உடல் சம்பந்தப்படாத பாலியல் வன்கொடுமை புரிந்திருப்பதாக மாணவன் மீது 63 குற்றங்கள்!
- Muthu Kumar
- 18 Nov, 2024
கோலாலம்பூர், நவ. 18 -
ஆண் மாணவர்களுக்கு எதிராக, உடல் சம்பந்தப்படாத பாலியல் வன்கொடுமைகளைப் புரிந்திருப்பதாக, ஜொகூர், பத்து பாகாட், ஸ்ரீ காடிங்கில் உள்ள ஒரு பள்ளியைச் சேர்ந்த எஸ்பிஎம் மாணவன் ஒருவன் மீது மொத்தம் 63 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. சிறார் ஆபாச காணொளிகளை வைத்திருந்ததும் அக்குற்றச்சாட்டுகளில் அடங்கும். 17 வயதுடைய அம்மாணவனுக்கு எதிராக, மாஜிஸ்டிரேட் சுஹைலா ஷாஃபிடின் முன்னிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அக்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
ஆடைகளைக் கலைந்து, தம்மிடம் உடல்களைக் காட்டுமாறு ஏழு ஆண் மாணவர்களை கோரியதன் மூலம், அத்தகைய உடல் சம்பந்தப்படாத பாலியல் வன்கொடுமைகளைப் புரிந்திருப்பதாக அம்மாணவன் மீது 63 குற்றங்கள் சுமத்தப்பட்டன. கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் முதல் இவ்வாண்டு அக்டோபர் மாதத்திற்கிடையில், பள்ளியில் உள்ள சில கழிவறைகள், ஒரு சூராவ், பத்து பகாட், குளுவாங் மற்றும் தங்காக்கில் உள்ள அம்மாணவன்களின் வீடுகளில் இச்சம்பவங்கள் நிகழ்ந்ததாக கூறப்பட்டது.இதில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் 13 முதல் 17 வயதுக்குட் பட்டவர்கள்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒவ்வொரு குற்றத்திற்கும் 10 ஆண்டு வரைக்குமான சிறை அல்லது 20 ஆயிரம் வெள்ளிக்கு மேற்போகாத அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும், 2017ஆம் ஆண்டு சிறார்களுக்கு எதிரான வன்கொடுமை குற்றச் செயல் சட்டத்தின் செக்ஷன் 15 (எ)(ii)இன் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சிறார் ஆபாச காணொளிகளை வைத்திருந்ததாக அம்மாணவன் மீது இறுதியாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டில் கூறப்பட்டது.
இக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், ஐந்து ஆண்டுகள் வரைக்குமான சிறை அல்லது 10 ஆயிரம் வெள்ளி வரைக்குமான அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும், அதே சட்டத்தின் செக்ஷன் 10இன் கீழ் அவன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.காணொளிகளை தம்மிடம் வழங்குவதற்கு முன்னர், ஒழுங்கீனமான செயல்களைப் புரிந்து அதைப் பதிவு செய்யுமாறு, பாதிக்கப்பட்ட மாணவர்களை அம்மாணவன் கட்டாயப்படுத்தியதாக கூறப்பட்டது.
இவ்வழக்கின் மறுசெவிமடுப்பை வரும் டிசம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிமன்றம், அம்மாணவனை 5,000 வெள்ளி ஜாமீனில் விடுவித்ததுடன், வழக்கு முடியும் வரையில் சாட்சிகளை அல்லது பாதிக்கப்பட்ட மாணவர்களை தொந்தரவு செய்யக் கூடாது என்று உத்தரவிட்டது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *