தெருக்கூத்தாகவிட்டது நமது வழிபாடு -ஓம்ஸ் பா.தியாகராஜன்!

top-news
FREE WEBSITE AD

தெருக்கூத்தாகவிட்டது நமது வழிபாடு என்று ஓம்ஸ் அறவாரியத் தலைவரும் மலேசிய அரிமா சங்கத்தின் தோற்றுநருமான ஓம்ஸ் பா.தியாகராஜன் வருத்தம் தெரிவித்துள்ளார்.நேற்று கிள்ளானில் நடைபெற்ற முருகவேள் பன்னிரு திருமுறை இரண்டாவது கருத்தரங்கம் 2025 நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்தார்.

உலகின் மிக உயரமான முருகர் மலேசியாவில்தான் இருக்க்கிறார் என்று தமிழக பேராளர் தெரிவித்திருந்தார். அது எங்களுக்கும் பெருமையாக இருந்தாலும்கூட, தம்மைப் பொருத்தவரை முருகர் எவ்வளவு உயரமாக இருக்கிறார் என்பதை விடவும், முருகரை எப்படி உயர்வாக, நம் புனிதத் தன்மை கெடாமல் வழிபடுகிறோம் என்பதுதான் முக்கியம். அதற்கு ஓர் உதாரணம்தான் இதுபோன்ற மாநாடுகள் கருத்தரங்குகள் எல்லாம் என்று அவர் கூறினார்.

எங்களுக்கு ஆறு வயதிலேயே எங்கள் தந்தை திருமுறைகளையும், பக்தி பதிகங்களையும் சொல்லிக் கொடுத்தார். காட்டுப் பகுதிக்குள் அழைத்துச் சென்று குச்சிகளை கையில் கொடுத்து கோலாட்டம் ஆடிக்கொண்டே ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று என பாடி ஆடச் சொல்லி உற்சாகப்படுத்தினார் என நெகிழ்ச்சியோடு பேசினார். பால்காவடி, பால்குடம், தீச்சட்டி எல்லாம் அன்று புனிதமான நேர்த்திக்கடன்களாக நிறைவேற்றப்பட்டன. ஆனால் இன்று இஷ்டத்துக்கு நம் நேர்த்திக்கடன்களை மாற்றி அமைத்து நம் பண்பாட்டை நாமே அவமதிக்கிறோம் என்று அவர் வருத்தப்பட்டார்.

எல்லாம் தெருக்கூத்தாக மாறிவிட்டது, மாறிக்கொண்டு இருக்கிறது.துரியான் காவடி, மென்செஸ்டர் யுனைட்டட் காவடி, அரசியல் கட்சி காவடி, கிரேன் காவடி என வேடிக்கைக் காட்டுகிறார்கள். இது போன்ற நிலை மாற வேண்டும் என்பதற்காகத்தான், சமய நெறிகளின் உன்னதங்களைப் புரிந்துகொள்ள இதுபோன்ற கருத்தரங்குகள் நடைபெறுவதாக அவர் கூறினார்.

முன்னாள் துணை அமைச்சர் டான்ஸ்ரீ க.குமரனின் நேற்று கிள்ளான் தெலுக் புலாய் ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தின் நாவலர் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழகம் இலங்கை பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளின் பேராளர்கள் கலந்துகொண்டு திருமுருகனின் புகழ் பாடினர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *