வியர்வையின் வாசம் - சிறுகதை
- Writer Tamil
- 08 Jul, 2026
வீடே நிசப்தத்தில் மூழ்கியிருக்க,
சமையலறையில் மறுநாளுக்கான ஆயத்தப் பணிகளை முடித்துவிட்டு கலைப்போடு
அறைக்குள் நுழைந்தார் மாலா. உடல் சோர்விலும் விநாயாக சதுர்த்தி விசேஷமும், கணவனுக்கும் மகனுக்கும் செய்ய வேண்டிய கடமைகளுமே அவரது மனதில்
ஓடிக்கொண்டிருந்தன. கட்டில் ஓரத்தில் படுத்திருந்த சிவாவை மெதுவாகத் தட்டி,
"ஐயா... எனக்கு நாளைக்கு காலையில நாலு மணிக்கெல்லாம் அலாரம்
வச்சிருயா. உனக்கும் அப்பாக்கும் சாப்பாடு செய்யணும். நாளைக்கு விநாயகர் சதுர்த்தி
வேற, மறக்காம அலாரம் வச்சிருயா..." என்று
சொல்லிக்கொண்டே பாயில் சுருண்டார் அம்மா.
அலைபேசியில் ஏதோ மூழ்கியிருந்த சிவா,
"ஹ்ம்ஹ்ம்... சரிம்மா..." என்று அரைகுறையாகக்
கூறிக்கொண்டே தலையசைத்தான். மறுநாள் காலை மணி 6.30. திடுக்கிட்டு முழித்த மாலா,
அறையின் ஜன்னல் வழியே வெளிச்சம் படர்ந்திருப்பதைப் பார்த்து பதறி
அடித்து எழுந்தார்.. "ஐயோ!
மணி ஆயிருச்சு... ஏன் அலாரம் வைக்க சொன்னேனே, ஏன் அலாரம் வைக்கல சிவா? பாரு இப்ப லேட்
ஆயிருச்சு, எழுந்துருங்க எல்லாரும் எழுந்துருங்க!" என்று பதற்ற குரலில்
கூறினார் மாலா.
தூக்கக் கலக்கத்தில் எரிச்சலடைந்த சிவா, "உங்களுக்கு
வேணும்னா நீங்கதான் அலாரம் வைக்கணும் . மத்தவங்கள தொந்தரவு செய்யாதீங்க, எங்களுக்கும்
நிறைய வேலை இருக்கு, சும்மாவா இருக்கோம்?" என்று சலித்துக்கொண்டு திரும்பிப் படுத்துக்கொண்டான். காலையிலேயே இப்படி ஒரு பரபரப்பும்,
சற்று சிவா சொன்ன வார்த்தையிலுமாய் மனம் உடைந்திருந்தாலும் காலை
உணவை செய்ய சமையல் அறைக்கு சென்றார் மாலா.
“என்ன
கறில உப்பு
கம்மியா இருக்கு? உனக்கு சமைக்கத் தெரியுமா தெரியாதா? விசேஷ நாளுமா அதுவும் வாயில வைக்க முடியல, இதுல வேற வேலைக்கு போக போறாங்கலாம் மேடம், இதுவே சரிய
செய்ய முடியல" என்று மாலவின் கணவர் ராஜா
முகத்தைச் சுளித்தபடி
தட்டில் உள்ள தோசையைத்
தள்ளி வைத்தார். மாலாவின் கண்கள் கலங்கின. அதிகாலையில் அலாரம் அடிக்காததால்
ஏற்பட்ட பதற்றமும், சிவாவின் அலட்சியமான பேச்சும், இப்போது கணவனின் கடுமையான சொற்களும் அவளைச் சுக்குநூறாக உடைத்தன. நள்ளிரவு 1.00 மணிக்கு படுத்தவள்,
ஒரு தாயாகவும் மனைவியாகவும் தன் கடமையைச் செய்ய வேண்டும் என்ற
தவிப்போடுதான் அதிகாலையில் திகைத்து எழுந்தாள், புரிந்துகொள்ளவில்லையே??
