யார் குற்றவாளி? - சிறுகதை

top-news
FREE WEBSITE AD

யார் குற்றவாளி ?

வீட்டில் ஒரே கலகலப்பு சத்தம். "மீனா, நீ வேண்டுன கருப்புசாமி ஒண்ண கைவிடல டி . ஒம் பையன் நல்ல மார்க் எடுத்திருக்கான் பாரு . இப்படியே நல்ல மார்க் கடைசில எடுத்தானா அவனுக்கு வெளிநாட்டுல நல்ல உத்தியோகம் கெடக்குமுடி" என்று கவினின் தாயாரிடம் ஒரு பெண்மணி மகிழ்ச்சியாய் கூறிக் கொண்டிருந்தாள். பெண்மணி கூறிய வார்த்தையைக் கேட்டுக் கவின் தன் தாயாரின் முகத்தைப் பார்த்தான். மஞ்சள் மேகமாய் அவன் தாயாரின் முகம் மகிழ்ச்சியில் ஜொலித்துக் கொண்டிருந்தது. அதைப் பார்த்து கவினின் மனதில் தான் தேர்வில் எடுத்த நல்ல மதிப்பெண்ணை விட தனது தாயாரின்  மகிழ்ச்சி அவனுக்கு இனப்புரியது மகிழ்ச்சி ஒன்று உருவானது. ஆனால், அவன் மனதில் எதோ ஒரு சஞ்சலம். கவின் தனியார் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியில் துறையில் ஏழாம் பருவம்  பயிலும் ஒரு மாணவன். அவன் எட்டாம் பருவத்தில், 6 மாத காலம் நிறுவனம் ஒன்றில் பணி செய்ய வேண்டும் என்று அவனின் பேராசிரியர் பணித்தார். அவ்வாறே அவனுக்கு நல்ல நிறுவனம் ஒன்றில் அவனுக்கு வேலை கிடைத்தது. அவனுக்கு இருக்கும் ஒரே குறை, அவனது பல்கலைக்கழக தங்கும் விடுதியில் தங்க அவனுக்கு இடம் கிடைக்கவில்லை. வெளியே தங்கினால் வாடகைக்கே பணம் நிறைய செலவாகும். அவனது குடும்பமோ நடுத்தர வர்க்கத்தை சார்ந்தவர்கள். அவனுக்கு கீழே 3 தம்பிகள். மூவருமே படிக்கிறார்கள். அவர்களுக்கும் தனி தனி செலவுகள். இந்த மாதிரி ஒரு சூழலில், பெற்றோர்களிடம் எப்படி பணம் கேட்பது என்ற ஒரு கேள்வி கவினின் மனதில் உருண்டுக் கொண்டிருந்தது. பாடத்திற்கு அப்பாற்பட்டு விளையாட்டு துறையில் பல்கலைக்கழகத்தைப் பிரதிநிதித்துப் பல போட்டிகளுக்குச் சென்று நிறைய புள்ளிகளைப் பெற்றும் கூட அவனுக்கு பல்கலைக்கழக தகும் விடுதி கிடைக்கவில்லை. அதனாலையோ, என்னவோ வீட்டில் அனைவரும் மகிழ்ச்சியாய் இருந்தும் கூட அவனுக்கு மழையாய் பொழியும் அளவிற்கு அவன் மனதில் சந்தோசம் இல்லை. அப்பொழுது, கவினின் தோளைத் தட்டி "என்ன ஐயா. குதூகலமா சந்தோஷமா இருக்குற நாள் அன்னிக்கு என்னத்த யோசிக்கிட்டு இருக்க?" என்றாள். "ஒன்னோமில்ல மா. அடுத்த செம்-க்கு எங்க தங்குவேன்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன்" என்றான். மீனா தன் மகனின் தலையைக் கோதிவிட்டு "பாத்துக்கலாம் பா, இப்போதான் எல்லாம் கை கூடி வருது. நம்ப சாமி நம்ப வேண்டுறதை கேக்குது. உனக்கு தங்க கண்டிப்பா இடம் கிடைக்கும் பாரு." என்று கூறி தைரிய மூடினாள் மீனா. கவின் தன் தாயின் பேச்சைக் கேட்டுத் தலை இசைத்தான்.

அம்மா ஊட்டிய தைரியமே அவனுக்கு இரவில் தூங்கும் தாலாட்டாக மாறியது . மறுநாள்
, எப்பொழுதும் போல கவினும் சந்திரனும்  பூங்காவனம் ஒன்றில் மெதுவோட்டம் சென்றுக் கொண்டிருந்தார்கள்.  "மச்சா...என்னடா ஆச்சிகொஞ்ச நாளா நீ சரியே இல்லடா. என்னத்த தாண்ட அப்படி யோசிக்கிறே?" என்றான் சந்திரன். கவினுக்கு பல்கலைக்கழகத்தில் பல நண்பர்கள் இருந்தும், கவினுக்கென்று ஒரு நெருங்கிய நண்பன் ஒருவன் இருந்தான். பல்கலைக்கழகத்தில் நுழைந்த முதல் வாரத்திலிருந்து இவர்கள் இருவரும் ஒரு நல்ல நண்பர்களாகி விட்டார்கள். இவர்கள் இருவரும் சில நேரம் அவர் அவர்களின் கனவுகளை, பெற்றோர்களைப் பற்றி மனம் விட்டு பேசுவார்கள். அந்த அளவிற்கு நண்பர்கள் இவ்விருவரும்.  "டேய்! டேய்! என்னடா? உன்கிட்டே தான் பேசிகிட்டு இருக்கேன். என்ன ஆச்சி உனக்கு?" என்றான் சந்திரன். " ஒண்ணுமில்லடா. இந்த ஹோஸ்டல் பத்தி தான் யோசிச்சிக்கிட்டு இருக்கேன். யாரு யாருகிட்டையோ போய் கேட்டுட்டேன். மார்க் இருந்து கூட கொடுக்க மாட்டுறானுங்க. எங்க தான் தங்க போறேன்னு தெரியல" என்று சகித்துக் கொண்டே கூறினான் கவின். சந்திரன் தலை இசைத்துச் சிறுது நேரம் மௌனமாக இருந்தான்  . "டேய் கவினு. வேணும்னா எனக்கு பதிலா நீ என் இடத்துல தங்கிக்கோ. ஏன நான் வெளிய வீடு சேவா எடுத்து தங்க போறேன்டா. அப்போ எனக்கு கெடச்ச ஹோஸ்டல் யாரும் தங்கலன வீனா தானே போவோம். அதான், பேசாமே நீ தங்கிக்கோயேன்" என்றான் சந்திரன். கவினுக்கு அதிர்ச்சியும் அளவில்லா மகிழ்ச்சியும். பக்தன் வேண்டியதை இறைவன் நிறைவேற்றுகிறார். ஆனால்மனித ரூபத்தில் என்று கவின்  நினைத்துக்கொண்டான். "நெஜம்மாவேவா. ரொம்ப நன்றி டா. ரொம்ப பெரிய உதவி செஞ்சிருக்கே டா எனக்கு" என்றான் கவின். அதன் பின் இருவரும்  சிறுது நேரம் கழித்து அவர் அவர்களின் வீட்டிற்கு சென்றனர்.

 காலம் மிக வேகமாகவே சிறகடித்து பறந்தது. கவின் தன் தங்கும் விடுதியின் சாவியை எடுத்துக் கொண்டு கதவினைத்  திறந்தான். திறந்த உடன் ஒரு ஏறக்குறைய 23 வயது சீன பையன் குடுகுடுவென்று அறையிலிருந்து வெளியேறினான் . "யாரு இவன்... ஒரு அறைலே ரெண்டு பேருனு தானே சொன்னாங்க. ஒன்னு நான் இன்னொன்னு ஒரு தமிழ் பையன். இவன் யாரு ? " என்று கவின் யோசிக்கிறான். கவின் அறையில் நுழைந்தவுடன் அவனின் அறைநண்பர் தன் பெயர் வெற்றி என்று  தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். இருவரும் தன்னை அறிமுகப்படுத்திய பிறகு ஒன்றுமே பேசிக்கொள்ளவில்லை.

 குதிரை கடிவாளத்தை மாட்டிக் கொண்டு ஓடுவது போல் நாட்கள் உருண்டோடியது, கவினும் வெற்றியும் முதல் நாள் பேசிக்கொண்டதுதான் அதன் பிறகு எங்கேயாவது பார்த்தல் கூட தெரியாதவர்கள் போல இருந்துக் கொள்வார்கள். கவின் தினம்தோறும் வெள்ளிக்கிழமை தன் வீட்டிற்கு கிளம்பி செல்லும் வழக்கம் உண்டு. ஆனால், எப்பொழுதும் சனிக்கிழமை 11 மணி இரவு மட்டும் "எப்போ ப்ரோ நீங்க இங்கே வருவீங்க? " என்ற குறுஞ்செய்தி மட்டும் வெற்றியிடமிருந்து வந்துவிடும். ஒருநாள், ஒரு வேலை விஷயமாக கவின் சீக்கிரமாக தங்கும் விடுதிற்கு வந்தான். விடுதிற்கு வந்து அவன் அவனது அறையின் கதவை திறந்தவுடன் கதவின் மறுபக்கத்திலுருந்து யாரோ கதவினை தள்ளி அறையின் கதவை மூட முயற்சித்தார்கள். கவின் மனதில் பயம் ஏற்பட்டது. "ப்ரோ! ப்ரோ! நான் குளிச்சிட்டு வந்து சட்டை போட்டுக்கிட்டு இருக்கேன். கொஞ்சோ வெயிட் பண்ணுங்க" என்றான். பதிலுக்கு கவினும் அறையின் வெளியே காத்துக்கொண்டிருந்தான். சுமார் 22 நிமிடத்திற்கு பிறகு கதவைத் திறந்தான் வெற்றி. கவின் அறையில் உள்ளே புகுந்து தனது பொருட்களை எல்லாம் அலமாரியில் வைக்கும் பொழுது வெற்றி தனது துண்டை எடுத்துக்கொண்டு குளிக்க செல்வதைக் கவனித்தான். கவினுக்கு இனம்புரியாத பல கேள்விகளை மனதில் ஓடின. "இப்போதான் குளிச்சிட்டு வந்து சட்ட போடுறேனு சொன்னான். மறுபடியும் குளிக்க போயிருக்கான்" என்று மனதிற்குள் கேள்விகளை எழுப்பினான் கவின். வெற்றி குளித்து முடித்துவிட்டு வெளியே சென்றதும் கவின் வெற்றியின் அலமாரியைப் பரிசோதித்தான். அந்நேரம், ஒரு நபரின் அனுமதியின்று அவர்களின் உடமைகளை ஆராய்வது தப்பு என்று அவனுக்கு சிறிதும் தோனவில்லை. அலமாரியின் கதவை திறந்தான். உள்ளே பெண்கள் பயன்படுத்தும் பல அழகு சாதன பொருட்கள் இருந்தது. இதை கவின் பார்த்ததும் அவன் அவ்வளவாக அதை பொருட்படுத்தவில்லை. அவன் பொருள் அவன் இஷ்டம் மற்றும் இந்த காலத்தில் ஓரின சேர்க்கையாளர் (கேய்) என்பது சாதாரணமாகி விட்டது என்று விட்டுவிட்டான். ஆனால், ஏன் அவன் குளித்துவிட்டதாகவும் 12 நிமிடமாய் அறையில் என்ன செய்துக் கொண்டிருந்தான் என்ற கேள்விகள் மட்டும் அவனை பித்துப் பிடிக்க வைத்தது.

