இறைவனின் கருணையோ? - சிறுகதை

top-news
FREE WEBSITE AD

கண்களில் ஒரு பெரும் கொண்டாட்டத்திற்கான மகிழ்ச்சி மின்னியது. அன்று அவனது ஒரே மகள் மகிழினியின் முதலாவது பிறந்தநாள். பிறந்தநாளிற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே உற்றார் உறவினர், நண்பர்கள் என பல பேருக்கு அழைப்பிதல் விடுத்து மகளின் புத்தாடைகள் வாங்குதல்  என அனைத்து வேலைகளையும் தானே செய்து முடித்தான். கோலாலம்பூரில் உள்ள ஒரு பிரபலமான ஹோட்டல் அரங்கம் (முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. வண்ண விளக்குகள்பிரம்மாண்டமான கேக்விதவிதமான உணவுகள் என எல்லாவற்றிற்கும் சேர்த்து மணிமாறன் தன் சேமிப்பு முழுவதையும் செலவழித்திருந்தான். இன்னும் சில கட்டணங்களைச் செலுத்த வேண்டியிருந்ததால்

இன்னும் இரண்டு மணி நேரத்தில், அதாவது இரவு 7:30 மணிக்கு விழா ஆரம்பமாகப் போகிறது.

"இன்னும் ரெண்டு மணி நேரம் தான் இருக்கு. சீக்கிரம் கிளம்பி வாங்க," என்று கவிதா போனில் அவசரப்படுத்தினாள்.

"இதோ கிளம்பிட்டேன் கவி. இன்னும் ஒரே ஒரு டிரிப் (Ride) தான். இத முடிச்சா ஒரு நல்ல தொகை கைக்கு வரும். அத வாங்கிட்டு அப்படியே மண்டபத்துக்கு வந்துடுறேன்," என்று சொல்லிவிட்டு போனை வைத்தான். இந்தப் பரபரப்பிலும் அவன் தன் மகளுக்காக வாங்க வேண்டும் என்று நினைத்த அந்தத் தங்கச் சங்கிலியை வாங்கினான். அவ்வளவு அழகு. தன் மகளுகாகவே செய்தது போன்று இருந்தது என்று புன்னகையோடு அந்த நகைக்கடையில் கண்டெடுத்தான். மேலும் அதில் இருக்கும் அந்த பென்டன் இருதய வடிவம் அவனின் அன்பை எடுத்துச் சொன்னது. வாகனத்தில் அதை எடுத்து ரசித்துக்கொண்டு இருந்தான்.

போன்
'டிங்' என்று ஒலித்தது. மணிமாறனின் கார் இருந்த இடத்திற்கு மிக அருகிலேயே, கம்போங் பாருவின் ஒரு பழைய வீட்டின் முகவரியில் இருந்து அழைப்பு வந்திருந்தது. செல்ல வேண்டிய இடம் கோலாலம்பூர் பொது மருத்துவமனை.

மணிமாறன் காரைச் செலுத்தி அந்த வீட்டின் முன் நிறுத்தினான். அங்கிருந்து ஒரு முதியவர் மெதுவாக நடந்து வந்து காரின் பின் சீட்டில் அமர்ந்தார். அவர் கசங்கிய வெள்ளைச் சட்டையும், கைலியும் அணிந்திருந்தார். கையில் ஒரு சிறிய மருத்துவமனை ஃபைல் இருந்தது.

"அங்கிள்... ஹாஸ்பிடல் தான?" என்று மணிமாறன் கண்ணாடியின் வழியே பார்த்து மலாய் மொழியில் கேட்டான்.

"ஆமா தம்பி... கொஞ்சம் சீக்கிரம் போக முடியுமா?" என்றார் அவர் மிகவும் பலவீனமான குரலில்.

