அன்பின் தவிப்பு - சிறுகதை
- THINAGAREN SANGGAREN
- 15 Jul, 2026
“அதெல்லாம் முடியாது கவிதா, என்னால வேற ஹெல்ப்லாம் பண்ண முடியாது. நீ யூனிவெர்சிட்டி ரூல்ஸ் படி, உன் இன்டர்ன்ஷிப்ப காம்பஸ் லிமிட்டுக்குள்ள இருக்குற கம்பெனில மட்டும்தான்
செய்யணும். உன் வீட்டுப் பக்கம் இருக்கிற கம்பெனியிலலாம் செய்ய முடியாது” என்று
பேராசிரியர் கண்டித்து கூற , அந்த ஒற்றை வாக்கியம்
கவிதாவின் காதுகளில் பேரிடியாய் விழுந்தது.
அவள் கண்கள் கலங்க, "சார், என் வீடு ரொம்ப தூரமா இருக்கு சார். தினமும் வீட்ல இருந்து இவ்வளவு தூரம் டிராவல் பண்ணி வந்து போறது சாத்தியமே இல்லை சார். கொஞ்சம் மனசு வைங்க சார், ப்ளீஸ்!" என்று கெஞ்சினாள் கவிதா. “எனக்கு உன் நிலைமை விளங்குது கவிதா, ஆனா என்னால ரூல்ஸ மீற
முடியாது. நீ அடுத்த வாரத்துல இருந்தே யூனிவெர்சிட்டி
ஏரியாவுக்குள்ளேயே ஏதாச்சும் இடத்த தேடி உன்னோட இன்டர்ன்ஷிப்பத் தொடங்கப்
பாரு”, என்று
கூறிவிட்டு அவர் தன் கோப்புகளில் மூழ்கினார்.
கவிதா கனத்த இதயத்துடன் பேராசிரியரின் அறையை
விட்டு வெளியே வந்தாள். பல்கலைக்கழக விடுதியில் தங்கிப் படிக்கும் காலம் இத்துடன்
முடிவடைந்துவிட்டது. அடுத்த பருவத்திற்குப் பல்கலைக்கழகத்திற்கு வெளியே தனியாக ஒரு
அறையைத் தேட வேண்டும், உணவிற்குச் சுய ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற
எண்ணமே அவளுக்குப் பெரும் அச்சத்தைத் தந்தது. யாரிடம் உதவி கேட்பது என்று
தெரியாமல், தன் நெருங்கிய தோழிகளிடம் இந்த இக்கட்டான
சூழ்நிலையைப் பகிர்ந்து கொண்டு வருந்தினாள். “இப்போ நான் என்ன
செய்வேன்? வெளியூர்காரங்க மாதிரி எனக்கும் இங்க எந்த
இடமும் தெரியாது, தங்கறதுக்கு வசதியான ரூம் தேடவும் என்கிட்ட காசு
இல்லை,” என்று தோழிகளிடம் கூறி அழுதாள் கவிதா.
கவிதாவின் தனிமை மிகவும் ஆழமானது, நெஞ்சைக்
குடையும் துயரம் நிறைந்தது. அவளுக்கு அம்மாவோ, அப்பாவோ இல்லை.
அவள் சிறு குழந்தையாக இருந்தபோதே ஒரு விபத்தில் அவர்கள் அவளைத் தவிக்கவிட்டுச்
சென்றுவிட்டனர். அதன் பிறகு அவளது சித்தப்பாவும் சித்தியும்தான் அவளை
வளர்த்தார்கள். அவர்கள் அவளுக்கு அடைக்கலம் கொடுத்த போதிலும், கவிதாவால்
அவர்களுடன் ஒரு நெருக்கமான பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளவே முடியவில்லை. அந்த
வீட்டில் அவள் எப்போதும் ஒரு தற்காலிக விருந்தினராக, கடமைக்காக
வளர்க்கப்படும் ஒருத்தியாகவே தன்னை உணர்ந்தாள். தன் மனக் குறைகளையோ, தேவைகளையோ
அவர்களிடம் வெளிப்படையாகப் பேசும் சுதந்திரம் அவளுக்கு இருந்ததே இல்லை.
சூழ்நிலை இவ்வாறே தொடருமாயின் அது வரம்புகடந்து
கட்டுக்குலையும் என எண்ணி, ஒரு நாள் விடுமுறைக்கு வீடு திரும்பிய கவிதா “சித்தப்பா, சித்தி... யூனில என்னோட இன்டர்ன்ஷிப்ப வீட்டுக்கிட்டயே செய்றதுக்கு அப்ரூவ்
பண்ண மாட்டேங்குறாங்க. அங்கேயே தங்கித்தான் வேலை செய்யணும்னு ஸ்ட்ரிக்ட்டா
சொல்றாங்க. எனக்கு என்ன செய்யறதுன்னே ஒன்னும்
ஓடல”, என்று நாத்தழுதழுக்கக் கூறினாள்.
