உண்மையைச் சொல்வேன் அஞ்சமாட்டேன் தாக்குதலுக்குள்ளான டத்தோஸ்ரீ ஞானராஜா திட்டவட்டம்!
- Muthu Kumar
- 08 Aug, 2025
(கு.தேவேந்திரன்)
கோலாலம்பூர், ஆக. 8-
என் மீதான தாக்குதலுக்கு சதிச் செயல் மட்டுமல்ல. வேறு காரணங்களும் இருக்கலாம். இதுவொரு கொள்ளைச் சம்பவம் அல்ல என்பது மட்டும் உண்மை. "வாயைத்திறக்காதே - வாயைத்திறக்காதே... இதுதான் உனக்கு நாங்கள் விடுக்கும் கடைசி எச்சரிக்கை. இந்த வெட்டு உனக்கு எச்சரிக்கையாகும் " என்று தம்மை தாக்கவந்தவர்கள் கூறினர். எந்தப் பிரச்சினை வந்தாலும் உண்மையைச் சொல்வேன்- அஞ்சமாட்டேன் என பிரபல தொழிலதிபர் டத்தோஸ்ரீ ஞானராஜா கூறினார்.
நேற்று செந்தூல் மெட்ராஸ் கபே உணவகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் பேசினார்.இந்தச் செய்தியாளர்கள் கூட்டத்தில் தமது துணைவியார் டத்தோ கீதாஞ்சலியும் ம.இ.கா. சார்பில் வழக்கறிஞர் டத்தோ ஆர்.டி.இராஜசேகரன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.மேலும் பேசிய டத்தோஸ்ரீ ஞானராஜா, அதிகாலை 6.30 மணிக்கு இருக்கும்.வேலைக்குச் செல்லத் தயாராக இருக்கும் நேரத்தில் திடீரென்று சுமார் 7 அல்லது எட்டுப் பேர் வீட்டுக்குள் புகுந்து என்னைத் தாக்க முற்பட்டனர்.அதுவும் வீட்டிலுள்ளவர்களையும் பாதுகாவலர்களையும் கட்டிப் போட்டுவிட்டு அவர்கள் இந்தச் செயலைச் செய்துள்ளனர் என்று டத்தோஸ்ரீ ஞானராஜா கூறினார்.
நான் இருக்கின்ற இடம் பிரதமரின் அலுவலகம் இருக்கும் இடமாகும். அதுமட்டுமல்ல அங்கு விஜபிகள் வசிக்கின்ற இடமாகும். குறிப்பாக ஒன் உத்தாமா உரிமையாளர் வீடும் அங்குதான் உள்ளது. அதையும் மீறி இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது. இந்த இடத்தில் திருடுவதற்கு வாய்ப்பு கிடையாது.
என்னைத் தாக்குகின்ற நேரத்தில் வாயைத் திறக்கக்கூடாது வாயைத் திறக்கக்கூடாது என்று கூறி ஏதோ ஒரு நோக்கத்தில் வந்ததுபோல் உள்ளது.மேலும் அரிவாளுடன் வந்து கையை வெட்டினர். இதுவோர் எச்சரிக்கை. இந்த வெட்டு இன்னமும் ஆழமாகப் போகலாம். இதைவிட பெரிதாகப் போகலாம். இது உன் கையில்தான் உள்ளது. நீ வாயைத் திறக்கலேனா இத்தோடு நிறுத்தப்படும். மீண்டும் நாங்கள் வரும்படி வைத்துக் கொள்ளாதீர்கள் என்று அவர்கள் மிரட்டியதாக டத்தோஸ்ரீ ஞானராஜா சொன்னார்.
செய்தியாளர் கூட்டத்தில் பேசிய டத்தோஸ்ரீ ஞானராஜாவின் துணைவியார் டத்தோ கீதாஞ்சலி பேசுகையில், இதை எப்படி ஒரு கொள்ளைச் சம்பவம் என்று போலீஸ் உடனடியாக அறிக்கை வெளியிட்டது என்று ஆச்சரியமாக இருக்கிறது என்றார்.இது திட்டமிட்டபடி நடந்த சம்பவமாக நினைக்கின்றேன். போலீஸ் உரிய நடவடிக்கை எடுத்து விசாரிக்க வேண்டும். இந்த நேரத்தில் ஒன்றை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.சம்பவம் நடந்தபோது நான் வீட்டில் இல்லை.
வீட்டில் ரகசிய கண்காணிப்பு கேமரா (சிசிடிவி) பொருத்தப்பட்டுள்ளது. அதன்மூலம் நான் என் கைபேசியின் மூலம் இந்தச் சம்பவத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். உடனடியாக நான் போலீசுக்கு தகவல் கொடுத்தேன். ஆனால் இரண்டே இரண்டு போலீஸ் அதிகாரிகள்தான் வந்தனர்.ஏழெட்டுப் பேர் நடத்திய கொள்ளைச் சம்பவத்திற்கு இரண்டே இரண்டு போலீஸ் அதிகாரிகள் வந்திருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது.
இந்தச் சம்பவத்தால் நாங்கள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். என் பிள்ளைகள், குடும்பத்தினர் பாதுகாப்பு குறித்து நான் கவலை அடைந்துள்ளேன்.ஏதோ இதுவொரு கொள்ளைச் சம்பவம் போல் சித்தரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை இப்போதைக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு டத்தோ கீதாஞ்சலி தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



