வெளிநாட்டுக் கலைஞர்களுக்கு இருக்கும் வரவேற்பு நமது கலைஞர்களுக்கு இல்லை! ஓம்ஸ் பா.தியாகராஜன் வருத்தம்
- Shan Siva
- 18 Aug, 2024
கிள்ளான், ஆகஸ்ட் 18: மலேசியத் தமிழ்
கலைஞர் இயக்கத்தின் கட்டட நிதிக்கான நிதி திரட்டும் சிறப்புக் கலை நிகழ்ச்சி, கிள்ளான் லெக்ஷ்மணன் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வுக்குச் சிறப்பு
வருகையாளர்களாக மலேசிய அரிமா சங்கத்தின் தோற்றுநரும், ஓம்ஸ் அறவாரியத்
தலைவருமான ஓம்ஸ் பா.தியாகராஜன், செந்தோசா சட்டமன்ற உறுப்பினர்
டாக்டர் குணராஜ் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
ஆடல் பாடல் நகைச்சுவை என மிகச்சிறப்பாக
நடைபெற்ற இந்நிகழ்வில் பேசிய ஓம்ஸ் பா.தியாகராஜன், வெளிநாட்டுக் கலைஞர்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை நமது
நாட்டுக் கலைஞர்களுக்கு கொடுப்பதில்லை என்று வருத்தம் தெரிவித்தார். நம் நாட்டிலும் சிறந்த கலைஞர்கள் இருக்கிறார்கள். இந்த நிகழ்வில் பங்கேற்ற
அத்தனை கலைஞர்களும் சிறப்பான பங்களிப்பைச் செய்துள்ளனர். ஆனால், இதைக் கண்டுகளிக்க நம் மக்களுக்குத்தான் கொடுத்து வைக்கவில்லை, வெளிநாட்டுக் கலைஞர்கள் என்றால் கூட்டம் நிரம்புகிறது, ஆனால், நமது நாட்டுக் கலைஞர்களுக்கு நம் மக்களின் வரவேற்பு
குறைவாகவே உள்ளது இந்த நிலை மாற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
நிகழ்வில் பேசிய செந்தோசா சட்டமன்ற
உறுப்பினர் குணராஜ், கலைஞர்களின் படைப்புகள்
சிறப்பாக இருந்ததாகக் குறிப்பிட்டார். கலைஞர்களுக்குத் தேவையான உதவிகளை அரசு மூலம்
ஏற்பாடு செய்தாகக் கூறினார். இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி
அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
நிகழ்வின் தொகுப்பாளரும், ‘மிஸ்டர் & மிசஸ்’ திரைப்படத்தின் இயக்குநருமான கோபிந்த்சிங் தனது திரைப்படம் குறித்துப் பேசினார்.
நமது நாட்டுக் கலைஞர்களின் படைப்பைக் கண்டுகொள்ள நம்மவர்கள் பலருக்குன் மனம் இல்லை.
ஆனால், தமிழ் நாட்டிலிருந்து ஒரு படத்தின் டிரெய்லரை மலேசியாவில் வெளியிட்டாலே கொண்டாடித் தீர்க்கிறார்கள்.
இது தவறில்லை. அதே நேரத்தில் நம்ம கலைஞர்களையும் ஆராதிக்கலாமே என அவர் கேட்டுக்கொண்டார்.
தனது மிஸ்டர் & மிசஸ்’ திரைப்படத்தை தியேட்டரில் சென்று
பார்க்குமாறு வலியுறுத்திய அவர், படம் சரியில்லை என்றால் டிக்கெட்டுக்கான
பணத்தை திருப்பித் தந்துவிடுகிறேன் என அரங்கத்தில் உள்ளவர்களைப் பார்த்துக் கூறினார்.
தன் கலையின் மீது அந்த அளவுக்கு நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பதை அது உணர்த்தியது.
நிகழ்ச்சியில் ஆடலும், பாடலும் மிக நேர்த்தியாக ரசிக்கும் வகையில் இருந்ததில் வந்திருந்தவர்கள்
மெய்மறந்து ரசித்தனர். இத்தனை திறமைசாலிகளா? என வியக்க வைக்கும்
அளவுக்குத் தங்களின் திறமையை வெளிப்படுத்தினர். ‘மார்கழி திங்கள்
அல்லவா’ பாடிய அந்தச் சகோதரி அந்தப் பாடலைப் பாடிய நிஜ பாடகிக்குச்
சமமானவராக அசத்தினார். கூட்டம் ஆச்சரியத்தில் விழி விரித்தது. மற்ற பாடகர்களும் உற்சாகமாக
தங்கள் பாடல்களால் அனைவரையும் கவர்ந்தனர்.
நிகழ்வில் மூத்த கலைஞர்களுக்குச்
சிறப்பு செய்யப்பட்டது. நலிந்த கலைஞர்கள் நல்வாழ்வு பெற, மலேசியக் கலைஞர்கள் மென்மேலும் உயர நாமும் வாழ்த்துவோம்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *