இரு கட்சிகள் வெளியேறிவிட்டாலும் சபாவை ஜிஆர்எஸ்ஸினால் மீண்டும் ஆட்சி புரிய முடியும்! - அரசியல் ஆய்வாளர்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், அக்.7-

சபா மாநில ஆளும் காபுங்ஙான் ரக்யாட் சபா (ஜிஆர்எஸ்) கூட்டணியிலிருந்து இரண்டு மாநிலக் கட்சிகள் வெளியேறிவிட்ட போதிலும், எதிர்வரும் மாநில சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் மாநில அரசாங்கத்தை அக்கூட்டணியினால் தொடர்ந்து ஆட்சி புரிய முடியும்.

கூட்டணியிலிருந்து அவ்விரு கட்சிகளும் விலகிக் கொண்டிருப்பதால், அதனால் ஜிஆர்எஸ்சுக்கு இருக்கும் செல்வாக்கு குறைந்து தோல்விக்கு வழிவகுக்கலாம் என்று கூறப்படுவதையும் அரசியல் ஆய்வாளர் ஒருவர் நிராகரித்திருக்கின்றார்.

மாநில முதலமைச்சர் ஹஜிஜி நோர் தலைமையில், சபா மாநிலத்தின் நலன்களுக்காகப் போராடும் மாநிலக் கட்சிகளைக் கொண்டு ஒரு கூட்டணியை உருவாக்கி இருப்பதனால், ஜிஆர்எஸ் தனது அடையாளத்தை நிலைநிறுத்திக் கொண்டிருப்பதாக, சபா மலேசிய பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த லீ குவோக் தியுங் தெரிவித்துள்ளார்.

ஒரு தனிக் கட்சியின் ஆதிக்கத்தைக் காட்டிலும், கூட்டாகச் சேர்ந்து முடிவெடுக்கும் அடிப்படையில் ஜிஆர்எஸ் செயல்பட்டிருப்பதாகக் கூறிய அவர், மாநில சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் ஜிஆர்எஸ் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றினால் இத்தகைய நடைமுறை தொடரும் என்று தாம் நம்புவதாகத் தெரிவித்தார்.

"சபா மாநிலத்தின் அரசியல் கட்சிகளின் கூட்டு ஒத்துழைப்பில் ஜி.ஆர்எஸ்ஸின் வலிமை அடங்கி இருப்பதன் காரணத்தினால், (பார்டி சொலிடரிட்டி தானா ஆயர்கு (ஸ்டார்) மற்றும் சபா முன்னேற்றக் கட்சி (எஸ்ஏபிபி) ஆகியவை விலகி இருப்பதால்) ஜிஆர்எஸ்சில் இடம் பெற்றிருக்கும் உள்ளூர்க் கட்சிகளின் உணர்வும் போராட்டமும் பாதிக்கப்படாது.

"வரும் மாநில சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பதை நாம் முதலில் பார்க்க வேண்டும். ஜிஆர்எஸ் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்றால், கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை" என்று நேற்று அவர் தெரிவித்தார்.ஸ்டார் மற்றும் எஸ்ஏபிபி ஆகிய கட்சிகள் வெளியேறி இருப்பதனால், ஓர் உள்ளூர் கூட்டணி எனும் முறையில் ஜிஆர்எஸ்சின் வலிமை பலவீனமடைந்து விடும் என்ற தகவல் குறித்து கருத்துரைக்கும் போது லீ தெரிவித்தார்.

மாநிலத்தின் மொத்தம் 73 சட்டமன்றத் தொகுதிகளில் 18இல் போட்டியிட பக்காத்தான் ஹராப்பானுக்கு வாய்ப்பு
வழங்கப்பட்டுள்ள வேளையில், அது 23 தொகுதிகளை கேட்பதாக அறியப்படுகின்றது என்று, ஜிஆர்எஸ் தலைமைச் செயலாளர் மசிடி மஞ்சுன் கூறினார்.

ஜிஆர்எஸ்சிலிருந்து ஸ்டார் மற்றும் எஸ்ஏபிபி கட்சிகள் கடந்த புதன்கிழமை வெளியேறியதற்கான காரணங்களில், பக்காத்தான் ஹராப்பானுக்கான தொகுதி ஒதுக்கீடு விவகாரமும் ஒன்றாகும். தற்போதைய நிலவரப்படி அவ்விரு கட்சிகளும், எதிர்வரும் மாநில சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாகவும் அறிவித்துள்ளன.

ஸ்டார் மற்றும் எஸ்ஏபிபி ஆகியவை இல்லாத நிலையில், பார்டி காகாசான் ரக்யாட் சபா, பார்டி பெர்சத்து சபா, யுனைட்டெட் சபா நேஷனல் ஆர்கனிசேஷன், லிபரல் டெமோக்ராசி பார்டி, பார்டி ஹராப்பான் ரக்யாட் சபா மற்றும் பார்டி சிந்தா சபா ஆகிய மாநில கட்சிகள் தற்போது இடம் பெற்றிருக்கின்றன.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *