அன்பே பிரியாதே - சிறுகதை

top-news
FREE WEBSITE AD

அன்பே பிரியாதே.

“முடியாது! நீ என்னதான் சொன்னாலும் என்னால் உன் காதலை ஏற்றுக்கொள்ள முடியாது மாதவி! ஒழுங்கா நான் பாக்குறேன் பையன கல்யாணம் பண்ணிக்கோ...இல்லேன நடக்குறதே வேறே!” என்று ஆவேசத்துடன் கூறிவிட்டுச் சென்றார் திரு லிங்கம்.

அழுதுக் கொண்டே செய்வதறியாது பாரதிக்கு அழைத்தாள் மாதவி.

“ஹெலோ, பாரதி. என் வீட்டுலே நம்ப காதலுக்கு ஒத்துக்கலை. இப்போ என்ன பன்றது?” என்று அழுதபடி கூறினால் மாதவி.

“அழாதே மாதவி. நான் இருக்கேன். சரி உன்னுடைய பொருட்களையெல்லாம் எடுத்துக்கொள். நான் இப்போ வந்து உன்னை என் வண்டிலே ஏத்திக்கிறேன்”, என்று பதிலளித்தான் பாரதி.

மாதவியின் அறை கடிகாரம் நள்ளிரவு மணி 1:50-ஐ காட்டியது. ட்ரிங்...ட்ரிங்... என்று மாதவியின் தொலைபேசி அலறியது.

“ஹலோ”, என்றாள்.

“மாதவி, நான் உன் வீட்டு வாசலில் தான் நிக்கிறேன். சீக்கிரம் வா,” என்றான் பாரதி.

இரவு நேரந்தில் திருடுவதற்கு வீடு புகுந்த திருடன் போல் பதுங்கி பதுங்கி தன் வீட்டு வாசல் கதவைத் திறந்து, வெளியே சென்றாள் மாதவி. தன்னுடைய பையை பாரதியிடம் கொடுத்துவிட்டு, அவன் பின்புறத்தில் ஏறி அமர்ந்துக் கொண்டாள்.இருவரும் பயணிக்கத் தொடங்கினர். அந்த பயணம் முற்றிலும் மௌனமாகவே இருந்தது. இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. வெகு நேர பயணத்திற்குப் பிறகு, இருவரும் ஒரு மாமாக் கடையில் ஓய்வெடுக்க அமர்ந்தனர். அப்போதுதான், மாதவியின் கண்களில் இருந்து கண்ணீர் அருவியாக  கொட்ட ஆரம்பித்தது. அவள் எதுவும் பேசவில்லை. ஆனால், கண்ணீர் மட்டும் நிற்காமல் கொட்டிக் கொண்டிருந்தது. அதே சமயம் தன் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த மஞ்சள் கயிற்றை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள்.

“அழாதே மாதவி. இனி இதுதான் நம்முடைய வாழ்க்கை. அடி எடுத்து வைத்து விட்டோம். இனி பின்வாங்கப் போவதில்லை. என் இறுதி மூச்சு உள்ளவரை உன்னைக் கண்கலங்காமல் பார்த்துக்கொள்வது என் பொறுப்பு,” என்று கூறியபடி தன் மனைவியின் தலையைத் தடவினான் பாரதி.

இரண்டாண்டுகள் உயிருக்கு உயிராகக் காதலித்துவிட்டு
, வீட்டில் பெற்றோர் காதலுக்குச் சம்மதிக்கவில்லை என்ற காரணத்தால், இருவரும் கெடாவிலிருந்து பேராக்கிற்கு வந்து, சாலை ஓரத்தில் அமைந்திருந்த ஒரு முருகன் கோயிலில் எளிமையாகத் திருமணம் செய்து கொண்டனர். அவர்களிடம் அதிகப் பணம் இல்லை. எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற பயம் இருந்தாலும், ஒருவர்மீது ஒருவர் வைத்திருந்த காதல் அவர்களுக்கு தைரியத்தை அளித்தது.திருமணத்திற்குப் பிறகு தங்குவதற்காக வீடு தேடி அலைந்தனர். உச்சி வெயிலின் கொடுமை அவர்களை வாட்டியது. பல வீடுகளில் மறுப்பு கிடைத்தது. சிலர் திருமணச் சான்றிதழைக் கேட்டனர். சிலர் முன்பணம் அதிகமாகக் கேட்டனர். சோர்ந்து போன நிலையில் ஒரு சிறிய வாடகை வீட்டை இறுதியாக எப்படியோ தேடிக் கண்டுபிடித்தனர்.அந்த வீட்டின் முன் கதவில் “ரூமா சேவா – ஹுபுங்கி அகிலன்” என்று எழுதப்பட்ட பலகை தொங்கிக் கொண்டிருந்தது. அதில் கொடுக்கப்பட்டிருந்த எண்ணுக்கு அழைத்தபோது, சில நிமிடங்களில் சிரித்த முகத்துடன் வந்தான் அகிலன். அவர்களின் நிலையை அறிந்ததும், எந்தவித சந்தேகமும் இல்லாமல் வீட்டை வாடகைக்குக் கொடுத்தான்.

