பதவியில் இருக்கும்போதே இறக்க விரும்புகிறேன்-பாஸ் தலைவர் ஹாடி அவாங்!
- Muthu Kumar
- 12 Jul, 2025
கோலாலம்பூர், ஜூலை 12-
வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவிருக்கும் பாஸ் கட்சித் தேர்தலில் தமது தலைவர் பதவியைத் தற்காக்க மீண்டும் போட்டியிடவிருப்பதை அப்துல் ஹாடி அவாங் கோடிகாட்டி இருக்கிறார்.தேசிய இருதயக் கழகத்தில் (ஐஜேஎன்) மருத்துவ சிகிச்சை பெற்ற பிறகு தமது உடல்நிலை தேறி வருகிறது என்று பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு ஆளாகியிருப்பவரான ஹாடி கூறினார்.
சாத்தியப்படுமென்றால் பதவியில் இருக்கும்போதே இறக்க விரும்புகிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.கடந்த 2003ஆம் ஆண்டிலிருந்து பாஸ் கட்சியின் தலைவராக இருந்துவரும் ஹாடி உடல் நலக்குறைவுக்கு ஆளாகியிருப்பதால் அவர் பதவி விலகக்கூடும் என ஊகங்கள் வெளியாகி உள்ளன. அது பற்றி கருத்துரைக்கும்படி கேட்டதற்கு, ஹாடி அவ்வாறு பதிலுரைத்தார்.
கடந்த சில ஆண்டுகளாகவே ஹாடியின் உடல்நிலை மோசமடைந்து வருகிறது. அவருக்குச் சிறுநீரகச் சுத்திகரிப்புச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதோடு பரிசோதனைக்காக அடிக்கடி மருத்துவமனைக்கும் அவர் சென்று வருகிறார். ஏழு தவணைகளுக்கு மாராங் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஹாடி, உடல்நலக் குறைவு காரணமாகத் தாம் வகித்துவரும் பாஸ் தலைவர் பதவியைத் துறக்கலாம் என கடந்த மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது.
திரெங்கானுவில் நடைபெற்ற பாஸ் பொறுப்பாளர்களின் கூட்டத்தில் அவர் அவ்வாறு கூறியதாக அறியப்படுகிறது.
தலைவர் பதவியிலிருந்து விலகும்படி ஹாடிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டதாக பாஸ் டேவான் உலாமா குழுவின் உறுப்பினர் மொக்தார் செனிக் தெரிவித்திருந்தார். ஆனால், அக்கூற்றை மாநிலத் தலைவர்கள் பலர் மறுத்துள்ளனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



