சுக்மா 2026: சீ விளையாட்டுப் போட்டிக்கான தயாரிப்பில் 132 வீரர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
- Surendran Sumdraraj
- 26 Aug, 2026
கோலாலம்பூர்: மலேசியா நடத்தவுள்ள 2027 சீ விளையாட்டுப் போட்டிக்கான தயாரிப்பில் பரிசீலிக்கத்தக்கத் திறமையான 132 வீரர்கள் சிலாங்கூர் சுக்மா 2026 போட்டியின் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் முகமது தவ்பிக் ஜொஹாரி வெளியிட்ட அறிக்கையில், ஆரம்பகட்ட மதிப்பீட்டின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்களில் 59 ஆண் வீரர்களும் 73 பெண் வீராங்கனைகளும் உள்ளதாகத் தெரிவித்தார்.
சுக்மா போட்டி முழுவதும் வீரர்கள் வெளிப்படுத்திய செயல்திறன், போட்டித் திறன் மற்றும் எதிர்கால முன்னேற்ற வாய்ப்பு உள்ளிட்ட அம்சங்கள் மதிப்பீட்டில் கருத்தில் கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.
“இந்த அனைத்து வீரர்களும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்படுவார்கள். அவர்களின் தற்போதைய செயல்திறன், தொடர்ச்சியான முன்னேற்றம், உடற்தகுதி, காயங்களின் நிலை, தேசிய மற்றும் அனைத்துலக போட்டிகளில் வெளிப்படுத்தும் திறன் மற்றும் ஒவ்வொரு விளையாட்டுப் பிரிவின் தேவைகள் ஆகியவை கவனத்தில் கொள்ளப்படும்,” என தவ்பிக் தெரிவித்தார்.
2027 சீ விளையாட்டுப் போட்டியில் மலேசியா சொந்த மண்ணில் சிறப்பான முடிவுகளைப் பதிவு செய்வதற்காக இளம் திறமைகளை முன்கூட்டியே அடையாளம் கண்டு தயார்படுத்துவது முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



