கேரளாவை உலுக்கிய தற்கொலை வழக்கில் ஷிம்ஜிதா முஸ்தபா என்ற இளம்பெண் அதிரடி கைது! A young woman named Shimjitha Mustafa has been arrested in a suicide case that shook Kerala!
- Muthu Kumar
- 22 Jan, 2026
கேரள மாநிலம் கோழிக்கோடு கோவிந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் தீபக் (41). இவர் அப்பகுதியில் ஒரு ஜவுளிக் கடையில் பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் கண்ணூர் அருகே ஒரு தனியார் பஸ்சில் பயணம் செய்த தீபக், தன்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறி ஷிம்ஜிதா முஸ்தபா என்ற இளம்பெண் தான் எடுத்த ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். சிறிது நேரத்திலேயே இந்த வீடியோ வைரலாக பரவியது.
இந்த வீடியோவை பார்த்த பலரும் தீபக்கின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் தீபக் இத்தகைய செயலில் ஈடுபடக்கூடியவர் அல்ல என்றும், சமூக வலைதளங்களில் வைரலாக வேண்டும் என்பதற்காகவே ஷிம்ஜிதா பொய்யான தகவலை பரப்பியதாகவும் அவரது நண்பர்கள் கூறினர். ஷிம்ஜிதாவிடம் தான் தவறாக நடக்கவில்லை என்று தீபக்கும் வருத்தத்துடன் தன்னுடைய நண்பர்களிடம் கூறியுள்ளார். ஆனால் சமூக வலைதளங்களில் அவர் மீது பலரும் குற்றம்சாட்டியதால் தீபக் மிகுந்த மனவேதனை அடைந்தார்.
இந்நிலையில் கடந்த 18ம் தேதி தீபக் தன்னுடைய வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தீபக்கின் தற்கொலைக்குப் பின்னர் அனைவரும் ஷிம்ஜிதாவை குற்றம்சாட்டத் தொடங்கினர். தங்களுடைய மகன் சாவுக்கு காரணமான ஷிம்ஜிதா மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீபக்கின் பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக இவர்கள் போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து ஷிம்ஜிதா மீது கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்தனர். வழக்கு பதிவு செய்யப்பட்டது குறித்து அறிந்ததும் ஷிம்ஜிதா தலைமறைவானார். அவரை போலீசார் பல்வேறு இடங்களில் தேடிவந்தனர். ஷிம்ஜிதா வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானதை தொடர்ந்து போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தனர்.
போலீசாரின் தீவிர விசாரணையில் இவர் உறவினர் வீட்டில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று ஷிம்ஜிதாவை கைது செய்தனர். விசாரணைக்குப் பின் மருத்துவ பரிசோதனை நடத்தி அவரை போலீசார் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஷிம்ஜிதாவை 14 நாள் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.
ஷிம்ஜிதா முஸ்தபா மீது பிஎன்எஸ் 108 பிரிவில் தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறையும், அபராதமும் விதிக்கப்படும்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