எப்படியோ இந்த கேள்விகள் எல்லாம் நாட்கள் கடக்க கடக்க அவன் மனதில் சாயம் போன துணியைப் போல வெளுத்து விட்டது. வழக்கம் போல சனிக்கிழமை அன்று கவினின் தொலைபேசி கீச்சிட்டது. "ப்ரோ
, எப்போ ப்ரோ வரிங்க?" என்று வெற்றியிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது. "சோஇவன் வேற மைனா படம் சுதா பாஸ்கர் மாதிரி எப்போ பாத்தாலும் எப்போ வரீங்க? எப்போ வரீங்கனு கேட்டு கேட்டு கடுப்பேத்துறான்" என்று கவின் முணுமுணுத்துக் கொண்டே "நான் திங்கட்கிழமை வருவேன் " என்று பதிலளித்தான் கவின். சிறிது நேரம் கழித்து, கவினுக்கு தொலைபேசி மூலம் ஒரு அழைப்பு வந்தது. "கவின், ஞாயிறுக்கிழமை மாலையில் ஒரு ப்ராஜெக்ட் அனுப்பனும். அதனால், நீங்க நாளைக்கு காலையே ஆபீஸ் வந்துருங்க" என்று கவினின் மேலாளர் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.

 கவின் தனது பொருட்களை எல்லாம் சுமந்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணிக்கு தனது தங்கும் விடுதியை வந்து அடைந்தார். "வழக்கம் போல ரூம் கதவே பூட்டி வெச்சிருப்பான். இப்போ கதவை தட்டுனா தூங்கிட்டு இருப்பான். பரவாலே சாவி போட்டு தொறந்துருவோம்" என்று தனது பையிலிருந்து சாவியை எடுத்து கதவை திறந்தான். திருவிளையாடல் படத்தில் உலகமே நின்று போகுமே, அந்த காட்சியை கவின் தனது நிஜ வாழ்க்கையிலே கண்டான். வெற்றியும் வேறு ஒரு ஆணும் தகாத செயல்களை செய்துக் கொண்டிருந்ததைப் பார்த்து என்ன செய்வது என்று அறியாமல் அவன் அறை  கதவினை மூடிவிட்டு அறையின் வெளிய நின்றுக் கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து, வெற்றியும் அந்த ஆணும் தாங்கும் விடுதியை விட்டு வெளியே சென்றார்கள்.

 "இல்ல இல்ல,  நான் கண்டது நிஜமா? கனவா? காலையிலேயே இப்படி ஒரு காட்சியா? ஐயோ கடவுளே! இப்போ என்ன செய்றது?" என்று மனதில் பேசிக்கொண்டே பதற்றமானான் கவின். அறையின் கதவை மூடிவிட்டு கவின் மீண்டும் வெற்றியின் அலமாரியைச் சோதித்தான். அவன் ஆரம்பத்தில் பார்த்த அதே பொருட்கள் தான். "ஏதோ தப்ப இருக்கு... என் மனசு சரியா படல" என்று தனக்குளே பேசிக்கொண்டே பின்னால் திரும்பி பார்த்தான் கவின். வெற்றியின் மேசையின் அடியில் ஒரு சிறிய பெட்டி இருந்தது. கவின் அந்த  பெட்டியினைத் திறந்து பார்த்தான். அதில், நிறைய மருந்துகள் இருந்தன. கவினுக்குள் இன்னும் பல கேள்விகள் துளிர்விட்டது. அவன் மனதில் தோன்றும் கேள்விகள் எல்லாம் அது என்ன மருந்து என்பது தான். உடனே கவின் அவனின் கைத்தொலைபேசியில் மூலம் அந்த மருந்தினை படம் பிடித்து இணையம் மூலம் தேடினான். " டெனோபைர்  அளபெணமைட்  புமாரேட்" (TAF) என்று பெயர் கொண்ட அந்த மருந்து, HIV-க்கு பயன்படுத்தப்படும் மருந்து என்று குறிப்பிடப்பட்டதைப் பார்த்த கவினுக்கு பீதி தாக்குதல் ஏற்பட்டு உடல் நடுக்கம் ஏற்பட்டு விட்டது.

 "என்னாது இது? காலையிலேயே இருந்து இப்படி பட்ட காட்சிகள் எல்லாம் எனக்கு அடியா விழணுமா? நான் இப்போ என்ன பண்ணுவேன்? இல்ல இல்ல,  இந்த மருந்தைப் பத்தி முரளி கிட்ட கேப்போம். அவன் ஒரு டாக்டர் அதனால அவனுக்கு கண்டிப்பா இந்த மருந்து பத்தி நல்ல தெரியும் " என்று கவின் மனதில் யோசித்துக் கொண்டே தனது உற்ற தோழனுக்கு தொலைபேசியின் மூலம் அழைத்து அந்த, மருந்தை பற்றி விசாரித்தான். அந்த மருந்து, HIV-க்கான மருந்து என்று உறுதியாக தெரிந்த பின் கவின் அவன் தங்கும் விடுதியிலிருந்து வெற்றியிடம் ஒன்றும் கூறாமல் அந்நாளே நிரந்தரமாக வெளியாகிவிட்டான்.

 கவின் அவனது வீட்டிற்கு வந்த பிறகு, அவனது தங்கும் விடுதியில் உடன் தங்கிய வெற்றியின் கதையை தனது நண்பர்களிடம் கூறி கொண்டிருந்தான். இதற்கு அவர்களின் நண்பர்கள் வெவ்வேறு கருத்துக்களை முன் வைத்தார்கள். அந்த நண்பர் கூட்டத்தில் ஒருவன், "நடந்த இந்த விஷயத்தை பத்தி வேற யாருகிட்டயும் சொல்லாத டா. இதுனால ஏதாச்சும் விபரீதம் ஆகிற போகுது" என்றான். "ஏன் நீ யூனிவர்சிட்டிலே இத பத்தி கொம்பலேன் பண்ணலே? அவன் வேற வேற பிள்ளைங்க கூட தப்ப நடந்து தொற்ற பரவ வெக்கிறான். நீ சொல்லிருக்கலாம் டா," என்றான் மற்றொருவன். மூன்றாவதாக ஒருவன் " பேசாம இந்த விஷயம் நமக்கு தெரிஞ்சிருச்சுனு சொல்லி அவன மிரட்டி அவன் கிட்ட இருந்து காசு வாங்கலாமா?" என்றான். பலர் கவினிடம் பல கருத்துகள் கூறும் பொழுது அவனின் எண்ணலைகள், அவர்களுக்குள் நிகழும் உரையாடலின் மீது இல்லை மாறாக அவன் வேறுயோசித்துக் கொண்டிருந்தான். " வெற்றி தொற்று இருந்துகிட்டே வேற பிள்ளைங்களோடு தவறாக நடந்து குற்றம் புரிந்துள்ளான். நான் சந்திரன் பேரு சொல்லி யாருக்கும் தெரியாம சட்டவிரோதமா பல்கலைக்கழக  தங்கும் விடுதிலே தங்கி குற்றம் புரிஞ்சிருக்கேன். அப்போ இதுலே யார்தான் குற்றவாளி?" என்ற கேள்வியை மனதினுள் கேட்டு பதில் தெரியாமல் திண்டாடி கொண்டிருந்தான் கவின்.


பெயர் :ஹிரன் ரூபினி த/பெ சண்முகம்
மின்னஞ்சல் : [email protected]
விரிவுரையாளர் : இணைப்பேராசிரியர் முனைவர் முனீஸ்வரன் குமார் 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Thirsha

Very nice story👍🏻