பெண்கள் முன்னேற்றம் மேலும் வலுப்படுத்த வேண்டும் – அகமட் ஸாஹிட்
- Surendran Sumdraraj
- 07 Apr, 2026
கோலாலம்பூர், ஏப். 7-
பெண்களின் முன்னேற்றும் முயற்சிகள் மேலும் விரிவாகவும் முழுமையாகவும் வலுப்படுத்தப்பட வேண்டும் என துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், பெண்களுக்கு நிதி உதவிகளுக்கான அணுகல், திறன் பயிற்சிகள், டிஜிட்டல் தளங்களின் பயன்பாடு மற்றும் தொழில் விரிவாக்க வாய்ப்புகள் வழங்கப்படுவது அவசியம் என்றார். இவ்வாறு செய்தால், அவர்கள் போட்டித்திறனை மேம்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
உலகளாவிய பொருளாதார அலைச்சல்களால் வாழ்வுக் கட்டண உயர்வு மற்றும் உள்நாட்டு பொருளாதார சவால்கள் அதிகரித்துள்ள நிலையில், பெண்களும் இதனால் பாதிக்கப்படுகின்றனர் என அவர் தெரிவித்தார்.
“இன்று மாலை ‘Voices of HER’ கருத்தரங்கத்தை நான் தொடங்கி வைத்தேன். இதில் பல தரப்பினரும் கலந்து கொண்டு, நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கைப் பற்றி விவாதித்தனர். குடும்பம் உருவாக்குதல், சமூகத்தை வலுப்படுத்துதல் மற்றும் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுப்பதில் பெண்களின் பங்கு மிக முக்கியமானது,” என்று அவர் கூறினார்.
பெண்கள் வெறும் பங்கேற்பாளர்களாக மட்டுமல்லாமல், முடிவெடுக்கும் அதிகாரம், சொத்து மற்றும் வாய்ப்புகளைப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இது அவர்களை உண்மையாக வலுப்படுத்தி, தலைமைத்துவ நிலைகளில் முன்னேற்றும் என்று அவர் குறிப்பிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