புது தம்பதிகள் போலே தெரிகிறீர்கள். ஏதாவது உதவி வேணும்னா தயங்காம சொல்லுங்க. என் வீடு இங்கே பக்கத்துலேதான் இருக்கு,” என்றான் அகிலன்.

அந்த நாளிலிருந்து அகிலனும் அவனது மனைவி இந்திராவும், பாரதிக்கும் மாதவிக்கும் குடும்பத்தினரைப் போன்றவர்களாக மாறினர்.சில நாட்களுக்குப் பிறகு பாரதிக்கு ஒரு தொழிற்சாலையில் வேலை கிடைத்தது. சம்பளம் அதிகம் இல்லை. ஆனால் நேர்மையாக உழைத்தால் வாழ்க்கையை முன்னேற்ற முடியும் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது.ஒவ்வொரு நாளும்  காலையில் வேலைக்குச் செல்வதற்கு முன், மாதவிக்கு தேவையான அனைத்தையும் செய்து வைத்துவிட்டுச் செல்வான். மாலையில் வீடு திரும்பும்போது,  மாதவிக்காக ஏதேனும் ஒரு பரிசை வாங்கி வந்து அவளைத் தன்னால் முடிந்த அளவு மகிழ்ச்சிப்படுத்துவான்.

எதுக்கு இவ்வளவு செலவு பண்ணுறீங்க?” என்று மாதவி கேட்டால்,

உன் முகத்துல இந்த சிரிப்பைப் பார்க்கத்தான்,” என்று சிரித்தபடி பதில் கூறுவான்.

நாட்கள் மாதங்களாக மாறின. ஒரு நாள் மருத்துவரிடம் பரிசோதனை செய்து வந்த மாதவி மகிழ்ச்சியுடன் வீட்டிற்குள் நுழைந்தாள்.

பாரதி!” என்று அவள் அழைத்த குரலில் ஒரு புதுமையான உற்சாகம் இருந்தது.

என்ன மாதவி?” என்றான் பாரதி

நீங்க அப்பா ஆகப் போறீங்க.” என்று புன்னகை பூத்த முகத்துடன் கண்களில் ஆனந்தக் கண்ணீருடன் நின்றுக் கொண்டிருந்தாள் மாதவி.

ஒரு கணம் பேச முடியாமல் நின்றான் பாரதி. கண்களில் கண்ணீர். முகத்தில் சிரிப்பு. பின்னர் மகிழ்ச்சியில் அவளைத் தூக்கிச் சுற்றினான்.மாதவி கர்ப்பமாக இருந்த நாட்களில் பாரதி அவளை கண்களில் வைத்து பாதுகாத்தான். அவள் சாப்பிடும் உணவு முதல் ஓய்வு எடுக்கும் நேரம் வரை அனைத்தையும் கவனித்தான். இவ்வளவு நாட்களாக ஒரு வேலையை மட்டும் செய்துக் கொண்டிருந்தவன், மாதவியின் கர்ப்பத்தைப் பற்றி அறிந்ததிலிருந்து, மேலும் ஒரு வேலையைத் தேட ஆரம்பித்தான். வேண்டாம் என மாதவி பலமுறை கூறியும் கேட்காமல், இரவு நேரங்களில் பூட் டெலிவரி செய்வான்.

ஆனால் வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஒரு நாள் அகிலன் பாரதியைச் சந்தித்தான்.

ஒரு நல்ல வேலை வாய்ப்பு இருக்கு. சம்பளம் இங்க கிடைக்கிறத விட மூணு மடங்கு அதிகம். ஆனால், சில மாதங்கள் வெளியூர்ல வேலை செய்யணும்,” என்றான்.

முதலில் பாரதி மறுத்துவிட்டான்.

இப்போ மாதவியை விட்டுட்டு போக முடியாது.” என்றான்.