"மன்னிச்சிடுங்க,
அவசரத்துல கவனிக்காம விட்டுட்டேன். என்று தழுதழுத்த குரலில்
கூறியபடி சமையலறைக்குள் நுழைந்தாள் மாலா. சுடச்சுடத் தோசை வெந்துகொண்டிருந்த
அந்தச் சமையலறையின் வெப்பத்தை விட, அவளது மனதிற்குள் எழுந்த
ஏமாற்றத்தின் வெப்பம் அதிகமாக இருந்தது. 'மாடாய் உழைத்தாலும்
ஒரு நல்ல வார்த்தை கிடைக்கவில்லையே' என்ற ஏக்கம் அவளை
வாட்டியது.
அம்மா..... மா…..மா! என் புக்கு எங்க வச்சீங்க? எத்தனை வாட்டி
சொல்லிருக்கேன் என் இடத்தை சுத்தம் செய்யாதீங்கனு! இப்ப பாருங்க புக்கைக் காணோம்.
நீங்க இப்ப புக்கைத் தேடித்தாங்க, இல்லைனா நான் ஸ்கூலுக்குப்
போக மாட்டேன்! உங்க நால்தான்
போன வாட்டி மிஸ் கிட்ட திட்டு வாங்குனேன், புக் எடுத்துட்டு வரலைனு..." என்று அவனுடைய அறையிலிருந்து
கத்திக்கொண்டே வந்தான் சிவா.
கணவனின் கடுகடுப்பு, மகன் சிவாவின் அலட்சியம், அவனின் பழிச்சொல் என மாலாவுக்குத் தலை
சுற்றியது. கையில் இருந்த துணியால் முகத்து வேர்வையைத் துடைத்துக்கொண்டே,
"இரு ஐயா, தோ அம்மா வந்து
பார்க்குறேன்..." என்று பதற்றமாய் ஓடினாள். அவள் கைகள் நடுங்க மேஜை மீதிருந்த
துணிகளையும் தாள்களையும் ஒதுக்கித் தேடினாள்.
அம்மா புத்தகத்தைத் தேடிக்
கொண்டிருக்கும் போதே, மகனின் ஆத்திரமும் அழுகையும் இன்னும் அதிகமானது.
“பாருங்க
புக்கு கிடைக்கல..." என்று அவன் கத்திக் கொண்டிருக்கும் போதே,
வீட்டின் வாசலுக்கு வெளியே "பீப்... பீப்..." என்று
சத்தம் கேட்டது.
பள்ளி வேன் வந்துவிட்டது."வேன் ஹாரன் அடிக்கிறாங்க பாருங்க! வேன் வந்துருச்சு, நான் வேன்ல ஏற மாட்டேன். இப்ப நீங்க புக்கைத் தேடித்தாங்க, இல்லைனா ஸ்கூலுக்குப் போக மாட்டேன்!" என்று அடம் பிடித்துக்
கத்தினான். படபடப்போடு தேடி, மேஜையின் அடியிலிருந்த
புத்தகத்தை இழுத்து, "தோ இந்தாயா
கிடைச்சிருச்சு..." என்று மூச்சிரைக்க நீட்டினாள். ஆனால் அதற்குள் வேன் நகர்ந்து
சென்றுவிட்டது. அதைப்பார்த்த மகன், "பாருங்க உங்க
நாலே வேனும் விட்டுட்டு போயிருச்சு! ஸ்கூல்ல கொண்டு போய் விடுங்க என்னை!"
என்று அழுகையோடு கத்தினான்.
ஒரு பக்கம் கணவன் புலம்பிக்கொண்டு கிளம்ப,
மறுபக்கம் பள்ளிக்குச் செல்ல வேண்டிய மகன் கத்த, மாலாவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. தன் அழுகையை அடக்கிக்கொண்டு,
"சரி இரு ஐயா, அப்பாவை வழி அனுப்பி
வச்சிட்டு வரேன்..." என்று வாசலுக்கு ஓடினாள். வண்டியில் ஏறிய கணவனிடம்,
"பார்த்து போயிட்டு வாங்க அத்தான். சாப்பாடு எல்லாம் பேக்ல பெக் பண்ணி வச்சிருக்கேன்,
சாப்பிடுங்க அத்தான்..."
என்று கனிவோடு கூறினாள் மாலா. அவரோ,
"ஹ்ம்ஹ்ம் சரி..." என்று ஒரு வறண்ட பதிலை மட்டும்
சொல்லிவிட்டு அங்கிருந்து
கிளம்பினார். அவர் போன வேகத்தில்,
உள்ளிருந்து ஓடிவந்த மகன், "அம்மா
ஸ்கூலுக்கு மணி ஆச்சு! ஸ்கூல்ல விடுறீங்களா இல்லையா?!" என்று
மீண்டும் கத்தினான்.
விநாயக சதுர்த்தி அதுவுமாய்,
தன் குடும்பத்திற்காக அதிகாலையிலிருந்து ஓடி ஓடி உழைத்த அவளுக்குக்
மிஞ்சியது ஏச்சும் பேச்சும் மட்டும்தான். கடைசியில் விநாயக பெருமானுக்குச் செய்ய வேண்டிய கடமையைக்
கூட செய்ய முடியாமல் போனதை எண்ணி
கவலைப்பட்டாள் மாலா. ஒருவழியாகத் தன் மகனை வண்டியில்
ஏற்றிக்கொண்டு பள்ளியை நோக்கிப் புறப்பட்டாள்.
வண்டியை ஓட்டிக்கொண்டே மாலாவின் உள்ளம்
தன் வாழ்நாளை எண்ணிப் புழுங்கியது. 'ஒரு
பெண் என்பவள் எவ்வளவுதான் போராடுவாள்? பிறக்கும்
போது தந்தை வீட்டிலும், தாய்
வீட்டிலும் ஓடி ஓடிச் சேவை செய்கிறோம். கல்யாணத்துக்கு
அப்புறம் வந்த கணவனுக்கு அவனது நிழலாகவே மாறிச் சேவை செய்கிறோம்.
பிள்ளைகள் பிறந்து வளர்ந்தால்,
அவர்களுக்கும் ஆயுள் முழுக்கச் சேவை செய்கிறோம்.
பின்பு நமக்கு எப்பொழுதுதான் விடிவுகாலம் வரும்?
பெண்கள் இதற்காக மட்டும்தான் பிறக்கிறோமா?
அடிமையாக உழைத்து சாவவா?
நிச்சயமாக இது நல்லவர்கள் வாழ்வதற்கான
உலகம் இல்லை மாலா! தீயவர்களாலும்,
சுயநலக்காரர்களாலும் மட்டுமே வாழப்படும், ஆளப்படும் உலகம் இது.
எப்போதுமே விட்டுக்கொடுத்து,
பாசத்தோடு வாழ நினைக்கும் பெண்கள் மட்டும்தான் இங்கு இறுதிவரை
பலிகாடாக ஆக்கப்படுகிறார்கள்.
இன்று என் குடும்பத்திற்காக
ஓடி உழைத்தும் எனக்கு ஏச்சுதான் மிஞ்சியது.
அதுமட்டுமில்லாமல், எனக்காக
நான் வாழ நினைத்த அந்தச் சிறு
பொழுது கூடக் கிடைக்காமல்,
கடவுளுக்குச் செய்ய வேண்டிய கடமையைக் கூடச் செய்ய நான் தவறிவிட்டேனே!” என்று நினைத்து அழுகையை
விழுங்கிக் கொண்டு, மனதிற்குள் பேசிக்கொண்டு வந்தாள்.
சாலை எங்கும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின்
பகுதியாகப் பக்திப் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன.
ஆங்காங்கே மக்கள் புத்தாடை அணிந்து,
கைகளில் பூக்களோடும் கொழுக்கட்டைகளோடும் கோவிலை நோக்கிச் சென்று
கொண்டிருந்தனர். அதைப்
பார்க்கப் பார்க்க மாலாவின் மனம் இன்னும் ஏங்கியது.
வண்டியின் பின்புறத்தில் அமர்ந்திருந்த சிவாவோ,
முகத்தைக் கடுகடுவென வைத்துக் கொண்டு,
சாலையின் மறுபக்கம் வேடிக்கை பார்த்தபடி வந்தான்.
வண்டி ஓடிக்கொண்டிருக்கும்போதே,
மகனின் கோபத்தைத் தணிக்க வேண்டி, "ஐயா...
இன்னைக்கு அம்மாவே வந்து கூட்டிக்கட்டுமா அப்புறம்?" என்று
ஆசையோடு கேட்டாள்.ஆனால் மகனோ இன்னும் அந்த வேன் தவற விட்ட கோபத்தில்,
"ஒன்னும் தேவை இல்லை! நானே பார்த்துப்பேன், வேன்லயே வந்துருவேன்..." என்று முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
அவன் கோபத்தைக் கண்டு மனம் தளராத
மாலா, "சரி, அப்புறம்
வீட்டுக்கு வந்த உடனே உனக்குப் பிடிச்ச சாப்பாடு அம்மா செஞ்சு வைக்கிறேன். நல்லா
படிச்சிட்டு வா, அப்புறம் சேர்ந்து சாப்பிடலாம் சரியா?"
என்றாள் பாசத்தோடு. அதற்கு அந்தப் பையன் மௌனமாகவே இருந்தான்.
பள்ளி வந்துவிட்டது. வண்டியை
நிறுத்திய மாலா, "ஐயா, சொல்ல
மறந்துட்டேன்... பேக்ல மத்தியானம் சாப்பாடு வச்சிருக்கேன், சாப்பிடு..."
என்று சொல்லி முடிப்பதற்குள், அவனின் பதிலுக்கு காரின் கதவை "டொம்" என்று
வேகமாக அடித்து மூடிவிட்டுப் பள்ளிக்கூடத்திற்குள் ஓடினான்.
சிறிது தூரம்
நடை போட்ட சிவா, மனதுக்குள் “இதுக்கு மேல ஸ்கூலுக்குப் போனா என்ன,
போகலைனா என்ன? எல்லாரும் கிளாஸ்க்கு
போயிருப்பாங்க. நாம நினைச்ச வேலையைச் செய்வோம்!" என்றான் சிவா. அவ்வளவுதான்! பள்ளிக்குச் செல்லாமல்
கட் அடித்தால் என்னென்ன செய்யலாம் என்று சிவா தன் மனதில் முன்பு கோட்டை கட்டியிருந்தானோ,
அத்தனையையும் செய்யத் தொடங்கினான்.
முதலில்,
பள்ளியின் பின்பக்கமதில் சுவரை யாரும் பார்க்காத வண்னம் மெதுவாக
ஏறிக்குதித்து வெளியில் வந்தான். சாலையில்
சுதந்திரக் காற்று தன் முகத்தில் மோதுவது போல அவனுக்கு ஒரு தற்காலிக சந்தோஷம் கிடைத்தது.
நேரே டவுனில் இருந்த ஒரு குளிரூட்டப்பட்ட பெரிய ஐஸ்கிரீம் பார்லருக்குள்
நுழைந்தான்.
அங்கே சாக்லேட் மற்றும் வெண்ணிலா சுவைகள்
கலந்த, வண்ண வண்ண மிட்டாய்கள் தூவப்பட்ட ஒரு
பெரிய 'ஸ்பெஷல் சண்டே'
ஐஸ்கிரீமை ஆர்டர் செய்தான்.
காலையில் அம்மா பாசத்தோடு மதிய உணவை பேக் செய்து கொடுத்ததை குப்பையில் போட்டு விட்டு,
அந்த ஐஸ்கிரீமை ரசித்து ருசித்துச் சாப்பிட்டான்.
பின்னர் அங்கிருந்து சற்றும் யோசிக்காமல்
ஒரு வணிக வளாகத்தில்
இருந்த திரையரங்கதிற்குச்
சென்றான்.
அங்கு
டிக்கெட் எடுத்துவிட்டு,
தனக்குப் பிடித்த ஒரு புதிய அதிரடி ஆக்ஷன் படத்தைத் திரையரங்கில்
தனியாக அமர்ந்து, பாப்கார்ன்
சாப்பிட்டபடியே ஜாலியாகப் பார்த்தான். திரையில்
சண்டைக்காட்சிகள் ஓடிக்கொண்டிருக்கும் போது,
அவனுக்குள் ஒரு பெருமிதம் இருந்தது 'நாம்தான்
உலகிலேயே மிக புத்திசாலி, தைரியசாலி ,
வீட்டில் இருப்பவர்களை ஏமாற்றிவிட்டு எவ்வளவு சுகமாகப் சுலபமாகப் படம் பார்க்கிறோம்'
என்று தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டான்.
படம் முடிந்து வெளியில் வந்தவன்,
வழியில் இருந்த ஒரு பெரிய மிட்டாய் கடைக்குள் நுழைந்தான்.
தன் வீட்டில்
திருட்டுதனமாக எடுத்த பணத்தை வைத்து விதவிதமான சாக்லேட்டுகளையும்,
புளிப்பு மிட்டாய்களையும் தேடித்தேடி வாங்கினான்.
அவனது பள்ளிச் சீருடைப் பையின் பாக்கெட்டுகள் அனைத்தும் மிட்டாய்களால்
நிரம்பி வீங்கின.
"சரி,
இந்த ஜாலியான நினைவுகளை எல்லாம் அலைபேசியில் புகைப்படம் எடுத்துப்
பத்திரப்படுத்துவோம், நாளைக்கு
பிரண்ட்ஸ் கிட்ட காட்டி கெத்து காட்டலாம்"
என்று நினைத்து சிவா தன் பாக்கெட்டில் இருந்த அலைபேசியை எடுத்தான்.
ஆனால்,
அதன் திரையைத் தொட்டபோது அது கருமையாகவே இருந்தது.
நேற்று இரவு முழுவதும் போனில் கேம் விளையாடிவிட்டு சார்ஜ் போடாமல்
மறந்ததால், பேட்டரி
முற்றிலும் தீர்ந்து சுவிட்ச் ஆஃப் ஆகியிருந்தது!
"ஐயையோ! நேத்து
நைட் சார்ஜ் போடவே இல்லையா... மறந்துட்டோமே!
சே... ஒரு
போட்டோ கூட எடுக்க முடியல, இன்ஸ்டாகிராம்ல
(படவில்லை)
ஸ்டோரி போடலாம்னு நினைச்சேன்,"
என்று சலித்துக் கொண்டான்.
இருந்தாலும்
அந்தச் சலிப்பைத் தூக்கி எறிந்துவிட்டு, மதிய
வெயிலில் டவுன் பஜார் வீதிகளில் சும்மா நடந்து திரிந்தான்.
விளையாட்டுப் பொருட்கள் விற்கும் கடைகளையும்,
அலைபேசி உதிரிபாகங்கள் விற்கும் கடைகளையும் வேடிக்கை பார்த்தபடி
நேரத்தைக் கடத்தினான்.
எல்லா
இடங்களுக்கும் சுற்றி முடித்துவிட்டு, மதியம் இரண்டு மணி அளவில் பள்ளி
வேனுக்காகக் காத்திருக்கும் இடத்திற்கு வந்து நின்றான். வேன் வந்ததும் ஏறி, எந்தப்
பிரச்சினையும் இல்லாமல் நல்லபடியாக வீட்டிற்கு வந்து சேர்ந்தான் சிவா. சிவா
வீட்டின் உள்ளே
நுழையும் போதே,
வீட்டினுள் இருந்த அவர்களது வளர்ப்பு நாய்
ஜிம்மி, "லோல்... லோல்..." என்று ஓயாமல்
கத்திக் கொண்டே இருந்தது. ஏன்
ஜிம்மி இப்படி கத்திட்டு இருக்கே? போ... நீயும் சாப்பிடு..." என்று அதை அதட்டிவிட்டு,
"பசிக்குதும்மா... சாப்பாடு போடும்மா!"
என்று கத்திக்கொண்டே உள்ளே வந்தான் சிவா.
"அம்மா... அம்மா எங்கே இருக்கீங்க?" என்று கூறியபடியே, உள்ளே
வந்தவனுக்கு வீடு எப்போதும் இருக்கும் நிலையில் இல்லாமல் ஏனோ அன்று மட்டும் வீடு
பொழிவு இழந்து இருப்பது போலத் தோன்றியது சிவாவுக்கு.
