கூட பிறந்தவள் - சிறுகதை

top-news
FREE WEBSITE AD

கூட பிறந்தவள்

அந்தச் சிறிய ஓட்டு வீட்டின் முற்றத்தில் மல்லிகைப் பந்தல் பூத்துக் குலுங்கியது. அதன் நறுமணம் அந்த வீட்டின் வறுமையைத் தற்காலிகமாக மறக்கடித்தது. சரஸ்வதிக்கு அப்போது பதினான்கு வயது. அவளது தங்கை மீனாவுக்கு வெறும் நான்கு வயது. விதியின் கொடூரக் கரங்கள் அவர்களின் பெற்றோரைக் கார் விபத்தின் மூலம் பறித்துக்கொண்டபோது, சரஸ்வதியின் கைகளில் எஞ்சியிருந்தது அழுகை மட்டுமே. ஆனால், பசியில் அழும் தங்கையின் முகம் அவளை அழ விடவில்லை. அன்றிலிருந்து சரஸ்வதி அக்காவாக இருக்கவில்லை; அம்மாவாக மாறினாள். தன் இளமையைத் தொலைத்து, கூலி வேலை செய்து, மீனாவை ஒரு மலரைப் போல வளர்த்தெடுத்தாள். சரஸ்வதியின் உலகமே மீனாதான். மீனாவுக்கு ஒரு சிறு காய்ச்சல் என்றாலும் சரஸ்வதியின் ஜீவனே போய்விடும். "அக்கா... நீதான் என் சாமி!" என்று மீனா கட்டிக்கொள்ளும் போதெல்லாம், சரஸ்வதி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

காலம் உருண்டோடியது. சரஸ்வதிக்கு இருபத்தியிரண்டு வயதானபோது, பக்கத்து ஊரைச் சேர்ந்த முகுந்தன் என்பவனுடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. முகுந்தன் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவன ஊழியன். திருமணத்திற்குப் பின்னும் மீனா தன் அக்காவோடுதான் இருந்தாள். ஆரம்பத்தில் எல்லாம் சுமுகமாகவே சென்றது. ஆனால், ஆண்டுகள் பல கடந்தும் சரஸ்வதிக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. முகுந்தனின் வீட்டில் இருந்தும், உறவினர்களிடம் இருந்தும் ஏச்சுகளும் பேச்சுகளும் வரத் தொடங்கின. "மலடி... இவளைக் கட்டிக்கிட்டு என் வம்சம் விளங்காம போயிருச்சு" என்று முகுந்தனின் தாய் சரஸ்வதியின் நெஞ்சில் ஈட்டி பாய்ச்சினாள்.

சரஸ்வதிக்குக் குழந்தைகள் என்றால் கொள்ளைப் பிரியம். ஒரு முறையாவது 'அம்மா' என்று ஒரு குழந்தை தன்னை அழைக்காதா என்று ஏங்கினாள். நாளுக்கு நாள் வீட்டில் பதற்றம் அதிகரித்தது. முகுந்தனும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானான். ஒரு நாள் இருவரும் மருத்துவப் பரிசோதனைக்குச் சென்றனர். முடிவு சரஸ்வதியின் தலையில் இடியாக இறங்கியது. சரஸ்வதியின் உடலில் உள்ள குறைபாடே குழந்தை பிறக்காமைக்குக் காரணம் என்று மருத்துவர் திட்டவட்டமாகக் கூறிவிட்டார். அன்று இரவு வீடே நரகமாக மாறியது. முகுந்தன் குடித்துவிட்டு வந்து சரஸ்வதியை வசைபாடினான்.

"உன்னாலதான் என் வாழ்க்கை பாழாச்சு! உனக்குக் குழந்தை பெத்துக்கவே தகுதியில்ல. உன்னோட வாழ எனக்குப் பிடிக்கல!" என்று கத்தினான் முகுந்தன்.

வாக்குவாதங்கள் முற்றி, இறுதியில் முகுந்தன் சரஸ்வதியை விவாகரத்து செய்ய முடிவெடுத்தான். சட்டப்பூர்வமாக இருவரும் பிரிந்தனர். தன் கணவனையும், தாயாகும் கனவையும் இழந்து நிலை குலைந்து நின்ற சரஸ்வதியை அவளது தங்கை மீனாதான் தாங்கிப் பிடித்தாள். "அக்கா... கவலைப்படாதே. நான் இருக்கேன் உனக்கு. காலம் எல்லாத்தையும் மாத்தும்" என்று ஆறுதல் கூறினாள் மீனா. இப்போது மீனா கல்லூரியில் இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருந்தாள்.

விவாகரத்துப் பிரிவின் சோகத்திலிருந்து சரஸ்வதி மெல்ல மெல்ல மீண்டு வர முயன்றாள். ஆனால், அவளுக்குத் தெரியாத ஒரு இரகசியம் மீனாவிடம் இருந்தது. மீனா கல்லூரியில் படிக்கும் ஒரு இளைஞனைக் காதலித்து வந்தாள். அந்த விஷயம் சரஸ்வதிக்குத் தெரியாது. நாட்கள் நகர்ந்துகொண்டிருக்க, ஒரு நாள் மீனாவுக்குத் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. தலைச்சுற்றலும் வாந்தியும் அவளை வாட்டின. சந்தேகமடைந்த மீனா, சரஸ்வதிக்குத் தெரியாமல் வீட்டிலேயே சுய பரிசோதனை செய்து பார்த்தாள். முடிவு 'பாசிட்டிவ்' என்று காட்டியது. அவள் அதிர்ச்சியில் உறைந்தாள்.

பயந்துபோன மீனா தன் காதலனைச் சந்தித்து விஷயத்தைக் கூறினாள்.

"நான் கர்ப்பமா இருக்கேன்... இப்ப என்ன பண்றது? எங்க அக்காவுக்குத் தெரிஞ்சா தாங்கமாட்டாங்க!" என்று அழுதுகொண்டே கூறினாள்.

ஆனால், அந்தப் பையனோ பொறுப்பற்றுக் கூறினான், "இப்ப இந்த அழுத்தத்தை என்னால எடுத்துக்க முடியாது. நீ உடனே இந்தக் கருவைக் கலைச்சிடு. நமக்குள்ள இனி எந்த உறவும் இல்ல!" என்று கூறிவிட்டு அவளைக் கைவிட்டான்.

தனித்துவிடப்பட்ட மீனாவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. தன் வயிற்றுக்குள் துளிர்த்திருக்கும் ஒரு ஜீவனைக் கொல்ல அவளுக்கு மனமில்லை. அதே சமயம், திருமணத்திற்கு முன்பு கர்ப்பமானதை இந்தச் சமூகம் எப்படிப் பார்க்கும் என்ற பயமும் அவளை வாட்டியது. வேறு வழியின்றி, அழுதுகொண்டே தன் அக்கா சரஸ்வதியிடம் சரணடைந்தாள்.

"அக்கா... என்னை மன்னிச்சிடு. நான் தப்பு பண்ணிட்டேன். ஒருத்தனை நம்பி ஏமாந்துட்டேன். நான் கர்ப்பமா இருக்கேன் அக்கா!" என்று கதறினாள்.

சரஸ்வதியின் காலடி மண் நழுவியது. "என்னடி சொல்ற? கல்யாணத்துக்கு முன்னாடியா? ஐயோ... இந்த ஊர் உலகம் நம்மள பத்தி என்ன பேசும்? நான் உன்னை எப்படி வளர்த்தேன்?" என்று சரஸ்வதி தலையில் அடித்துக் கொண்டு அழுதாள். கோபமும் வேதனையும் அவளை உலுக்கின.

சில நாட்களுக்குப் பின், மீனா சோகத்துடன் கூறினாள், "அக்கா... நான் இந்த வாரம் மருத்துவமனைக்குப் போய் இந்தத் தப்பைக் கலைச்சிடறேன்."

உடனே சரஸ்வதி பதறிப்போய் அவளது கைகளைப் பற்றிக்கொண்டாள்
. சரஸ்வதியின் மனதில் ஒரு புதிய எண்ணம் உதித்தது. அவளது நீண்ட நாள் குழந்தை ஏக்கம் விழித்துக்கொண்டது.

"வேண்டாம் மீனா! கருவைக் கலைக்கிறது மகா பாவம்டி. ஒரு உயிரைக் கொல்ற பாவம் நமக்கு வேண்டாம். உனக்காச்சும் குழந்தை பெத்துக்கிற பாக்கியம் இருக்கே... எனக்கு அதுவும் இல்லையே! நீ ஒன்னு பண்ணு... இந்த உலகத்துக்குத் தெரியாம
இந்தக் குழந்தையைப் பெத்து என்கிட்ட கொடுத்துடு. நானே இதைக் தத்தெடுத்து என் பிள்ளையா வளர்க்கிறேன். எனக்கு 'அம்மா'ங்குற தகுதியை இந்தக் குழந்தை தரட்டும்!" என்று கண்களில் கண்ணீருடன் வேண்டினாள் சரஸ்வதி.

மீனாவும் அதற்குச் சம்மதித்தாள். ஊர் கண்ணுக்குத் தெரியாமல், அவர்கள் ஒரு மறைவான இடத்திற்குச் சென்று தங்கி, மீனாவுக்குப் பிரசவம் பார்த்தனர். அழகான ஒரு ஆண் குழந்தை பிறந்தது. திட்டமிட்டபடி, சரஸ்வதி இந்தக் குழந்தையைத் தத்தெடுத்துத் தன் சொந்த மகனைப் போல வளர்க்கத் தொடங்கினாள். அவளுக்குத் தாயாக இருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. மீனா குழந்தையை அக்காவிடம் ஒப்படைத்துவிட்டு, தன் மேற்படிப்பைத் தொடர்வதற்காகத் தூரத்து நகரத்திற்குச் சென்றாள். குழந்தை வளர வளர, சரஸ்வதியின் உலகமே அவனாக மாறினான்.

ஆனால், மீனா தன் அக்கா சரஸ்வதியிடமிருந்து ஏதோ ஒரு பெரிய விஷயத்தை மறைக்கிறாள். ஒவ்வொரு முறையும் குழந்தை சரஸ்வதியை "அம்மா" என்று அழைக்கும்போது, மீனாவின் இதயம் குற்ற உணர்வில் சுருங்கியது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்று பலமுறை நினைத்தாள். ஆனால், அக்காவின் மகிழ்ச்சியைக் கெடுக்க அவளால் முடியவில்லை.

இரண்டு ஆண்டுகள் கடந்தன. குழந்தை 'அம்மா' என்று மழலை மொழியில் அழைக்கும்போதெல்லாம் சரஸ்வதி பரவசமடைந்தாள். விடுமுறைக்காக மீனா வீட்டிற்கு வந்திருந்தாள். அன்று மதியம், மீனா வீட்டின் மேல் மாடியில் உள்ள குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தாள். அவளது தொலைபேசியை எதிர்பாராதவிதமாக கீழ் வீட்டு மேசையிலேயே மறந்து வைத்துவிட்டுச் சென்றிருந்தாள். சரஸ்வதி குழந்தைக்குப் பாலூட்டித் தூங்க வைத்துக் கொண்டிருந்தாள்.

திடீரென மீனாவின் தொலைபேசி தொடர்ந்து ஒலிக்கத் தொடங்கியது. புலனத்தில்  அடுத்தடுத்து குறுஞ்செய்திகள் வந்த வண்ணமிருந்தன. சரஸ்வதி சாதாரணமாகத் தொலைபேசியை எடுத்தாள். திரையில் தெரிந்த பெயர் அவளது இதயத் துடிப்பை நிறுத்தியது. அது அவளது முன்னாள் கணவன் 'முகுந்தன்' பெயர்!

'ஏன் முகுந்தன் மீனாவுக்கு மெசேஜ் அனுப்புகிறான்?' என்ற குழப்பத்துடன் சரஸ்வதி அந்தத் திரையைத் திறந்தாள். அங்கு வந்திருந்த குறுஞ்செய்திகள் அவளது உலகத்தையே தலைகீழாக மாற்றின.

"மீனா... என் மகனைப் பார்க்கணும் போல இருக்கு. சரஸ்வதிக்கு இன்னும் சந்தேகம் வரலதானே? நாம பண்ணின ரகசியம் அவளுக்குத் தெரிஞ்சா தாங்கமாட்டாள். சீக்கிரம் குழந்தையைக் கூட்டிட்டு என்னைப் பார்க்க வா!" - இப்படிக்கு முகுந்தன்.

சரஸ்வதியின் கைகள் நடுங்கின. மூச்சு முட்டியது. ஏதோ ஒரு வெறியில் அவள் மீனாவின் தொலைபேசியின் 'கேலரி'க்குள் சென்றாள். அங்கு ஒரு ரகசிய ஃபோல்டரில் சில வீடியோக்கள் இருந்தன. அதைத் தட்டிப் பார்த்த சரஸ்வதிக்குக் கண்களிலிருந்தும் காதுகளிலிருந்தும்  இரத்தம் வருவது போலிருந்தது.

அந்த வீடியோக்களில்
... சரஸ்வதிக்கும் முகுந்தனுக்கும் திருமணம் ஆன சில நாட்களிலிருந்தே, முகுந்தனும் மீனாவும் இரகசியத் தொடர்பு வைத்திருந்த காட்சிகள் இருந்தன! சரஸ்வதி வீட்டில் இல்லாத நேரங்களில் அவர்கள் இருவரும் ஒன்று கூடி மகிழ்ந்திருந்த அதிர்ச்சியூட்டும் சான்றுகள் அவை. சரஸ்வதிக்குக் குழந்தை பிறக்காது என்ற மருத்துவ அறிக்கை வந்த அன்றே, முகுந்தன் மீனாவுடன் படுத்து உருண்டதன் விளைவுதான் இந்தத் தப்புக் குழந்தை! சரஸ்வதியை மலடி என்று வீட்டை விட்டுத் துரத்திவிட்டு, தங்கை பெற்ற கள்ளக் குழந்தையை அவளிடமே கொடுத்து வளர்க்க வைத்த நாடகம் துல்லியமாகப் புரிந்தது.

சரஸ்வதியின் கண்களில் பாசம் மறைந்து, சாத்தானின் வெறி குடியேறியது. அவளது உடம்பில் இரத்தம் கொதித்தது. "நான் தாயாக வளர்த்த என் தங்கை... என் புருஷனோட படுத்துக் கிடந்தவளா? என் வயித்துல நெருப்பை அள்ளிப் போட்டுட்டு, அவங்க பெத்த பாவத்தை என்கிட்டயே கொடுத்து வளர்க்க வச்சிருக்காளே!" என்று பற்களைக் கடித்தாள். அவளுக்குத் தன் தங்கையின் மீதும், முன்னாள் கணவன் மீதும் எக்கச்சக்கமான வஞ்சமும் கோபமும் தலைக்கேறியது.மேல் மாடியில் குளியலறையில் இருந்து தண்ணீர் விழும் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. சரஸ்வதி மெதுவாகத் தொட்டிலின் அருகில் சென்றாள். அவளது முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. கண்கள் சிவந்திருந்தன. அருகில் இருந்த மெத்தென்ற தலைகாணியைக் கைகளில் எடுத்தாள்.

அவளது பார்வை மெல்லத் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த அந்தக் குழந்தையின் மீது விழுந்தது. அது முகுந்தனின் சாயல்... மீனாவின் இரத்தம்! அவளுக்கு அந்தக் குழந்தை இப்போது ஒரு குழந்தையாகத் தெரியவில்லை; துரோகத்தின் மொத்த வடிவமாகத் தெரிந்தது. அருகில் இருந்த தலைகாணியைக் கைகளில் எடுத்தாள். அவளது கைகள் குழந்தையை நோக்கி நீண்டன. தூங்கிக் கொண்டிருந்த பிஞ்சு குழந்தையின் முகத்தின் மீது அந்தத் தலைகாணியை வைத்துத் தன் முழு பலத்தையும் திரட்டி அமுக்க வேண்டும் என்று தித்தாதமித்துக் கொண்டிருந்தாள்.  ஆனால், அடுத்த நொடி... இரண்டு வருடங்களாகத் தன்னை 'அம்மா' என்று அழைத்து, தன் மார்பில் படுத்துறங்கிய அந்தப் பிஞ்சு முகத்தைப் பார்த்ததும் அவளது தாய்மை அவளைத் தடுத்தது. "தவறு செய்தவர்கள் அவர்கள்... இந்த அப்பாவி ஜீவன் என்ன செய்தது?" என்று தலைகாணியைக் கீழே போட்டுவிட்டு விம்மி அழுதாள்

அப்போது குளித்து முடித்துவிட்டு, ஈரத்தலையைத் துடைத்துக்கொண்டே மாடியிலிருந்து கீழே இறங்கி வந்த மீனா, "அக்கா... குழந்தை  தூங்கிட்டானா?" என்று கேட்டபடியே உள்ளே நுழைந்தாள்.

சரஸ்வதி மெதுவாகத் திரும்பினாள். அவளது கையில் மீனாவின் தொலைபேசி ஒளிர்கொண்டிருந்தது. மீனாவின் முகம் வெளுத்தது.

"அக்கா... அது... வந்து..." என்று மீனா நடுங்கினாள்.

"எல்லாம் தெரிஞ்சிடுச்சு மீனா! மலடின்னு என்னை வீட்டை விட்டுத் துரத்திட்டு, நீயும் அவனும் சேர்ந்து பெத்த பாவத்தை என்கிட்டயே கொடுத்து வளர்க்க வச்சீங்களே... எவ்வளவு பெரிய துரோகம்!" என்று சரஸ்வதி கத்தினாள்.

குழந்தை சத்ததில் எழுந்துவிட்டது
. தொட்டிலில் இருந்த குழந்தை மெதுவாகக் கண் விழித்து, சரஸ்வதியைப் பார்த்து, "அம்மா..." என்று கைகளை நீட்டியது. சரஸ்வதி திகைப்புடன் மீனாவையும், தன் கைகளில் வளரும் குழந்தையையும் மாறி மாறிப் பார்த்தாள். தவறு, தண்டனை, பாசம் ஆகியவற்றுக்கு இடையேயான எல்லைக் கோடு அங்கே முற்றிலுமாகக் கலைந்து போயிருந்தது. சரஸ்வதி மெதுவாகத் தொட்டிலின் அருகில் சென்றாள். அவளது கண்கள் பனித்திருந்தன. துரோகம், பழிவாங்கல் என்ற எண்ணங்களையெல்லாம் தாண்டி, அந்தப் பிஞ்சு உடம்பின் அசைவு அவளுக்குள் இருந்த உண்மையான தாயை முழுமையாக மீட்டெடுத்தது. மெதுவாகக் குழந்தையைத் தன் கைகளில் அள்ளி, நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள். அந்தப் பிஞ்சு கைகள் சரஸ்வதியின் கழுத்தை இறுக்கமாகக் கட்டிக்கொண்டன.

சரஸ்வதி மீனாவை வீட்டை விட்டு வெளியேறச் சொன்னாள்.
"நீ என் தங்கை தான். ஆனால் என் நம்பிக்கையைக் கொன்றுவிட்டாய். உன்னை மன்னிக்க நான் பல வருடங்கள் எடுக்கலாம். இந்தக் குழந்தை என் மகன். ஆனால் நீ இனி இந்த வீட்டில் இருக்க முடியாது." என்று சொல்லிவிட்டு தன் தங்கையை வீட்டை விட்டு தூரத்தினாள்.

பெற்றோர் இறந்த நாளிலிருந்து, மீனாவைத் தன் மகளாகத்தான் நினைத்திருந்தாள் சரஸ்வதி. ஆனால், அன்று தான் அவளுக்குப் புரிந்தது. கூடப் பிறந்தவள் எல்லாம் கூடவே இருப்பவள் அல்ல.


பெயர் : ஷக்ரீனா த/பெ மதியழகன். 
மின்னஞ்சல் : [email protected]
விரிவுரையாளர் : இணைப்பேராசிரியர் முனைவர் முனீஸ்வரன் குமார் 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Ramk

Wow.. fantastic story👏👏👏

Sharwesuwary

Interesting story

Shakthee

சிறப்பான கதை 👏🏽

Yuktha

The story is too good ❤️, keep writing