வழக்கமான கோலாலம்பூர் மாலை நேரத்து டிராஃபிக் (Traffic) மெல்லத் தொடங்க ஆரம்பித்திருந்தது. மணிமாறனின் கண்கள் கடிகாரத்தைப் பார்த்தன. மணி 6:00 ஆகிவிட்டது. எப்படியும் 6:30க்குள் இவரை இறக்கிவிட்டு, 7:00 மணிக்குள் தான் குளித்து உடை மாற்றி மண்டபத்திற்குச் சென்றுவிடலாம் என்று கணக்குப்போட்டான். ஆனால், கார் ஜாலான் துன் ரசாக் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென பின் சீட்டில் இருந்து ஒரு விசித்திரமான சத்தம் கேட்டது. மணிமாறன்  அதிர்ச்சியடைந்து பின்னோக்கிப் பார்த்தான். அந்த முதியவர் தன் நெஞ்சை பலமாகப் பிடித்தபடி, மூச்சு விட முடியாமல் திணறிக்கொண்டிருந்தார். அவரது வாய் கோணலாகி, கண்கள் மேல்நோக்கிச் சொருகின.

"அங்கிள்... அங்கிள்.... என்னாச்சு ?" என்று மணிமாறன்  பதற்றத்துடன் கத்தினான். ஆனால் அவரிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. அவரது உடல் நடுங்கி, சீட் மீதே சரிந்தார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பது மணிமாறனுக்குப் புரிந்தது.

மணிமாறனின் இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது. இன்னும் ஒன்றரை மணி நேரத்தில் மகளின் பிறந்தநாள் விழா தொடங்கப் போகிறது. அங்கே எல்லாரும் அவனுக்காகக் காத்திருப்பார்கள். இப்போது இவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதா, இல்லை காரை நிறுத்திவிட்டு ஆம்புலன்ஸை அழைப்பதா? ஆம்புலன்ஸ் வர இந்த டிராஃபிக்கில் நேரமாகும். அதற்குள் இந்த முதியவரின் உயிர் பிரிந்துவிடலாம்.

"என் மகளோட முதல் பிறந்தநாள்..." என்று அவன் உள்மனது துடித்தது. ஆனால், தன் கண் முன்னால் ஒரு உயிர் போவதை அவனால் பார்க்க முடியவில்லை.

மணிமாறன் காரின் 'ஹஸார்ட்' (Hazard) விளக்குகளை எரியவிட்டு, ஹாரனைத் தொடர்ந்து அடித்தபடி, டிராஃபிக்கையும் மீறி காரை அதிவேகமாகச் செலுத்தினான். எனினும், அவனது கைகள் பதற்றத்தில் நடுங்கின. மாலை 6:35க்கு மணிமாறனின் கார் டயர்கள் கோலாலம்பூர் பொது மருத்துவமனையின் அவசரப் பிரிவு வாசலில் அலறி நின்றது.

"டாக்டர்! சிஸ்டர்! சீக்கிரம் வாங்க... இவருக்கு நெஞ்சு வலி!" என்று கத்தினான்.

மருத்துவப் பணியாளர்கள் ஓடிவந்து முதியவரை ஸ்ட்ரெச்சரில் ஏற்றி அவசரச் சிகிச்சைப் பிரிவுக்குள் கொண்டு சென்றனர். மணிமாறனும் பதற்றத்துடன் உள்ளே ஓடினான். அங்கிருந்த ஃபார்மாலிட்டிகளை முடிக்கவும், முதியவரின் விபரங்களைச் சொல்லவும் அவனுக்குச் சில நிமிடங்கள் பிடித்தன.

டாக்டர் வெளியே வந்து, "நல்ல வேளை, சரியான நேரத்துக்குக் கூட்டிட்டு வந்தீங்க. இன்னும் அஞ்சு நிமிடம் லேட் ஆகியிருந்தா இவரைக் காப்பாத்தியிருக்க முடியாது. இப்போ ஸ்டேபிளா இருக்கார்," என்று மணிமாறனின் தோளைத் தட்டினார்.

மணிமாறனுக்கு அப்பாடா என்றிருந்தது. கடிகாரத்தைப் பார்த்தான். அவனது போன் தொடர்ந்து அலறிக்கொண்டே இருந்தது. எடுத்துப் பார்த்தான்; கவிதாவிடமிருந்து 15 மிஸ்டு கால்கள்.

"கவி, இதோ கிளம்பிட்டேன். வழியில ஒரு எமர்ஜென்சி. நான் இன்னும் 20 நிமிஷத்துல அங்க இருப்பேன். நீங்க விழாவை ஆரம்பிங்க," என்று பதற்றமாகப் பேசிவிட்டு, காரை நோக்கி ஓடினான். மனதில் இருந்த பதற்றமும், நேரமாகிவிட்டது என்ற பயமும் மணிமாறனின் கவனத்தைச் சிதறடித்தன. எப்படியாவது 7:15க்குள் மண்டபத்தை அடைய வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில் காரை அதிவேகமாக ஓட்டினான்.

மருத்துவமனைச் சாலையைத் தாண்டி, நெடுஞ்சாலையில் கார் தனது பயணத்தைத் தொடர்ந்தது. மழைக்காலத் தூறல் விழுந்து சாலை லேசாக வழுக்கிக் கொண்டிருந்தது.

மணிமாறன் ஒரு திருப்பத்தில் காரைத் திருப்ப முயன்றபோது, எதிர்பாராத விதமாக எதிரே வந்த ஒரு பெரிய லாரி சிக்னலை மதிக்காமல் அதிவேகமாக நுழைந்தது.

"ஐயோ!" என்று மணிமாறன் கத்துவதற்குள்...

'
டமார்!' என்ற பயங்கர சத்தத்துடன் அந்த லாரி, மணிமாறனின் புரோட்டான் காரின் பக்கவாட்டில் பலமாக மோதியது. மோதிய வேகத்தில் கார் சுழன்று, சாலையோரத் தடுப்பில் மோதி நின்றது. காரின் முன்பக்கக் கண்ணாடி நொறுங்கி சிதறியது. ஏர்பேக் (Airbag) பலூன் வெடித்தது.

மணிமாறனின் தலை ஸ்டீயரிங்கில் பலமாக மோதியது. அவனது நெற்றியிலிருந்து ரத்தம் வழிந்து கண்களை மறைத்தது.

சுற்றியிருந்தவர்கள் ஓடிவந்து காரின் கதவை உடைக்க முயன்றனர். மணிமாறனின் மொபைல் போன் காரின் தரையில் விழுந்து, ரத்தக் கறையுடன் சிதறிப் போயிருந்தது. அதில் கவிதாவின் புகைப்படம் 'கால்லிங்' என்று மின்னிக்கொண்டே இருந்தது. மணிமாறனின் கண்கள் மெல்ல மூடின. அவன் மயக்க நிலைக்குச் சென்றான். சுத்தியிருந்தவர்களில் ஒருவர் அம்புலன்சிற்குத் தகவல் சொல்ல... சிறிது நேரம் கழித்து அம்புலன்சும் வந்தது. மருத்துவப் பணியாளர்கள் மணிமாறனை ஸ்ட்ரெச்சரில் துக்கி வைத்து முச்சுத் திணறிய காரணத்தினால் முதலுதவி செய்யத் தொடங்கினர். கைகளில் எதோ ஒன்றை இறுக்கிப் பிடித்திருக்கிறார் என்று பணியாளர் ஒருவர் கூற இன்னொருவர் விரல்களை நகர்த்தி பார்த்தால் மகளுக்காக வாங்கிய சங்கலி. மகி என மகளின் பெயரை முனுங்கிக்கொண்டே கண்ணில் கண்ணீர் வழிய தன் கண்களை மூடிய  நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.


பெயர் : ஹரிஷினி வீரசிங்கம்
மின்னஞ்சல் : [email protected]
விரிவுரையாளர் : இணைப்பேராசிரியர் முனைவர் முனீஸ்வரன் குமார் 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *