மனசாட்சியின் விளிம்பில் - சிறுகதை

top-news
FREE WEBSITE AD

மனசாட்சியின் விளிம்பில்,

கோலாலம்பூரில் அந்தப் பழமையான சிறிய அடுக்குமாடி குடியிருப்பின் வீட்டின் சமையலறையில் மாவுப் பொடியும் வெண்ணெய் உருகும் வாசனையும் பேக்கிங் ஓவனின் வெப்பமும் கலந்த காற்று மண்டியிருந்தது. "காவ்யா! இன்னும் எவ்வளவு நேரம்மா வேலை செய்வ? காலையிலேயே எந்திரிச்சு ஆபீஸ் கிளம்பணும், இப்போவே மணி விடியற்காலை 3 ஆயிடுச்சி. உடம்பைக் கெடுத்துக்காதடா... நீயும் எவ்ளோதான் தாங்குவ? ஆதவனுக்கு எப்படியாவது ஒரு நல்ல வேலை கிடைச்சிருச்சுன்னா, உன் பாரம் கொஞ்சம் குறையும்", சமையலறை வாசலில் வந்து நின்ற பூரணியின் குரலில் கவலை கலந்திருந்தது. அவரது முகம் சுருங்கி, முதுமையின் தளர்ச்சியைக் காட்டியது. "பரவாயில்லம்மா. எனக்கு சோர்வு இல்ல, பழகிருச்சு. நம்ம ஆதவன் ரொம்ப புத்திசாலிம்மா. அவனுக்குத் தகுதியான வேலை சீக்கிரம் கிடைக்கும். அலுவலகத்தில் கூட தரவு பகுப்பாய்வாளர் பதவிக்கு ஆள் எடுக்கிறதா பேசிக்கிட்டாங்க. நான் நாளைக்கு என் மேலாளரிடம் பேசிப் பார்க்கிறேன். அதுவரைக்கும் நான் பார்த்துக்கிறேன், நீ போய் படும்மா", என்றாள் காவ்யா, சோர்வாகப் புன்னகைத்தபடி. அந்தப் புன்னகையில் அவளது ஒட்டுமொத்த வாழ்க்கையின் வலியும் பொறுப்பும் அடங்கியிருந்தது.

பகல் முழுதும் அலுவலகத்தில் அமர்ந்து
, இரவில் கால்கள் கடுக்க நின்று கொண்டிருந்த அவளது கணுக்கால்கள் லேசாக வீங்கியிருப்பது போல் தோன்றியது. அவளது முதுகுத் தண்டுவடத்தில் ஒரு தீராத வலி ஊடுருவிக் கொண்டிருந்தது. அப்பா எங்களை விட்டுட்டு இப்படி திடீர்னு மாரடைப்புல தவறிருவாருன்னு யாரு நினைச்சா?, ஓவனின் வெப்பம் முகத்தில் அடிக்க, கையில் இருந்த ஐசிங் கவரைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்ட காவ்யாவின் நெஞ்சு, மூன்று வருடங்களுக்கு முந்தைய அந்த இரவை நினைத்து விம்மியது. அப்பா மறைந்த அந்த நொடியே தங்கள் குடும்பத்தின் அஸ்திவாரமே ஒட்டுமொத்தமாக அசைந்து போனதை அவளால் இன்னும் மறக்க முடியவில்லை.

இன்னும் உலகமே தெரியாத வயசுல இரண்டு தங்கச்சிங்க இருக்காங்க... அவங்களோட படிப்புச் செலவு, அவங்களோட எதிர்காலம்னு எல்லாத்தையும் நான்தானே முன்னாடி நின்னு பார்த்துக்கணும்? தம்பி ஆதவனும் கணினி அறிவியல் படிப்பை முடிச்சிட்டு இன்னும் ஒரு வேலை கிடைக்காம தவிச்சுப் போய் நிக்கிறான். இதுல இந்த வீட்டோட மாத வாடகை, சாப்பாடு, இன்னும் மற்ற செலவுன்னு எல்லாத்தையும் நான் ஒருத்தியே சமாளிக்கிறது எவ்வளவு கஷ்டமா இருக்கு!என்று அவளது உள்ளம் தவித்தது. கண்கள் கலங்கியபடியாக அணிச்சல்களை டெலிவரி செய்வதற்காக அடுக்கிக் கொண்டிருந்தாள். காவ்யா ஒரு தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை செய்து, இரவில் இந்தச் சிறு அணிச்சல் தொழில் எனத் தன் இளமையையும் தூக்கத்தையும் தியாகம் செய்து உழைத்துக் கொண்டிருந்தாள். இணையவழியாக ஆர்டர்களைப் பெற்று, நள்ளிரவில் அணிச்சல்களைத் தயாரித்து, காலையில் வேலைக்குச் செல்லும்போது டெலிவரி செய்வது அவளது வாடிக்கையாக இருந்தது.

