பக்காத்தானுக்கு உற்சாக வரவேற்பு!
- Shan Siva
- 24 Nov, 2025
லஹாட் டத்தோ, நவ 24: சபா சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சார முன்னெடுப்புகள் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கல்வி அமைச்சின் சிறப்பு அதிகாரி தியாகராஜ் சங்கரநாராயணன் சபாவிற்குச் சென்று தேர்தல் களப்பணி ஆற்றி வருகிறார். அவருடன் ஓம்ஸ் அறவாரியத் தலைவரும், மலேசிய அரிமா சங்கத்தின் தோற்றுநருமான ஓம்ஸ் பா.தியாகராஜனும் பங்கேற்று தமது ஆதரவைத் தெரிவித்து வருகிறார்.
அந்த வகையில் தியாகராஜ் சங்கரநாராயணன் தலைமையிலான குழுவினர் லஹாட் டத்தோ நாடாளுமன்றத்திற்குட்பட்ட செகாமா சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ரொமான்ஸா லாமினுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக அந்த தொகுதிக்கு உட்பட்ட மக்களைச் சந்தித்து வாக்குகளைச் சேகரித்து வருவதோடு, பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு பிரச்சாரத்தை தொடர்கின்றனர்.
சபா மக்களின் பேராதரவு பக்காத்தான் ஹராப்பானுக்கு இருப்பதை தம்மால் உணர முடிவதாகவும், குறிப்பாக செகாமா தொகுதி மக்கள் இத்தொகுதியின் வேட்பாளர் ரொமான்ஸாவுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்து தங்களின் ஆதரவைத் தெரிவிப்பதாகவும் தியாகராஜ் சங்கரநாராயணன் கூறினார்.
மேலும் தம்முடன் கலந்துகொண்டு ஆதரவு நல்கி களப்பணியாற்றும் ஓம்ஸ் தியாகராஜன் மற்றும் குழுவினருக்கு தாம் நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