ஆனால் அடுத்த சில நாட்களில் பலமுறை யோசித்தான். குழந்தையின் எதிர்காலம், நல்ல வீடு, நல்ல கல்வி, சேமிப்பு, இவை எல்லாம் அவன் மனதில் ஓடின. பாரதி தன்னிடமிருந்து எதோ ஒன்றை மறைப்பதை அறிந்த மாதவி பாரதியிடம் என்னவாயிற்று என்று கேட்டாள்.

மாதவி, இது நம்ம குழந்தைக்காகத்தான். சில மாதங்கள் கஷ்டப்பட்டா நம்ம வாழ்க்கை நல்லா இருக்கும்.” என்றான் பாரதி.

மாதவியின் கண்களில் கண்ணீர் துளிகள் மின்னின.

எனக்கு பயமா இருக்கு.” என்றாள். அவளால் வேறு எதுவும் பேச இயலவில்லை.

நான் கண்டிப்பா டெலிவரி டேட்டுக்கு முன்னாடி வந்துடுவேன்.”என்று மாதவியிடம் வாக்குறுதி அளித்தான் பாரதி.

அவள் மெதுவாகத் தலை அசைத்தாள். இரண்டு நாட்கள் கழித்து,  “மாதவி நான் போயிட்டு வரேன். கண்டிப்பா டெலிவரி டே அப்போ நான் உன் பக்கதுலே இருப்பேன்,” என்று கூறிவிட்டு தன் நிறைமாத மனைவியைக் கட்டியனைத்துவிட்டு அகிலனை நோக்கிச் சென்றான் பாரதி.

“மாதவியை நல்லா பாத்துக்கொங்கே,” என்று அகிலனிடம் கூறிவிட்டு, தான் பூக் செய்திருந்த கிராப் வண்டியில் ஏறிச் சென்றான் பாரதி.

வயிற்றில் குழந்தையுடன், கலங்கிய கண்களுடன் தன் கணவனை வழியனைப்பிவைத்து விட்டு, வீட்டினுள் சென்று அமர்ந்தாள் மாதவி.

“கவலைப்படாத மாதவி. அதான் நாங்க இருக்கோம்லே உனக்கு இங்கே. பாரதி உங்க ரெண்டு பெரூடே எதிர்காலத்துக்காகதான் இப்படி உழைக்கிறான்,” என்று மாதவிக்கு ஆறுதல் கூறினாள் அகிலனின் மனைவி இந்திரா.

பாரதி வெளியூருக்குப் புறப்பட்டுச் சென்ற பிறகு
, மாதவிக்கு அகிலனும் இந்திராவும் பெரும் துணையாக இருந்தனர். இந்திரா தினமும் வந்து அவளைப் பார்த்துச் செல்வாள். அவளுக்குச் சமைத்து கொடுப்பாள். மருத்துவரிடம் அழைத்துச் செல்வாள். ஒரு நாள் மாதவிக்கு  வளைகாப்பு விழா நடத்த முடிவு செய்தனர்.மாதவியின் பெற்றோர்கள் வரவில்லை. பாரதியின் பெற்றோர்களும் வரவில்லை. ஆனால் அகிலனும் இந்திராவும் அந்தக்  குறையே தெரியாமல் மாதவிக்கு அவ்விழாவை  சிறப்பாக நடத்தினர். மாதவி வளையல்களின் ஓசையைக் கேட்டபோது, தன் கணவன் அருகில் இல்லாததை நினைத்து கண்கலங்கினாள்.

அழாதே,” என்று இந்திரா ஆறுதல் கூறினாள்.

இந்த நேரத்துல அவர் என் பக்கத்துல இருந்திருக்கணும்.” என்றான் மாதவி கலங்கிய கண்களுடன்.

அவன் உங்களுக்காகத்தான் உழைக்கிறான்.” என்றான் அகிலன்.

மாதவி அமைதியாக புன்னகைத்தாள். காலம் வேகமாக நகர்ந்தது.

ஜூலை 15. அன்று காலை வழக்கம்போல் எழுந்து, வீட்டு வேலைகளைச் செய்துக் கொண்டிருந்தாள் மாதவி.

திடீரென்று வயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டது போலும்.

அம்மா!” என்று அலறினாள் மாதவி.

அகிலனும் இந்திராவும் உடனடியாக அவளை அருகிலிருந்த மருத்துவமனைக்குக் கொண்டுச்  சென்றனர்.

மருத்துவமனை அறைக்குள் கொண்டு செல்லப்பட்ட மாதவி, வலியால் துடித்துக் கொண்டிருந்தாள்.

என் கணவரை பார்க்கணும்...” என்று மீண்டும் மீண்டும் கூறினாள்.

அதே நேரத்தில் தகவல் கிடைத்தவுடன் பாரதி அவசரமாக ஊருக்குப் புறப்பட்டான்.

வாகன நெரிசல், மழை, சாலைப் பிரச்சினைகள் எதுவும் அவனை விடவில்லை.

கடவுளே, என் மனைவியையும் குழந்தையையும் காப்பாத்து,” என்று தொடர்ந்து வேண்டிக் கொண்டே வந்தான்.

மருத்துவமனையில் நேரம் நகர்ந்தது.

பிரசவ அறையில் முப்பது நிமிடங்களுக்கு மாதவியின் அலறலுக்குப் பிறகு கேட்டது குழந்தையின் முதல் அழுகை. அது மருத்துவமனை முழுவதும் எதிரொலித்தது.

அந்த ஒலியைக் கேட்டதும் அகிலனும் இந்திராவும் மகிழ்ச்சியில் கண்கலங்கினர். டாக்டர் குழந்தையைப் பிரசவ அறையிலிருந்து வெளியே கொண்டு வந்து இந்திராவின் கையில் கொடுத்தார். அழகான பெண் குழந்தை. அகிலன் இந்திராவின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் கொட்டியது.

“மன்னிக்கணும். குழந்தை நலமா இருக்கு. ஆனால், தாயை எங்களால காப்பாத்த முடியல.”என்று கூறிவிட்டு சென்றார். அந்த வார்த்தைகள் மின்னல் போல் தாக்கின. இந்திரா அழத் தொடங்கினாள். கையில் பச்சைக் குழந்தை வேறு. அகிலன் பேச முடியாமல் நின்றான். கண்களிலிருந்து கண்ணீர் மட்டும் நிற்காமல் கொட்டியது.

அகிலனின் கைப்பேசி அலறியது. பாரதி தான்.

“இன்னும் ஒரு மணி நேரத்திலே வந்துருவேன் அகிலன்”, என்றான் பாரதி.

“சரி பாரதி. நீ வீட்டுக்கு வந்துரு”, என்று கூறிவிட்டு பிரசவ அறையிலிருந்து மாதவியை மோர்சுரிக்கு தள்ளிச் செல்லும் தாதியர்களைப் பின்தொடர்ந்தான். மறுபக்கம் இந்திரா அழுதபடியே குழந்தையின் பிறப்புச் சான்றிதழையும் மாதவியின் இறப்புச் சான்றிதழையும் எடுக்க கௌந்தருக்குச் சென்றாள்.

சில மணி நேரங்களுக்குப் பிறகு பாரதி வீட்டை அடைந்தான். வீட்டின் முன் கூட்டம் இருந்தது. அனைவரும் குழந்தையை தான் பார்க்க வந்திருக்கிறார்கள் என்று நினைத்தபடி, புன்னகை முகத்துடன் வீட்டினுள் நுழைந்தான். நுழைந்தவன் ஏனோ பொத்தென்று கீழே விழுந்தான். அவன் கண்கள் உறைந்துபோயின.

அவன் நேசித்த மாதவி சவப்பெட்டியில் அமைதியாக படுத்திருந்தாள். உடல் முழுதும் வெள்ளைத் துணி. சுற்றிலும் சாம்பிராணி புகை. மாதவியின் தலைக்கு நேராக ஒரு காமாச்சி அம்மன் விளக்கு எரிந்துக் கொண்டிருந்தது.

மாதவி!” என்று கதறி அழுதான். அவன் கண்ணீருக்கு எல்லையே இல்லை.

நான் வந்துட்டேன் மாதவி... எழுந்திரு... நான் வந்துட்டேன்...”என்று கூறிபடி தரையை அடித்து அடித்து அழுதான். ஆனால் அவள் எழுந்திருக்கவில்லை.

அழுதுகொண்டிருக்கும் பாரதியின் கையில் அந்தப் பிஞ்சுக் குழந்தையைக் கொடுத்தான் அகிலன். கண்ணீரால் மங்கிய பார்வையுடன் குழந்தையைப் பார்த்தான் பாரதி. அவனின் கண்ணீர் துளிகள் குழந்தையின் முகத்தில் பட்டுக் கண் முழித்துப் பார்த்தது அந்த இரு சிறு விழிகள்.




பெயர் : விஷாலினி த/பெ மோகன் குமார்
மின்னஞ்சல் : [email protected]
விரிவுரையாளர் : இணைப்பேராசிரியர் முனைவர் முனீஸ்வரன் குமார் 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *