டாமன்சாரா டோல் சாவடிக்கு அருகே ரிம.3,300,000 மதிப்புள்ள ஷாபு பறிமுதல்!
- Muthu Kumar
- 03 Oct, 2025
கோலாலம்பூர், அக்.3-
டாமன்சாரா டோல் சாவடிக்கு அருகே ஓர் ஆடவன் விட்டுச் சென்ற எம்பிவி வாகனத்தில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் வெ.3,300,000 மதிப்புள்ள 150 கிலோ ஷாபுவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கடந்த திங்கள்கிழமை மாலை 4.00 மணிக்கு மத்திய வட்டார நெடுஞ்சாலை ரோந்து குழுவினர் அந்த எம்பிவி வாகனத்தை என்கேவிஇ நெடுஞ்சாலையின் தெற்கு 18ஆவது கி.மீட்டரில் நிற்கும்படி உத்தரவிட்டனர். எனினும், அதன் ஓட்டுநர் ஒத்துழைக்க மறுத்து விட்டதாகச் சாலைப் போக்குவரத்து விசாரணைத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ முகமட் யுஸ்ரி ஹசான் பஸ்ரி தெரிவித்தார்.
தப்பியோடும் முயற்சியில் அந்த எம்பிவி ஓட்டுநர் டோல் கட்டணச் சாவடியை மோதி வாகனத்தை டாமன்சாரா டோல் சாவடியின் வலதுபுற வரிசையில் விட்டுச் சென்றார்.அதில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் 6 சாக்குப் பைகள் இருந்தன. ஒவ்வொன்றிலும் 25 பொட்டலங்கள் வீதம் 150 பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அனைத்து பொட்டலங்களிலும் 1 கிலோ எடை கொண்ட ஷாபு இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
இதில் அந்த வாகனம் உட்பட போதைப்பொருளும் 1952 அபாயகர போதைப்பொருள் சட்டம், 39பி பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ள பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்டன. தற்போது தப்பிச் சென்ற ஆடவனை போலீஸ் தேடி வருவதாக ஓர் அறிக்கையில் டத்தோஸ்ரீ முகமட் யுஸ்ரி ஹசான் பஸ்ரி குறிப்பிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