தன் அலைபேசியில் சார்ஜ் இல்லாததால்,
அதை எடுத்துச் சார்ஜரில் போட்டான். அப்போது சமையலறையிலிருந்து வந்த அம்மா,
"இருப்பா வரேன் முதலில்
உட்காரு பா”. என்றார்.
காலையில்
கலைத்துப் போட்ட துணிகள் மடிக்கப்படாமல் அப்படியே கட்டிலில் கிடந்தன. காலையில்
சாப்பிட்ட பாத்திரங்கள் அப்படியே உணவு மேஜையில் இருந்தன. துணிகள் வெளியில் இன்னும்
காயப்போட்டபடியே இருந்தன.
"அம்மா என்னம்மா... வேலை எதுவுமே செய்யலை போல?" என்று சிவா
தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான். மாலை நேரம். வீடு முற்றிலும்
நிசப்தமாக இருந்தது. காலையில் சிவா அவசரமாகக் கழற்றிப் போட்ட சட்டை அப்படியே மெத்தையில்
கிடந்தது. காலையில் தந்தை கோபப்பட்டுத் தள்ளி வைத்த சாப்பாட்டுத் தட்டும்
உணவு மேஜையில் அப்படியே இருந்தது.
வீடே அளங்கோலாமாய் கலைந்து
கிடப்பதைப் பார்த்து, "ஏன்மா
துணியெல்லாம் மடிச்சு வைக்கல?" என்று
கேட்டான் சிவா. பின்னர்,
தன் குற்ற உணர்ச்சியை மறைக்க ஒரு புதிய பொய்யைத் தொடங்கினான்.
"அம்மா... இன்னைக்கு
என் ஸ்கூல்ல என்னைத் டீச்சர் பாராட்டினாங்கம்மா.
நான் முன்னுக்கு ஒயிட் போர்டுல (வெண்பலகை) கணக்கு செஞ்சேன்.
என்னைக் கூப்பிட்டு கணக்கு செய்யச் சொன்னாங்க,
நான் ரொம்ப நல்லா செஞ்சேன், எல்லாரும் எனக்கு கை தட்டுனாங்கே !"
என்று பெருமையாகக் கூறினான்.
அம்மா அவனையே உற்றுப் பார்த்தபடி,
"சரிப்பா... கணக்கு
செஞ்சு வந்திருப்ப, களைப்பா
இருக்கும்... போய் குளி," என்று
அமைதியாகக் கூறினாள். ஜிம்மி
இன்னும் வாசலில் நின்று குரைத்துக் கொண்டே இருப்பது சிவாவின் காதுகளில் விழுந்தது. வீட்டின் வாசலில் நின்று ஜிம்மி இன்னும்
"லோல்...
லோல்..." என்று
விடாமல் குரைத்துக் கொண்டே இருந்தது.
அப்போது அம்மா மெதுவாகத் திரும்பி,
வாசலில் குரைத்துக் கொண்டிருந்த ஜிம்மியை நோக்கி முறைத்துப் பார்த்தாள்.
அவ்வளவுதான்... அம்மாவின்
அந்தப் பார்வையைக் கண்ட அடுத்த நொடி, அதுவரை
வெறித்தனமாகக் குரைத்துக் கொண்டிருந்த ஜிம்மி,
பயத்தில் தன் "லோல்...
லோல்..." சத்தத்தை
அப்படியே நிறுத்திவிட்டு, மௌனமாக
ஓடி ஒளிந்தது. வீடே
மீண்டும் மயான அமைதிக்குத் திரும்பியது.
அப்போது அம்மா சிவாவின் முகத்தை உற்று
நோக்கி, "உடம்பைப் பார்த்துக்கோ...
தப்பு பண்ணாதே, அம்மாக்கிட்ட
பொய் சொல்லாதே..." என்று
தொடங்கினாள். அவளது குரல் இன்னும் கனத்தது.
"இனிமே உன்னை நீதான் பத்திரமா பார்த்துக்கணும் சிவா.
இது கலியுகம்... நீ
இன்னும் வாழ்க்கையில பார்க்க வேண்டியதும் ஜெயிக்க வேண்டியதும் நிறைய இருக்கு.
அதனால பொறுப்போட நடந்துக்கோ.
இதுவரைக்கும் எப்படியோ...
ஆனா இனிமேலாவது அப்பாவோட பேச்சை கேட்டு,
அவரை மதிக்கக் கத்துக்கோப்பா..."
என்று உருக்கமாகச் சொல்லிவிட்டு,
மெதுவாகச் சமையலறைக்குள்ளே போனாள்.
"என்னது...
அம்மா ஏன் இன்னைக்கு இப்படிப் புதுசா பேசுறாங்க?"
என்று புரியாமல் சிவா திருதிருவென முழித்தான்.
அப்போது, சார்ஜரில்
போட்டிருந்த அவனது போன் "டிங்...
டிங்..." என்று
தொடர்ச்சியாக நோட்டிபிகேஷன் சத்தங்களை எழுப்பியது.
'போச்சு போ ...
அப்பாவுக்குத் தெரிஞ்சிருச்சு போல நாம ஸ்கூல் கட் பண்ணினது...'
என்ற பயத்துடனும் நடுக்கத்துடனும் போனை எடுத்துப் பார்த்தான்.
அப்பாவிடமிருந்து
ஏகப்பட்ட அழைப்புகள் வந்திருந்தன.
வேறு வழியின்றி,
நடுக்கத்துடன் அப்பாவுக்குத் திரும்ப அழைத்தான். மறுமுனையில் போனை எடுத்த அப்பா,
அழுகையும் ஆத்திரமுமாய் கத்தினார்,
"எங்கடா போன?! போன்
ஏன்டா எடுக்கல? ஸ்கூல்ல
வந்து நான் தேடுனேன் தெரியுமா? வீட்லயும்
நீ இல்லை... எங்க
போன?! "சிவா
பயந்துபோய், "நான்...
நான் இங்கதான்பா வீட்ல இருக்கேன்..."
என்றான்.
அடுத்த நொடி,
போனின் மறுமுனையில் அப்பா தன் கட்டுப்பாட்டை இழந்து விம்மி விம்மி,
தம்பி தம்பி
என கதறி அழத் தொடங்கினார் மாலா…… மாலா..…... இரத்த
வெள்ளத்துல... ஆக்சிடென்ட்ல
ஸ்பாட்லயே இறந்துட்டாடா... நான்
என்ன பண்ணுவேன் இப்போ?!" என்று
அலறினார். அப்பா
சொன்ன வார்த்தைகள் சிவாவின் காதுகளில் இடிபோல இறங்கின.
'அப்படியென்றால்... இவ்வளவு
நேரமாக நம்மோடு பேசியது...
என்ற எண்ணம் வந்ததும் அவனுக்கு உடம்பெல்லாம் நடுங்கியது.
கையில் இருந்த போன் நழுவித் தரையில் விழ,
அவன் அலறிக்கொண்டு சமையலறையை நோக்கி ஓடினான்.
"அம்மா... அம்மா..."சமையலறைக்குள்
ஓடிப்போய் பார்த்தான். அங்கே அம்மா இல்லை!
சமையலறை முற்றிலும் இருட்டாகவும் காலியாகவும் கிடந்தது.
ஆனால், காலியாகக்
கிடக்கும் அந்தச் சமையலறையின் ஒரு மூலையை நோக்கி,
வளர்ப்பு நாய் ஜிம்மி மட்டும் வாசலில் இருந்து ஓடிவந்து வெறித்துப்
பார்த்தபடி ஓயாமல் குரைத்துக் கொண்டிருந்தது!
பெயர்
: தார்ணியா த /பெ இராஜாராம்
மின்னஞ்சல் [email protected]
விரிவுரையாளர்
: இணைப்பேராசிரியர் முனைவர் முனீஸ்வரன் குமார்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
KRISHNAVAYNIE
GOOD TRY. KEEP ON TRYING. ALL THE BEST.
MAHADEVAN S/O KANDAN
வணக்கம் மிகவும் அறுமை. சிறப்பு.