அப்போது
அங்கு வந்த கவிதாவின் உறவுமுறைச் சகோதரி சந்தியா, “கவிதா, இதுக்கா
இவ்வளவு யோசிச்சு கவலைப்படுற? உன்னோட யூனிக்கு ரொம்ப கிட்டயே நம்ம தூரத்து சொந்தம் திருமதி
திலகாவோட வீடு இருக்குல்ல. நான் அவங்ககிட்ட பேசிப் பார்க்குறேன். அதுவும் இல்லாம, திருமதி
திலகாவோட மூத்த பிள்ளை கலையரசி வேலை செய்ற அதே ஆபீஸ்லதான் இப்ப பயிற்சிக்கு ஆள்
தேடுறாங்கன்னு கேள்விப்பட்டேன். கலையரசிகிட்ட சொல்லி உனக்கு அங்கேயே பயிற்சிக்கு
ஏற்பாடு செய்யச் சொல்றேன். நீ அங்கேயே தங்கிப் படிக்கலாம், சரியா?”
என்றாள்.
பகலும் இரவும் பின்தொடர, நாட்கள் நகர்ந்தன. ஒரு நாள் மாலை, சாந்தியாவின் கைப்பேசிக்கு அந்த உறவினரிடமிருந்து அழைப்பு வந்தது. எதிர்பார்த்தபடியே, கலையரசியின் அலுவலகத்தில் பயிற்சி பணிக்கான நேர்காணல் நடப்பதாக அவர்
கூறினார். “சந்தியா, கவிதா தனியா வெளிய எங்கேயும் தங்க வேணாம்னு
சொல்லுங்க. அவ நம்ம வீட்லயே இருக்கட்டும், நம்ம பிள்ள மாதிரி அவளை நாங்க பார்த்துக்கிறோம். அவளுக்கு ஒரு குறையும் வராம நாங்க
பாத்துப்போம், நீங்க பயப்படாம இருங்க” என்று மிகவும் அன்போடு
அழைப்பு விடுத்தார் திருமதி திலகா.
"சித்தி, அவங்க என்னை அங்கேயே அவங்க வீட்லயே தங்கிப் படிக்கச் சொல்றாங்க. நான் போகவா சித்தி?" என்று
அனுமதியைக் கோரி கவிதா நிற்க, எப்போதும் சுணக்கமாக
இருக்கும் சித்தப்பா “ரொம்ப நல்ல விஷயம் கவிதா. திருமதி திலகாவோட குடும்பத்துல எல்லாரும் ரொம்ப நல்லவங்க, அன்பானவங்க. அவங்க உன்னை நல்லா பார்த்துப்பாங்க. தெரியாத ஒரு இடத்துல தனியா போய் தங்குறதை விட, தெரிஞ்சவங்க வீட்ல இருக்குறதுதான் உனக்கு பாதுகாப்பு” என்கிறார்.
அடுத்த இரண்டு வாரங்களில், கவிதா தன்
உடமைகளைச் சுருட்டிக்கொண்டு திருமதி திலகாவின் இல்லத்திற்குச் சென்றாள். அவள் அந்த
வீட்டிற்குள் நுழைந்தபோதே அவளுக்கு ஒரு தனி அறை
ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த அறையின் தூய்மையும் அமைதியும் அவளுக்குப்
பிடித்துப் போனது. எல்லாவற்றையும் விடப் பெரிய வசதி என்னவென்றால், அவளுக்குக்
கிடைத்த அந்தப் பயிற்சி பணி நிறுவனம் அந்த வீட்டிலிருந்து வெறும் ஐந்து நிமிட
நடைத்தொலைவில் மட்டுமே.
அந்த இல்லத்தின் தலைவி திருமதி திலகா, தன் இரண்டு
மகள்களுடனும், ஒரே மகன் கவினுடனும் வாழ்ந்து வந்தார்.
மூத்தமகள் கலையரசி, ஏற்கனவே கவிதாவிற்குப் பயிற்சி பணி கிடைக்க
ஏற்பாடு செய்தவள், அவளுடைய தற்போதைய அலுவலகத் தோழியும் கூட. இரண்டாவது
மகள் ரவீனா, இன்னும் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தாள்.
மகன் கவின், ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல பதவியில் வேலை
செய்து கொண்டு, அந்தக் குடும்பத்தின் தூணாக விளங்கினான்.
திருமதி திலகா எல்லையற்ற அன்பும், கபடமற்ற
வெள்ளந்தித் தனமும்கொண்ட ஒரு தாய். கவிதா அந்த வீட்டிற்கு வந்த முதல் நாளிலிருந்தே, அவளை ஒரு
புதியவளாகப் பார்க்கவில்லை. “கவிதா, நீயும் இந்த வீட்டுப் பிள்ளை மாதிரிதான். உனக்கு என்ன வேணும்னாலும் என்கிட்ட கேளு, சும்மா தயங்கிக்கிட்டு இருக்காதே, சரியா?" என்று பேரன்பும் உரிமையும் பொங்கக் கூறினார்
திருமதி திலகா. தினமும் அதிகாலையிலேயே எழுந்து கவிதாவுக்கும் தன்பிள்ளைகளுக்கும்
சுடச்சுடக் காலை உணவு, மதியத்திற்கான உணவுக் கூடை, இரவு உணவு என
அத்தனையையும் தன் கைகளாலேயே சமைத்துக் கொடுப்பவர் திருமதி திலகா.
“கவிதா, உடம்பைப்
பார்த்துக்கோ, நல்லா சாப்பிடு. சாப்பாடு எப்படி இருக்கு?” என்று அவர்
கேட்கும் அக்கறை, தாயின் அன்பை அறியாமல் வளர்ந்த கவிதாவின்
நெஞ்சைக் கரையச் செய்தது. “ரொம்ப அருமையா இருக்கு மா. என் அம்மா உயிரோட இருந்திருந்தா கூட எனக்கு இப்படி ருசியா சமைச்சுப்
போட்டிருக்க மாட்டாங்க, அவ்ளோ சூப்பர்!" என்று
நெகிழ்ச்சியுடன் கூறினாள் கவிதா. அதேபோல், ரவீனாவும்
கவிதாவிடம் மிக சுலபமாக நெருங்கிவிட்டாள். மாலை நேரங்களில் நடைப்பயிற்சி செல்வது, பாடங்களைச் செய்ய உதவுவது என இருவரும் சேர்ந்து சென்றனர்.
கலையரசி ஒருபடி மேலே போய், ரவீனாவிற்கு
உடைகளோ அல்லது இதரப் பொருட்களோ வாங்கும்போது, கவிதாவுக்கும்
சமமாக அனைத்தையும் வாங்கிக் கொடுப்பாள். அலுவலகத்தில் எந்தப் பிரச்சினையும் வராமல்
கவிதாவை ஒரு கவசமாகப் பாதுகாத்தாள். இந்த அளவுகடந்த அன்பும், அரவணைப்பும்
கவிதாவிற்குப் புதியதொரு உலகத்தைக் காட்டின. பெற்றோர் இல்லாத ஏக்கம், சித்தியின்
வீட்டில் அனுபவித்த தனிமை என அனைத்தும் இந்த அன்பின் வெள்ளத்தில் அடித்துச்
செல்லப்பட்டன. தான் ஏதோ தற்காலிகமாக வந்தவள் என்பதை மறந்து, அது தன் சொந்த
வீடு என்றும், அவர்கள் தன் சொந்தக் குடும்பத்தினர் என்றும்
அவள் ஆழமாக நம்பத் தொடங்கினாள்.வாழ்க்கை அதன் மிக அழகிய பாதையில் பயணித்துக்
கொண்டிருந்தபோதுதான், கவிதாவின் மனதிற்குள் அந்தப் புதிய உணர்வு
அரும்பத் தொடங்கியது. அவளறியாமலேயே அவளது சிந்தனை நதி, அந்த வீட்டின் மூத்த மகனான கவினை நோக்கித் திசைமாறி ஓடத் தொடங்கியது; அவனது அசைவுகளிலேயே அவளது கவனம் மெல்ல மெல்லக் கரைந்தது.
கவின் இயல்பிலேயே அமைதியானவன், கடமை உணர்வு
மிக்கவன். கவிதா அந்த வீட்டிற்கு வந்ததிலிருந்து, அவளையும் தன்
சொந்தத் தங்கையைப் போலவே நடத்தினான். “கவிதா, கம்பெனில ஏதாச்சும் வேலை கஷ்டமா இருந்தா சொல்லு, நான் உனக்கு ஹெல்ப் பண்ணுறேன். வெளிய எங்கேயாச்சும் போகணும்னாலும்
தயங்காம என்கிட்ட கேளு” என்று பாசத்தோடு கூறுவான்.
தொடக்கத்தில் கவிதா அவனை அண்ணன் என்றுதான்
அழைத்தாள்.அவனும் அவளை ஒரு தங்கையாகவே பாவித்து அரவணைத்தான். ஆனால், நாட்கள் செல்லச்
செல்ல, கவின் காட்டிய அந்த அதீத அக்கறையும், அவனது ஆண்மை
நிறைந்த கனிவான பார்வையும் கவிதாவின் மனதில் ஒரு விசித்திரமான மின்காந்த அலைகளை உருவாக்கின.
