சென்னையில் உணவகத்திற்கு விநியோகிக்கப்படும் சிலிண்டர் திடீர் நிறுத்தம்!

top-news
FREE WEBSITE AD

சென்னையில் உணவகத்திற்கு விநியோகிக்கப்படும் சிலிண்டர் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் உணவகங்களில் உணவு பொருட்கள் தயாரிப்பு கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.எனவே, சிலிண்டர் நிறுத்தம் உத்தரவை உடனே திரும்பபெற வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு உணவக உரிமையாளர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

ஒன்றிய அரசு கடந்த 7ம் தேதி அதிரடியாக வீட்டு பயன்பாட்டிற்கான சமையல் காஸ் சிலிண்டர் விலையை ரூ.60 உயர்த்தியது. இதன் மூலம் சிலிண்டர் விலை ரூ.868.50லிருந்து ரூ.928.50 ஆக உயர்ந்தது. இந்த அதிரடி விலையேற்றத்திற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

அதே நேரத்தில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையும் ரூ.114.50 உயர்த்தப்பட்டது. இதனால் சென்னையில் சிலிண்டர் விலை ரூ.2043.50 ஆக உயர்ந்தது. முதல் முறையாக சிலிண்டர் விலை ரூ.2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதன் காரணமாக பொதுமக்களின் அன்றாடப் பயன்பாட்டில் உள்ள டீ, காபி போன்ற பானங்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஒரு சிலிண்டர் வைத்திருப்பவர்கள் 21 நாட்கள் கழித்தும், 2 சிலிண்டர் வைத்திருப்பவர்கள் 30 நாட்கள் கழித்தும் தான் புதிய சிலிண்டருக்கு பதிவு செய்ய முடியும் என்றும் ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலால் கச்சா எண்ணெய் இறக்குமதியில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இந்தியாவில் கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு உண்டாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் வீட்டு உபயோகத்திற்கு மட்டுமே சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைப்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசு தற்போது அதிரடியாக அறிவித்துள்ளது.

இதனால் வணிக பயன்பாட்டு சிலிண்டர்களின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகத்திற்கு கட்டுப்பாடு விதிக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என சென்னை உணவக சங்கம் தலைவர் எம்.ரவி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: உணவகங்கள் மற்றும் உணவு தொழில்களில் பயன்படுத்துவதற்கான வணிக ரீதியான எல்பிஜி சப்ளை பற்றாக்குறை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஐடி நிறுவனங்கள், கல்லூரி விடுதி மாணவர்கள், ரயில் பயணிகள் பாதிக்கப்படுவார்கள்.

பல்வேறு மருத்துவமனைகளுக்காக உணவு பொருட்கள் தயாரிப்பு 24×7 அடிப்படையில் இயங்கி வருகிறது. வணிக ரீதியான எல்பிஜி சப்ளை தடைபட்டால் இந்த பணிகள் அனைத்தும் பாதிக்கப்படும். அது மட்டுமல்லாமல் பல்வேறு நட்சத்திர விடுதிகள் மற்றும் உணவகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள உணவு விருந்து முன்பதிவுகளும் பாதிக்கப்படும். வணிக ரீதியான எல்பிஜியின் தட்டுப்பாடு தமிழ்நாடு முழுவதும் உள்ளது. இதனால் பொதுமக்களின் தேவைகளும் கடுமையாக பாதிக்கப்படும். எனவே எண்ணெய் நிறுவனங்களின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் தலையிட்டு, எல்பிஜியை அத்தியாவசியப் பொருளாக கருதி உணவுத் தொழிலுக்கு எந்தத் தடையுமின்றி விநியோகத்தை முறைப்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உணவகத்திற்கு விநியோகிக்கப்படும் வணிக சிலிண்டர் நிறுத்தப்பட்டுள்ளதால் ஓட்டல்கள் இனிமேல் இயங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் ஓட்டல்களின் தேவையை பொறுத்து தினசரி சிலிண்டர் விநியோகம் என்பது இருந்து வரும். அதாவது, தினசரி 10 முதல் அதிகபட்சமாக 50 சிலிண்டர்கள் வரை தேவைக்கேற்ப ஒவ்வொரு கடைகளும் சிலிண்டர்களை வாங்குவது வழக்கம்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *