கிழக்கு உக்ரைனை ஒப்படைத்தால்,போர் நிறுத்தம் பற்றி யோசிக்கலாம் - ரஷ்யா!
- Muthu Kumar
- 10 Aug, 2025
அமெரிக்காவின் பேச்சை கேட்டுக்கொண்டு நேட்டோவில் இணைய உக்ரைன் துடித்த நிலையில், அதன் மீது ரஷ்யா போரை நடத்தி வருகிறது.இந்த போர் மூன்று ஆண்டுகளாக தொடரும் நிலையில், கிழக்கு உக்ரைனை விட்டுக்கொடுத்தால் போர் நிறுத்தம் சாத்தியமாகும் என ரஷ்ய தரப்பு தற்போது கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மூன்றாண்டு போரை முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டிருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப், முதலில் உக்ரைனை மிரட்டி பார்த்தார். ஆனால் அது பெரிய அளவில் வேலைக்கு ஆகவில்லை. இதனையடுத்து தற்போது ரஷ்யா பக்கம் வந்திருக்கிறார்.
போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் ஆகஸ்ட் 15 அன்று அலாஸ்காவில் சந்திக்கவுள்ளனர். இந்தப் பேச்சுவார்த்தையில், அமைதி ஒப்பந்தத்திற்கான மத்தியஸ்தராக டிரம்ப் செயல்படவுள்ளார்.
கிழக்கு உக்ரைனிலிருந்து நேட்டோ படைகளும் உக்ரைனும் விலகிக்கொண்டால், போர் நிறுத்தத்திற்கு புதின் ஒப்புக்கொள்வார் என்று 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' ஊடகம் தெரிவித்திருக்கிறது. ஐரோப்பிய மற்றும் உக்ரைனிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. போரை முடிவுக்குக் கொண்டுவர, கிழக்கு உக்ரைன் மீது முழு கட்டுப்பாடும் அதற்கான சர்வதேச அங்கீகாரத்தையும் ரஷ்யா விரும்புவதாக ஊடகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
உக்ரைனின் லுஹான்ஸ்க், டொனெட்ஸ்க், சபோரிஜியா மற்றும் கெர்சன் ஆகிய நான்கு மாகாணங்களை தங்கள் வசம் ரஷ்யா கோருகிறது. இது குறித்து பேசிய டிரம்ப், "எந்தவொரு அமைதி ஒப்பந்தத்திலும் நிலப்பரப்பு பரிமாற்றங்கள் இடம்பெற வாய்ப்புள்ளது.
சில பகுதிகளை நாம் திரும்பப் பெறுவோம், சில பகுதிகள் மாற்றப்படும். இரு தரப்புக்கும் நன்மை பயக்கும் வகையில் நிலப்பரப்பு பரிமாற்றங்கள் இருக்கும்" என்று கூறினார். ஆனால் எந்தெந்த பகுதிகள் ரஷ்யாவுக்கு போகும் என்பது குறித்து அவர் வெளிப்படையாக எதையும் தெரிவிக்கவில்லை.
அதிபர் புதின் அமைதியை விரும்புகிறார் என்று நான் நம்புகிறேன்" என்றும் டிரம்ப் குறிப்பிட்டார். ட்ரூத் சோஷியலில் அவர் பதிவில் "அமெரிக்க அதிபராகிய நானும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் சந்திப்பு, அடுத்த வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 15, 2025 அன்று, அலாஸ்காவின் மாபெரும் மாநிலத்தில் நடைபெறும். மேலும் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்"
2021-ல் அப்போதைய அதிபர் ஜோ பைடன் புதினை ஜெனீவாவில் சந்தித்த பிறகு, இது முதல் அமெரிக்க-ரஷ்ய உச்சிமாநாடாக அமையவுள்ளது. போர் குறித்து புதினிடம் பேசத் திட்டமிட்டு உள்ளதாகவும், அமைதி ஏற்படுத்துவதற்கு "நமக்கு வாய்ப்பு உள்ளது" என்றும் டிரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்த சில மணிநேரங்களிலேயே இந்த அறிவிப்பு வெளியானது. அமெரிக்க தூதர் ஸ்டீவ் விட்கோஃப் மாஸ்கோவில் புதினை சந்தித்த பிறகு, ரஷ்ய அரசும் இந்த சந்திப்பை உறுதிப்படுத்தியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