அவனது குரல் கேட்கும் போதெல்லாம் அவளது இதயத் துடிப்பு சீரற்றதாக மாறியது. அவனிடம்
அவள் உணர்ந்தது சகோதரத்துவத்தைத் தாண்டிய, ஓர் ஆழமான காதலை, ஒரு பெண்ணாக
ஓர் ஆணிடம் கொள்ளும் ஈர்ப்பை ஏற்படுத்துகின்றது. இங்குதான் கவிதாவின்
மனப்போராட்டம் தொடங்கியது.
"நான் செய்றது சரியான காரியமா? என்னை அவங்க சொந்த மகள் மாதிரி பார்க்குறாங்க... அப்படிப்பட்ட ஒரு அம்மாவோட
மகனையே நான் லவ் பண்றது துரோகம் இல்லையா? ஆனா என் மனசு அவனத் தவிர வேற யாரையுமே நினைக்க மாட்டேங்குதே!” என்று தனக்குள்ளேயே விவாதித்துக் கொண்டாள் கவிதா.நாளுக்கு நாள் அவளுக்குள்
வளர்ந்து பெருகிய அந்த காதல் உணர்வு, ஒரு கட்டத்தில் இன்பமளிப்பதை விடுத்து, நெஞ்சை அழுத்தும் பேரிடராக மாறியது . அதைத் தன் மனதிற்குள்ளேயே பூட்டி வைக்க
அவளால் முடியவில்லை. கவினின் மனதில் என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள அவளது
உள்ளம் தவித்தது. இறுதியாக, தன் மனதில் உள்ள காதலை அவனிடமே நேரடியாக
ஒப்புக்கொண்டுவிடுவது என்று ஒரு தீர்க்கமான முடிவிற்கு வந்தாள்.
ஒரு நாள் மாலை, வீட்டில்
திருமதி திலகாவும் மற்றவர்களும் ஒரு விசேஷத்திற்காக வெளியே சென்றிருந்த சமயம்
பார்த்து கவிதா தன் அறைக்குள் அமர்ந்துகொண்டு கவினுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினாள். “அண்ணா... நான் உங்ககிட்ட ஒரு அர்ஜெண்டான
ஒரு விஷயம் பேசணும். ப்ளீஸ், இப்பவே காபி ஷாப்புகு வர முடியுமா? என்று
நடுக்கத்துடனும் எதிர்பார்ப்புடனும் அந்தச் செய்தியை அனுப்பினாள். செய்தியைப்
பார்த்த அடுத்த பத்தாவது நிமிடமே கவின் பதற்றத்துடன் “கவிதா! என்ன பிராப்ளம் ? மூஞ்சியே ஒரு மாதிரி இருக்கு. ஏதும் காச்சல், உடம்பு முடியாம இருக்கா என்ன? ஏன் இவ்வளவு பதற்றமா உடனே
வரச் சொன்னாய்? என்ன விஷயம் சொல்லு," என்றான். அவனது முகம் கவலையினாலும் அக்கறையினாலும்
நிறைந்திருந்தது.
அவனது அந்தப் பார்வை, கவிதாவின் காதலை
மேலும் தூண்டியது. இதயம் தொண்டைக் குழிக்குள் முட்ட, தன் வாழ்வின்
மிகப்பெரிய உண்மையை, தன் இதயத்தின் தவிப்பை அவனிடம் கொட்டுவதற்காகக்
கவிதா அவனை நோக்கி மெல்ல அடியெடுத்து வைக்கிறாள். அவளது கைகள் லேசாக நடுங்கின.
உதடுகள் ஏதோ பேசத் துடித்தன. இந்த உண்மைக்கு விடை காதலா அல்லது பிரிவா? சமூகம் விதித்த கட்டுப்பாடுகளை உடைத்து அவளது தூய்மையான அன்பை அவன் ஏற்றுக்
கொள்வானா? அல்லது, ஒரு நொடியில் எல்லாம் சுக்குநூறாகப் போகுமா?
பெயர் : விசாலினி த/பெ சந்துரு - சுல்தான் இட்ரிஸ் கல்விப் பல்கலைக்கழகம் (UPSI)
மின்னஞ்சல் : [email protected]
விரிவுரையாளர் : இணைப்பேராசிரியர் முனைவர் முனீஸ்வரன் குமார்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
JAYALETCHIMY RENGANATHEN
இதை தொடர்கதையாகவும் கொண்டு செல்லலாம்... திறமை இருந்தால்



