண்டுகள் சிதறின. மோட்டார் சைக்கிளும் சாலையில் உருண்டு விழுந்தது. ஒரே கணத்தில் சாலை முழுவதும் அலறல் சத்தம் நிறைந்தது. மக்கள் அலறிக்கொண்டு ஓடிவந்தனர். வடிவேலு அதிர்ச்சியில் லாரியை நிறுத்தினார். "ஐயோ! என்ன ஆச்சு?" என்று பதறியபடி கீழே இறங்க முயன்றார். அப்போது சிலர் அவரைத் தடுத்தனர்.
"இப்போ போகாதே!"
"நீங்க ஓடப்போறீங்கன்னு நினைப்பாங்க!"
" காவல்துறை அதிகாரிகள்
வரட்டும்!"
"அந்த மகிழுந்தில் இருந்தவங்களைப் பார்க்கணும்!"என்று வடிவேலு துடித்தார். "இல்ல! இங்கேயே இருங்க!"என்று சிலர் அவரிடம் கூறினார். சில நிமிடங்களில் காவல்துறை அதிகாரிகள் வந்தனர். நடைமுறை விசாரணைக்காக வடிவேலுவை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். மகிழுந்தில் இருந்தவர் யார் என்பதை அவரால் பார்க்கவே முடியவில்லை.
அந்த இரவு காவல் நிலையத்தில் வடிவேலு தனியாக அமர்ந்திருந்தார். வெளியில் மழை இன்னும் பெய்துகொண்டிருந்தது."காவியா இன்னும் வீட்டுக்கு வந்திருப்பாளா?" "சாப்பிட்டிருப்பாளா?" "நாளைக்கு அவளோட கல்யாணம் பத்தி பேசணும்னு நினைச்சேனே..." என்ற எண்ணங்கள் அவரது
மனதை வாட்டின. மகளிடம் பேச வேண்டும் என்று எண்ணினார். ஆனால் கைபேசி காவல்துறை அதிகாரியிடம்
இருந்தது. இரவு முழுவதும் அவரால் தூங்க முடியவில்லை.
மறுநாள் காலை ஒரு காவல்துறை அதிகாரி அவரை விசாரணை அறைக்கு அழைத்துச் சென்றார்.
வடிவேலுவின் முகம் சோர்ந்திருந்தது. அதிகாரி சில நொடிகள் அமைதியாக இருந்தார். “நேத்து விபத்துக்குள்ளான கார்ல இருந்தது யாருன்னு தெரிஞ்சுக்கணுமா?" என்று மெதுவாகக் கேட்டார். வடிவேலு உடனே தலைஅசைத்தார். "அவங்க நல்லா இருக்காங்களா சார்?" என்று பதற்றத்துடன்
கேட்டார். அதிகாரி பதில் சொல்லவில்லை. வடிவேலுவிடம் ஒரு புகைப்படத்தை நீட்டினார். வடிவேலு அந்தப் புகைப்படத்தை வாங்கிப் பார்த்தார். அடுத்த நொடி அவரது கைகள் நடுங்கின. மூச்சு நின்றது போல உணர்ந்தார். அது காவியாவின் புகைப்படம். அவரது மகள். அவரது உலகம். அவரது உயிர்.
"இது... இது என் மகள்..." என்று சொல்லிவிட்டு கதறி அழுதார். "இல்ல சார்... முடியாது..." என்று மீண்டும் மீண்டும் கூறினார். அவரால் பேச முடியவில்லை. அவரது கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. தன் மகளை தானே மோதியிருக்கிறேன் என்ற எண்ணம் அவரது இதயத்தை நொறுக்கியது. சில நிமிடங்கள் கழித்து அதிகாரி மெதுவாகக் கூறினார். "அவங்க உயிரோட இருக்காங்க." வடிவேலு அதிர்ச்சியுடன் தலைநிமிர்ந்தார். "உண்மையாவா சார்?" "ஆமாம். ஆனா இன்னும் மருத்துவமனையில இருக்காங்க" என்றார் அதிகாரி. அந்த வார்த்தைகளைக் கேட்டதும் அவர் அழுதபடியே கைகளை கூப்பினார்.
அவரது மனதில் ஒரே ஒரு எண்ணம்
மட்டுமே ஓடியது. காவியாவைப்
பார்க்க வேண்டும். காவல்துறை
அதிகாரியிடம் அனுமதியைப்
பெற்றவுடன், அவர் அவசரமாக
மருத்துவமனைக்குப் புறப்பட்டார். மழை நின்றிருந்தாலும், அவரது மனதில் புயல் அடித்துக்கொண்டிருந்தது.
வழி முழுவதும்,
"என் மகளுக்கு எதுவும் ஆகக்கூடாது... ஒரு தடவை அவளைப் பார்த்தாலே
போதும்..." என்று இறைவனை வேண்டிக்கொண்டே சென்றார். மருத்துவமனை வாசலை
அடைந்ததும், மூச்சு வாங்கக்
கூட நிற்காமல் தீவிர சிகிச்சைப் பிரிவை நோக்கி ஓடினார்.
அங்குச்
சென்றபோது, அவசர சிகிச்சைப்
பிரிவின் முன் பதற்றமான சூழல் நிலவியது. மருத்துவர்கள் அவசரமாக உள்ளேயும்
வெளியேயும் சென்று கொண்டிருந்தனர்.
மருத்துவரின்
வார்த்தைகள் அவரது காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலித்தன. "நிலைமை கவலைக்கிடமாக
இருக்கிறது. அடுத்த சில நாட்கள்தான் முக்கியம்", என்றார் மருத்துவர். அந்த வார்த்தைகள் வடிவேலுவின் இதயத்தில்
பாரமாக விழுந்தது. மகளைப் பார்க்க அனுமதி இல்லாததால், கண்ணாடிக் கதவை வெறித்துப் பார்த்தபடி அவர்
அங்கேயே காத்திருந்தார்.
மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு வெளியே வடிவேலு தனியாக அமர்ந்திருந்தார். மூன்று நாட்களாக அவர் சரியாகச் சாப்பிடவில்லை. தூங்கவும் இல்லை.
கண்ணாடிக் கதவுக்கு மறுபுறம் காவியா உயிருக்கும் மரணத்திற்கும் இடையில் போராடிக்கொண்டிருந்தாள். ஒவ்வொரு முறையும் மருத்துவர் வெளியே வந்தபோது, வடிவேலு எழுந்து நின்றார்.
"என் மகள் எப்படி இருக்கா டாக்டர்?" என்று கேட்பார். அதே பதில். "நாங்கள் முயற்சி செய்கிறோம்" என்பதே பதிலாக வந்தது.
அந்த வார்த்தைகள் அவரது இதயத்தை மெதுவாகக் கிழித்தன.
நான்காவது நாள், மருத்துவமனை வாசலில் வடிவேலு தனியாக உட்கார்ந்திருந்தார். கண்களில் கண்ணீர் நிறைந்து இருந்தது.
அருகில் இருந்த ஒரு தாதியர் அவரை பார்த்து மெதுவாக கேட்டார். “ஐயா… உங்க மகள் எப்படி இருந்தவங்க?” வடிவேலு ஒரு நொடி அமைதியாக இருந்தார். பிறகு மெதுவாகக் குரல் உடைந்து பேசினார். “என் காவியா… அவ சின்ன வயசுல இருந்து ரொம்ப நல்ல பொண்ணு மா… எப்பவும் ‘அப்பா சாப்பிட்டீங்களா?’ன்னு தான் கேப்பா… நான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் என் முகத்துல சிரிப்பு வரணும்னு நினைப்பா.” அவர் கண்ணை துடைத்துக் கொண்டார். “அவ இல்லாம நான் எப்படி இருக்க முடியும்? லாரி ஓட்டிட்டு வீடு வரும்போது அவ வாசல்ல நின்னு ‘அப்பா வந்துட்டாரு’ன்னு ஓடி வருவா… அந்தக் குரல் இல்லாம வீடு ரொம்ப வெறுமையா இருக்கு மா…” சில நொடிகள் அமைதியாக இருந்த அவரின் குரல் இன்னும் மெதுவாகியது. “நான் தான் அவளோட அப்பா… ஆனா சில நேரம் எனக்கே தோணும்… அவ எனக்கு உயிர் மாதிரி இருந்தா… நான் அவளுக்கு என்ன செஞ்சேன்?” அவர் ஆழமாக சுவாசித்தார். “இப்போ அவ கண்ணு திறந்து ‘அப்பா’ன்னு ஒரு தடவை கூப்பிட்டா போதும்… என் வாழ்க்கை திரும்ப கிடைச்ச மாதிரி இருக்கும் மா…” என்றார் .
அப்பொழுது இன்னொரு தாதியர் வந்து, "ஐந்து நிமிடம் மட்டும் உள்ளே போகலாம்," என்றார். வடிவேலுவின் கால்கள் நடுங்கின. பல நாட்களாகச் சரியாகச் சாப்பிடாததால் உடல் பலம் குறைந்து, எழுந்து நிற்கவே தடுமாறினார். உடனே ஒரு தாதியர் அவரது கையைப் பிடித்து, “அப்பா, என் கையைப் பிடிச்சு எழுந்திருங்க. நீங்க ரொம்ப சோர்ந்து போயிருக்கீங்க. சாப்பிடலன்னு எனக்குத் தெரியும். காவியா இருந்திருந்தா, நீங்க இப்படிச் செய்வதைப் பார்த்து கோபப்பட்டிருப்பா. நீங்க பலமா இருந்தாதானே அவளுக்கு ஆறுதல் சொல்ல முடியும்,” என்றாள்.
வடிவேலு மெதுவாக உள்ளே சென்றார். படுக்கையில் காவியா படுத்திருந்தாள். மூக்கில் குழாய், கைகளில் ஊசிகள், தலையில் கட்டுகள். அவரால் அதைத் தாங்க முடியவில்லை. அவர் அவளது கையைப் பிடித்தார்.
"காவியா..." என்று அழைத்தார். குரல் உடைந்தது.
"நீ சின்ன வயசுல விழுந்தா கூட என்னைத்தான் தேடுவியேம்மா... இப்போ நான் இங்க இருக்கேன். ஒரு தடவை கண்ணைத் திறந்து பாரும்மா..."என்றார். எந்தப் பதிலும் இல்லை.
"நீ கல்யாணம் ஆகுற நாள்ல உன் அம்மாவைப் போல அழகா இருப்பேன்னு எவ்வளவு பேர்கிட்ட சொல்லி பெருமைப்பட்டேன் தெரியுமா? நீ இல்லாம நான் எப்படி வாழ்வேன் மா ?" என்று கதறினார்.
அறையில் இயந்திரங்களின் ஒலி மட்டுமே கேட்டது. சிறிது நேரம் கழித்து மீண்டும் பேசத் தொடங்கினார். “காவியா, உனக்கு ஞாபகம் இருக்கா? மிதிவண்டி ஓட்டக் கத்துக்கொடுக்கும்போது விழுந்து அழுததை…அப்பா கையை விட்டுட்டீங்கன்னு கோபப்பட்டியே… ஆனா இன்று நீ எழுந்து நிற்கணும்னா, நான் மீண்டும் அந்தக் கையைப் பிடிக்கத் தயாரா இருக்கேன் மா …” என்றார்.
அவரது கண்ணீர் காவியாவின் கையில் விழுந்தது. அந்த நேரத்தில் காவியாவின் விரல்கள் மெதுவாக அசைந்தன. "காவியா?" என்று வடிவேலு திடீரெனத் தலைநிமிர்ந்தார். அது உண்மையா? அல்லது அவரரது ஏக்கத்தின் கற்பனையா? "அப்பா இங்கதான் இருக்கேன் மா ..." என்று அவர் மீண்டும் அவளது கையைப் பிடித்தார்.
ஆறாவது நாள் இரவு. மருத்துவமனையின் வழித்தடம் அமைதியாக இருந்தது. தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து இதயத் துடிப்பு கருவியின் ஒலி மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. வடிவேலு வெளியே உள்ள நாற்காலியில் அமர்ந்தபடி தூங்கிவிட்டார். திடீரென்று ஒரு தாதியர் ஓடிவந்தார்.
“வடிவேலு ஐயா!”
அவர் பதறி எழுந்தார்.
“என்னம்மா ? என்ன ஆச்சு?”
“ஐயா கொஞ்சம் உள்ளே வந்து
காத்திருங்க!”
“காவியாவுக்கு ஏதாவது
ஆச்சா?” என்று நடுங்கிய
குரலில் கேட்டார்.
தாதியர் எதுவும் சொல்லாமல்
அறைக்குள் ஓடிச் சென்றார். சில நொடிகளில் மருத்துவரும் மற்ற தாதியர்களும் அவசரமாக உள்ளே நுழைந்தனர். வடிவேலுவின்
இதயம் வேகமாகத் துடித்தது. அவர் அறைக்குள் பார்க்க முயன்றார். ஆனால் உடனே திரை இழுத்து
மூடப்பட்டது. சில நொடிகளுக்குப் பிறகு கண்ணாடிக் கதவும் மெதுவாக மூடப்பட்டது.
அந்தக் கதவுக்கு மறுபுறம் என்ன நடந்தது என்பதை
அவரால் பார்க்க முடியவில்லை.
அவர்
கதவின் அருகே நின்றபடியே கண்ணீருடன் அதைப் பார்த்துக்கொண்டிருந்தார். “ஒரு தடவை... ஒரே ஒரு
தடவை... ‘அப்பா’ன்னு கூப்பிடு மா...” என்று உதடுகள் மட்டும் நடுங்கின. அந்த இரவு மருத்துவமனை
வழித்தடத்தில் அவரது குரல் மட்டும் கரைந்து போனது.
பெயர் : கஸ்தூரி த/பெ வடிவேலு
மின்னஞ்சல் : [email protected]
விரிவுரையாளர் : இணைப்பேராசிரியர் முனைவர் முனீஸ்வரன் குமார்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



