எனது அமைச்சர் சம்பளம் வெ.29,000 எம்பி சம்பளம் வெ.7,000'- ரஃபிஸி அம்பலம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப். 15-

பொருளாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது தாம் 29,556 வெள்ளி 21 காசை மாதச் சம்பளமாகப் பெற்று வந்ததை. பிகேஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி அம்பலப்படுத்தியுள்ளார்.


எந்த ஒரு கழித்தலும் இல்லாமல் தமக்கு மாதச் சம்பளமும் அலவன்ஸ்சும் சேர்த்து மொத்தம் 40,653 வெள்ளி 41 காசு வழங்கப்பட்டதை குறிக்கும் ஜூன் மாத சம்பள ரசீதை, நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவில், நடந்த “யாங் பெர்ஹெந்தி மெந்திரி" போட்காஸ்ட் நேர்காணலில் அவர் காண்பித்தார்.

வருமான வரி (2,743.95), ஊழியர் சேமநிதி வாரிய சந்தா (927 வெள்ளி) மற்றும் அரசாங்கக் குடியிருப்பில் தங்கியதற்காக 4,000 வெள்ளி வீட்டு அலவன்ஸ் உட்பட மொத்தம் 11,097 வெள்ளி 20 காசு கழிக்கப்பட்டது.அதே மாதத்தில் நாடாளுமன்ற உறுப்பினருக்கான சம்பளமாக 16,000 வெள்ளி
வழங்கப்பட்டது. ஆனால், 8,378 வெள்ளி பிகேஆர் கட்சிக்கு வழங்குவதற்காக கழிக்கப்பட்டதால், நிகர சம்பளமாக தாம் 7,622 வெள்ளியைப் பெற்றதாகவும் ரஃபிஸி அம்பலப்படுத்தியுள்ளார்.

"ஓர் அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினராக (எம்பி) இருக்கும் பட்சத்தில் எம்பிக்கான சம்பளத்தையும் பெறுகின்றார். அதற்கென்று தனி ரசீது வழங்கப்படுகிறது."இதன் அடிப்படையில், கழிக்கப்பட வேண்டிய தொகை கழிக்கப்பட்ட பின்னர் 29,000 சம்பளத்துடன் 7,000 வெள்ளியை கூட்டினால், மாதம் ஒன்றுக்கு 35,000 முதல் 36,000 ஆயிரம் வெள்ளி வரையில் கிடைக்கும்" என்று பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஃபிஸி கணக்குக் காட்டினார்.

இதர மக்கள் பிரதிநிதிகள் குறிப்பாக மந்திரி பெசார்களைக் காட்டிலும் தாம் குறைவான சம்பளத்தைப் பெற்றாலும், அரசாங்க நிறுவனங்கள் மற்றும் செயற்குழுக்களில் பல்வேறு பொறுப்புகளை வகிப்பதற்காக கூடுதல் சம்பளமும் அலவன்சுகளும் கிடைப்பது வழக்கமாகும் என்று, அவர் தெரிவித்தார்.

“ஒருவர் பல்வேறு நிறுவனங்களின் வாரியங்களில் பதவிகளை வகித்தால், அதில் 10 ஆயிரம் இதில் 5 ஆயிரம் என்று கூட்டிக் கொண்டே போகலாம். இறுதியில் அவருக்கான சம்பளம் சமயங்களில் ஒரு லட்சம் வெள்ளியையும் தண்டிவிடக் கூடும். "ஒருவர் எம்பியாக இருப்பாரேயானால், பல அலவன்ஸுகளைக் கோரமுடியும். ஆனால் நான்தான் இதுவரையில் அவ்வாறு கோரியது இல்லை. இப்போது நான் ஏழையாகி விட்டேன். அதனால், நான் அவ்வாறு கோரவேண்டி இருக்கிறது என்று கேலியாக அவர் கூறினார்.

தனியார் துறைகள் வழங்கும் சம்பளத்தை ஒப்பிட்டு கேள்வி கேட்டபோது, அரசியல் சேவையில் அதிக சம்பளம் வழங்கப்படுவதில்லை என்பதை அவர் ஒப்புக் கொண்டார்.ஆனால், பெரும்பாலான சாதாரண மக்கள் பெறும் சுமார் 3,000 வெள்ளியோடு ஒப்பிடும்போது, அரசியல் ரீதியிலான சம்பளம் மிக அதிக இடைவெளியைக் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *