கேரளாவில் தேர்தல் நெருங்கும் நிலையில் மோடியை சந்தித்த முஸ்லீம் தலைவர்!
- Muthu Kumar
- 18 Feb, 2026
இந்திய கிராண்ட் முப்தி காந்தபுரம் ஏ.பி.அபூபக்கர் முஸ்லியார் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா என்பவர், ஏமன் நாட்டு சிறையில் மரண தண்டனை கைதியாக உள்ளார். அவரை விடுவிக்க ஒன்றிய அரசுடன் இணைந்து காந்தபுரம் அபூபக்கர் முஸ்லியார் தொடர்ந்து பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
மேலும், கேரளாவில் சட்டப் பேரவை தேர்தல் நெருங்கும் வேளையில் சிறுபான்மையினரின் கல்வி மற்றும் சமூக மேம்பாட்டிற்காக ஜாமியா மர்கஸ் மற்றும் சமஸ்தா ஆகிய அமைப்புகள் பல்வேறு பணிகளைச் செய்து வருகின்றன. இந்த அமைப்புகளின் கல்வி சேவைகளை ஏற்கனவே பாராட்டியுள்ள பிரதமர் மோடி, நாட்டின் சமூக முன்னேற்றத்திற்கு இவை பெரும் பங்காற்றுவதாக பலமுறை குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், இந்திய கிராண்ட் முப்தியும் சமஸ்தா கேரள ஜமியத்துல் உலமா அமைப்பின் பொதுச்செயலாளருமான காந்தபுரம் ஏ.பி.அபூபக்கர் முஸ்லியார், நேற்று டெல்லியில் உள்ள அதிகாரப்பூர்வ இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் முன்னிலையில் நடந்த இந்த சந்திப்பில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள், வக்ஃப் வாரிய விவகாரங்கள் மற்றும் மவுலானா ஆசாத் தேசிய பெல்லோஷிப் போன்ற சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகைகளை மீண்டும் வழங்குவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. கேரள தேர்தல் நேரத்தில், முஸ்லீம் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்தது, கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



