பாலஸ்தீன விவகாரம் குறித்து டிரம்புடன் பேசுவேன்! - அன்வார்
- Shan Siva
- 16 Sep, 2025
கோலாலம்பூர், செப் 16: அடுத்த மாதம் நடைபெறும் ஆசியான் உச்சி மாநாட்டில்,
காசா பிரச்சினை மற்றும் இஸ்ரேல் கத்தார் மீதான
தாக்குதல் குறித்த நாட்டின் நிலைப்பாட்டை பிரதமர் அன்வார் இப்ராஹிம் அமெரிக்க
அதிபர் டொனால்ட் டிரம்புடன் மீண்டும் வலியுறுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்தாரின்
தோஹாவில் நடைபெறும்அரபு-இஸ்லாமிய உச்சி மாநாட்டில் அன்வர் இந்த உறுதிமொழியை
அளித்ததாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.
அதிபர் டிரம்புடனான சந்திப்பில், காசா மற்றும் பாலஸ்தீனம் உட்பட நீதியைப்
பெறுவதில் மலேசியாவின் தெளிவான மற்றும் உறுதியான நிலைப்பாட்டைப் புரிந்துகொள்ள
அவரை வலியுறுத்த இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துவோம் என்று அவர் தோஹாவில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
ஆசியான் தலைவராக,
முக்கிய உலகத் தலைவர்களின் கவனத்தை ஈர்க்கும்
வகையில், பாலஸ்தீன மக்களுடனான
மலேசியாவின் ஒற்றுமையும் கூட்டத்தில் எழுப்பப்படும் என்று அவர் கூறினார்.
டிரம்பைத் தவிர,
சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா மற்றும்
தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா ஆகியோர் கோலாலம்பூரில் நடைபெறும் 47வது
ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள எதிர்பார்க்கப்படும் உலகத் தலைவர்களில்
அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



