2027 முதலாம் ஆண்டு சேர்க்கைக்கு 4.91 லட்சம் விண்ணப்பங்கள்
- Surendran Sumdraraj
- 07 Oct, 2026
கோலாலம்பூர், அக். 7: 2027 கல்விக் காலண்டருக்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்குக் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வரை மொத்தம் 4 லட்சத்து 91 ஆயிரத்து 649 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விண்ணப்பங்கள் ஆறு மற்றும் ஏழு வயது குழந்தைகளை உள்ளடக்கியுள்ள நிலையில், கூடுதலாக சுமார் 1 லட்சத்து 8 ஆயிரத்து 470 மாணவர்களுக்கு இடவசதி ஏற்படுத்த வேண்டியிருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கல்வித் துணை அமைச்சர் வோங் கா வோ இதனை மக்களவையில் இன்று நடைபெற்ற வாய்மொழி கேள்வி-பதில் அமர்வின்போது தெரிவித்தார்.
பெறப்பட்ட மொத்த விண்ணப்பங்களில் 73 ஆயிரத்து 498 விண்ணப்பங்கள் ஆறு வயது குழந்தைகளிடமிருந்தும், 4 லட்சத்து 18 ஆயிரத்து 151 விண்ணப்பங்கள் ஏழு வயது குழந்தைகளிடமிருந்தும் பெறப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
2027 முதல் ஆறு வயது குழந்தைகளை முதலாம் ஆண்டில் சேர்ப்பது பெற்றோரின் விருப்பத் தேர்வாக இருக்கும் என்றும், மாற்றக் காலத்தில் ஏழு வயது குழந்தைகளுக்கான சேர்க்கையே பிரதான நடைமுறையாகத் தொடரும் என்றும் அவர் விளக்கினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