அடுத்த நாள் காலையில் அணிச்சல்களை வாடிக்கியாளரிடம் ஒப்படைத்து விட்டு களைப்பாக அலுவலகத்திற்குள் நுழைந்தாள் காவ்யா. அவளின் நிறுவனத்தின் மேலாளர் குமாரி மீனா அவர்கள், அலுவலகத்தில் மிகவும் கண்டிப்பானவர் என்றுதான் பெயர். ஆனால், காவ்யாவிடம் மட்டும் அவரிடம் எப்போதும் ஒரு விவரிக்க முடியாத கனிவும் அதீத அக்கறையும் இருக்கும். காவ்யா மீனாவைத் தாய்க்குப் பின் தன் குடும்பக் கஷ்டங்களைச் சொல்லி அழத் தோள் கொடுத்த, உதிரத்தால் இணையாத தன் அக்காவாகப் பார்க்கிறாள். மதிய உணவு இடைவேளையின் போது, காவ்யா தன் கைகளில் இருந்த ஆதவனின் சுயவிவரக் குறிப்பையும் சான்றிதழ்களையும் இறுக்கமாகப் பற்றிக்கொண்டு, மீனாவின் அறைக்குள் நுழைந்தாள்.

"மேடம்..." என்று தயங்கி நின்றாள். தன் கணினியிலிருந்து பார்வையைத் திருப்பி, காவ்யாவைக் கண்டதும் முகம் மலர்ந்தார். "வா காவ்யா, உட்காரு. என்ன இந்தப் பக்கம்? மதிய உணவு சாப்டியா? ஏன் ஒரு மாதிரி வாட்டமாக இருக்க?" என்று அடுக்கடுக்காகக் கேள்விகளைத் தொடுத்தார். காவ்யா நாற்காலியின் நுனியில் அமர்ந்து, கோப்புகளை மேசை மீது வைத்தாள். "மேடம், இது என் தம்பியோட சுயவிவரக் குறிப்பு. கணினி அறிவியல் முடிச்சிருக்கான். நம்ம நிறுவனத்தில் புதுசா 'தரவு பகுப்பாய்வாளர்' பதவிக்கு ஆள் எடுப்பதா கேள்விப்பட்டேன். அவனுக்கு ஒரு வாய்ப்புத் தர முடியுமா மேடம்? என் குடும்ப சூழ்நிலை உங்களுக்குத் தெரியும்... நான் மட்டும்தான்..." அவளது குரல் தழுதழுத்தது.

மீனா அந்தப் படிவங்களை எடுத்துப் புரட்டினார். ஆனால், அவரது பார்வை சான்றிதழ்களில் இல்லை; மாறாக, காவ்யாவின் தூக்கமில்லாத கண்களையுமே உற்று நோக்கிக் கொண்டிருந்தது. அவரது மனதில் காவ்யாவின் மீதிருந்த அன்பு வெறும் பரிதாபத்திற்கும் அப்பாற்பட்டது என்பதை அவர் மட்டுமே அறிவார். ஒரு பெருமூச்சுடன் மீனா, "காவ்யா, உன் தம்பியோட தகுதி விவரங்கள் ரொம்ப நல்லா இருக்கு. ஆனா... உண்மையைச் சொல்லணும்னா, அந்த வேலைக்கு ஏற்கனவே ரூபன் அப்படின்ற ஒரு பையனை நாங்க தேர்வு செஞ்சிட்டோம். அவனுக்கான ஒப்புதலும் தலைமை அதிகாரியிடமிருந்து வந்துடுச்சு. இருந்தாலும்உன் உழைப்புக்காகவும், உன் குடும்பத்துக்காகவும் நான் நம்ம தலைமை அதிகாரியிடம் பேசி, உன் தம்பிக்கு இந்த வேலையை வாங்கித் தர முயற்சி செய்றேன்" என்றார் உறுதியாக. காவ்யாவின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. "ரொம்ப நன்றி மேடம்! என் தம்பிக்கு இந்த வேலை கிடைச்சா, என் குடும்பத்தோட கஷ்டம் எல்லாம் தீர்ந்துடும்" என்று கைகூப்பினாள்.

ஒரு வாரம் கழிந்தது. ஆதவனுக்கு நேர்காணல் முடிந்து, காவ்யா பணிபுரியும் அலுவலகத்திலேயே தரவு பகுப்பாய்வாளர் வேலைக்கான நியமனக் கடிதமும் கிடைத்துவிட்டது. அன்றைய நாள் காவ்யாவின் வீட்டில் தீபாவளி பண்டிகை போன்ற கொண்டாட்டம். அம்மா நான் சொன்னன்லே ஆதவனோட திறமைக்கு கண்டிப்பா வேலை கிடைக்கும்னு, இனிமேலெ நமக்கு பணக் கஷ்டம் இருக்காது! நீங்க இனி எதற்கும் கவலை படதிங்கமாஎன்றபடி நிம்மதியுடன் தன் அம்மாவின் மடியில் சாய்ந்தாள் காவ்யா

மறுநாள் காலை, புதிய உத்வேகத்துடனும் முகமலர்ச்சியுடனும் அலுவலகம் சென்றாள் காவ்யா. தனக்கு இவ்வளவு பெரிய உதவி செய்த மீனாவிற்கு நன்றி சொல்ல அவளிடம் வார்த்தைகளே இல்லை. முந்தைய நாள் இரவே தன் கைகளால் பார்த்துப் பார்த்துச் செய்த, மீனா மிகவும் பிடித்த செம்புற்றுபழம் அணிச்சல் ஒன்றை ஒரு சிறிய கலனில் அடைத்து, அதைத் தன் பையில் பத்திரமாக வைத்திருந்தாள். மதிய நேரம், மீனாவின் அறைக்குச் சென்றாள் காவ்யா. அவரது அறைக்கதவு சற்றே திறந்திருக்க, உள்ளே மீனாவும் அலுவலக மூத்த மேளாலருமான திருமதி வித்யாவும் தீவிரமாக விவாதித்துக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டது. கதவைத் தட்ட கையை ஓங்கிய காவ்யா, உள்ளே இருந்து வந்த வார்த்தைகளைக் கேட்டு அப்படியே அதிர்ச்சியில் ஸ்தம்பித்து நின்றாள்.

"மீனா! எனக்கு இதுக்கு சரியான விளக்கம் வேணும். அந்த டேட்டா அனலிஸ்ட் பதவிக்கு நம்ப ரூபன் அப்படிங்கிற ஒரு பையனைத் தான் முறைப்படி தேர்வு செஞ்சிருந்தோம். அவன் ரொம்ப ஏழை, ஆனா திறமைசாலி, கோல்ட் மெடலிஸ்ட் கூட. அவனுக்கு இந்த வேலை எவ்வளவு முக்கியம்னு நேர்காணல்ல அவனே சொன்னான். ஆனா, கடைசி நேரத்துல அவனோட விண்ணப்பம் எப்படி திடீர்னு நிராகரிக்கப்பட்டுச்சு? என திருமதி வித்யா மீனாவிடம் கேள்விகளை எழுப்பினார். மீனா பெருமூச்சுடன் பதிலளித்தார், "வித்யா, உனக்கு ஒரு உண்மை தெரியாது. காவ்யாவோட தம்பிக்கு இந்த வேலை கிடைக்கணும் அப்படின்னு, காவ்யா எங்கிட்ட வந்து கெஞ்சுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே... அந்த ரூபன் என்பவனின் விண்ணப்பம் தானாகவே சிஸ்டத்துல இருந்து நிராகரிக்கப்பட்டிருந்தது. நான் அதை இரண்டு நாட்களுக்கு முன்புதான் பார்த்தேன். இங்கு யாரோ ஒரு பணியாளர்தான் தான் அந்தப் பையனோட விபரங்களை நீக்கியிருக்காங்க. வித்யா அதிர்ச்சியுடன், "யார் அது? நம்ம அலுவலக பாதுகாப்பு அமைப்பை மீறி அதை யார் செஞ்சது?" என்றார். மீனா மென்று முழுங்கி "நீ என் தோழி அப்படிங்கிறனால சொல்கிறேன், வேறு யாரிடமும் சொல்லிறாத, என்றபடி வேறு யார், காவ்யா தான்!" என்றார்.

கதவருகே நின்ற காவ்யாவின் உடல் நடுங்கத் தொடங்கியது. நெஞ்சு அடைப்பது போல் இருந்தது. மீனா தொடர்ந்து பேசினார், "காவ்யா வெறும் அலுவலக மேற்பார்வையாளர் மட்டுமில்லை வித்யா. நமக்கு அடுத்து அவளிடன் மட்டும்தான் நம்ம அலுவகத்தின் தரவு அணுக்கம் இருக்கு, நாம இதை செய்யலன கண்டிப்பா அவள் தான் செய்திருப்பாதன் தம்பி எப்படியாவது ஜெயிக்கணும், தன் குடும்பக் கஷ்டம் தீரணும் அப்படின்ற தீவிரமான மனப் போராட்டத்துல, தர்மத்தை மறந்து அவளே இந்தத் தவற்றைச் செஞ்சிருக்கா. இன்னொரு ஏழைப் பையனோட வாழ்வாதாரத்தை, அவனோட உழைப்பை அவ தன் கைகளாலேயே சிதைச்சிருக்கா. காவ்யா ஒரு நல்ல பொண்ணு, குடும்பத்துக்காக உழைக்கிறவ. ஆனா, தன் குடும்பத்துக்காக அவ இவ்வளவு பெரிய துரோகத்தைச் செய்வான்னு நான் எதிர்பார்க்கல…”, என்றார் மீனா. சுவர்களில் மோதி எதிரொலித்த அந்த வார்த்தைகள் காவ்யாவின் காதுகளில் இடியாய் இறங்கின. தான் ஒரு உத்தமியாக, தியாகியாகத் தன் குடும்பத்தைக் காப்பாற்ற நினைத்த காவ்யா, உண்மையில் தன் குடும்பத்தின் நலனுக்காக, தார்மீக நெறிகளைத் துறந்து ஒரு குற்றவாளியாக மாறியிருந்தாள்.

எல்லாமே தெரிஞ்சும், அந்த ரூபனுக்கு நியாயம் செய்யாம, காவ்யா செய்த துரோகத்தை ஏன் மூடி மறைச்சீங்க மீனா? ஏன் அந்த காவ்யாவின் தம்பிக்கு நியமன கடிதம் கொடுத்தீங்க? நீங்களும் இந்தக் குற்றத்துக்குத் துணை போயிருக்கீங்களா! காவ்யாவுக்காக நீங்க ஏன் இவ்வளவு தூரம் சிபாரிசு செய்யணும்?என்று வித்யா அதிர்ச்சியுடன் மீனாவிடம் கேட்டார். அப்போது மீனாவின் குரல் முற்றிலும் மாறி தழுதழுத்தது. அதில் ஒருவித ஏக்கம், வலி, மற்றும் பிடிவாதம் கலந்திருந்தது. அவர் சொன்ன அந்த அடுத்த வார்த்தை, கதவருகே நின்ற காவ்யாவின் இதயத்தை உலுக்கியது.  "ஏன்னா.எனக்கு காவ்யாவை ரொம்பப் பிடிக்கும் வித்யா! அவ கஷ்டப்படுவதை என்னால பார்க்க முடியல. ஒரு பெண்ணாக, இன்னொரு பெண்ணான காவ்யா மீது எனக்குள் இருப்பது வெறும் பரிதாபமோ அல்லது தோழமையோ இல்லை... அதுக்கும் மேலான ஒரு காதல்! அவளுக்கு என்மேல் அப்படி ஒரு ஈர்ப்பு இல்லைன்னு எனக்குத் தெரியும், அதை அவகிட்ட சொல்லும் தைரியமும் எனக்கு இல்லை. ஆனா, அவ சந்தோஷமா இருக்கணும்னு நினைச்சேன். அவ தன் குடும்பத்துக்காக ஒரு குற்றவாளியா மாறுற அளவுக்குத் துணிஞ்சப்போ, அவளைக் காட்டிக் கொடுக்க என் மனசு வரல. அவளோட அந்தத் துரோகத்தை மறைச்சு, அவ தம்பிக்கு இந்த வேலையை வாங்கித் தந்தது... நான் அவ மேல வச்சிருக்கற காதலுக்காகத்தான் வித்யா!கதவருகே நின்ற காவ்யாவின் கைகள் நடுங்கின. அணிச்சல் பெட்டி கைதவறி கீழே விழுந்து சிதறியது. அந்தச் சத்தம் கேட்டு உள்ளே இருந்த மீனாவும் வித்யாவும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தனர்.

காவ்யா அதிர்ச்சியில் செய்வதறியாது திகைத்து போனாள். அவள் செய்த அந்தச் சத்தமில்லாத துரோகம், அறியாமையிலோ சுயநலத்திலோ தான் ஒரு வஞ்சகியாக, குற்றவாளியாக மாறியிருந்ததை அவளால் ஜீரணிக்க முடியவில்லை. தன் தம்பியின் நியமனக் கடிதத்தில் மற்றொரு ஏழையின் ஏமாற்றமும் கண்ணீரும் படிந்திருப்பதை அவள் உணர்ந்த அந்த நொடி... அவளது மனசாட்சி அவளை நரகத்தின் விளிம்பிற்குத் தள்ளியது.

அதைவிடப் பெரிய அதிர்ச்சி... மீனா தன் மீது வைத்திருந்த அந்த ரகசியமான காதல்மீனாவின் அந்தக் காதல், காவ்யாவின் துரோகத்திற்குத் துணையாக நின்றுறிக்கிறது என்பதை அவள் உணர்ந்தபோது அவளது உடல் சிலிர்க்க தொடங்கியது. தான் உடன்பிறவா அக்காவாக நினைத்து பழகிய மீனா தன்மீது காதல் கொண்டிருப்பதை அவளால் சற்றும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தர்மத்திற்கும் பாசத்திற்கும் இடையே நடந்த போராட்டத்தில் அவள் தோற்றுப் போயிருந்தாள்.

அதிர்ச்சியில் உறைந்தவளாய், கால்கள் பலமிழக்க அங்கேயே மண்டியிட்டு அமர்ந்தாள் காவ்யா. அறைக் கதவின் வெளியே மண்டியிட்டு அமர்ந்திருந்த காவ்யாவின் காதுகளில் மீனாவின் வார்த்தைகள் மீண்டும் மீண்டும் ரீங்காரமிட்டன. நான் அவ மேல வச்சிருக்கற காதலுக்காகத்தான்...என்ற வார்த்தை அவளுக்குள் ஒரு பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியது. மீனா தன்னிடம் காட்டிய கனிவின் பின்னணியில் இப்படி ஒரு ஆழமான, எதிர்பாராத காதல் இருந்ததை அவளால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. தன் குடும்பக் கஷ்டத்திற்காக, இன்னொரு ஏழைப் பையனான ரூபனின் வாழ்க்கையைத் தான் சிதைத்த துரோகம் ஒருபுறம்; அந்தத் துரோகத்தை மீனா தன் மீதிருந்த காதலுக்காக மூடி மறைத்த அதிர்ச்சி மறுபுறம் என இரு பெரும் பாறைகளுக்கு நடுவே சிக்கிய புழுவாய் துடித்தாள் காவ்யா


பெயர்
: திரிஷா நந்தகுமார்
மின்னஞ்சல் : [email protected] 
விரிவுரையாளர் : இணைப்பேராசிரியர் முனைவர் முனீஸ்வரன் குமார் 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shanthini

அருமையான கதை👍🏼

Sagunthalai

A very nice story, the twist was very unexpected. Hats off to the writer.

Premalatha rajendran

Unexpected twist..... Very nice keep it up 👏

Yugeshwarn

மனதைத் தொட்ட கதை. ஒவ்வொரு கதாபாத்திரத்தின் உணர்வுகளும் இயல்பாக இருந்தது. எழுத்தாளருக்கு பாராட்டுகள்😇

Dinesh kumar

Great writing, loved it!😍