நேபாள் வெள்ளத்தில் காணாமல் போன மலேசியர் 37 நாட்களுக்குப் பின் பத்திரமாக மீட்பு
- Surendran Sumdraraj
- 02 Oct, 2026
நேபாள், அக் 2:
நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி ஏற்பட்ட வெள்ளத்தைத் தொடர்ந்து காணாமல் போன 55 மலேசியர்களில் ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்டு இன்று காலை மலேசியா திரும்பியுள்ளார்.
55 மலேசியர்களின் குடும்பங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் Malaysia Solidarity: Families in Hope என்ற Masfih அமைப்பு, இந்தத் தகவலை விஸ்மா புத்ராவிடம் இருந்து பெற்றதாகத் தெரிவித்துள்ளது.
காணாமல் போன மலேசியர் நேற்று நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள மலேசிய தூதரகத்திற்கு வந்துள்ளார்.
அவர் தனியாக நேபாளத்திற்கு சென்றிருந்ததாகவும், ஆகஸ்ட் 25ஆம் தேதி வெள்ளம் ஏற்படுவதற்கு ஒரு நாள் முன்பு நாக்தாலி பகுதியில் இருந்ததாகவும் Masfih தெரிவித்துள்ளது.
வெள்ளத்தால் அப்பகுதியில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதுடன், உள்கட்டமைப்புகளும் சேதமடைந்ததால் அவர் அங்கு சில காலம் சிக்கியிருந்தார். பின்னர், பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு மலேசிய தூதரகத்தை சென்றடைந்துள்ளார்.
அவர் இன்று காலை மலேசியா திரும்பி, தற்போது தனது குடும்பத்தினருடன் இருப்பதாக Masfih தெரிவித்துள்ளது.
பேரழிவு ஏற்பட்டு 37 நாட்களுக்குப் பிறகு இந்தத் தகவல் கிடைத்திருப்பது, இன்னும் தொடர்பு கிடைக்காத குடும்பங்களுக்கு நம்பிக்கை அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.
ஒருவர் நீண்ட காலம் சிக்கியிருந்தும், குடும்பத்தினருடன் தொடர்பு இல்லாமலும் இருந்து, இறுதியில் பாதுகாப்பாக மீண்டும் குடும்பத்தினருடன் இணைந்துள்ளார். எனவே, இன்னும் தொடர்பு கிடைக்காத 54 மலேசியர்களையும் நம்பிக்கையுடன் எதிர்பார்ப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

