ஜப்பானில் ஏற்படப்போகும் 9 ரிக்டர் நிலநடுக்கம்: 3 லட்சம் மக்கள் உயிரிழக்கும் அபாயம்!

- Muthu Kumar
- 02 Apr, 2025
ஜப்பானின் பசிபிக் கடற்கரையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட 80 சதவீதம் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்த பலத்த நிலநடுக்கத்தால் 3 லட்சம் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை மியான்மர் மற்றும் அதன் அண்டை நாடான தாய்லாந்தில் 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக மூவாயிரத்துக்கும் அதிகமானோர் பலியானதோடு, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன், பலத்த சேதமும் ஆகியுள்ளது.
இந்நிலையில், மியான்மரில் பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கத்திற்குப் பிறகு ஜப்பானுக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட 80 சதவீதம் வாய்ப்புள்ளது என அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.ஏனெனில், ஜப்பான் உலகின் நிலநடுக்கங்களை அதிகம் சந்திக்கும் நாடுகளில் ஒன்று. காரணம் பசிபிக் தீவிர வளையம் எனப்படும் பூகம்பத்தகட்டு சந்திப்பு பகுதியில் அமைந்திருக்கிறது. அத்துடன், ஜப்பானில் உள்ள நாங்காய் பள்ளத்தாக்கு நிலநடுக்கத்தின் மையமாக உள்ளது. இது இரட்டை பூகம்பத் தகடுகள் சந்திக்கும் இடமாக உள்ளது.
இங்கு பிலிப்பைன் கடல் தட்டும், யூரேசிய தட்டும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்கின்றன. இதனால், பூமியின் உள் அழுத்தம் அதிகரித்து, மிகப்பெரிய பூகம்பம் உருவாகும் அபாயம் உள்ளது. சராசரியாக ஒவ்வொரு 100 முதல் 150 வருடங்களுக்கும் இடையே இந்தப் பகுதி பெரிய பூகம்பங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக வரலாறுகள் உள்ளது.
இந்நிலையில், ஜப்பான் அரசு சமீபத்தில் வெளியிட்ட எச்சரிக்கையின் படி, நாங்காய் பள்ளத்தாக்கு பகுதியில் 9.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது. இதனால் உண்டாகும் சுனாமி அலைகள் ஜப்பானின் கடற்கரை நகரங்களை தாக்கும் என எச்சரித்துள்ளது.
இதன் காரணமாக 3 லட்சம் இறப்புகளுக்கு மேல் நடக்கலாம் எனவும், 1.5 டிரில்லியனுக்கும் அதிகமான பொருளாதார இழப்புகள் ஏற்படக்கூடும் என ஜப்பான் எச்சரித்துள்ளது. ஆனால், இந்த நிலநடுக்கம் எப்போது நடக்கும் என்பது குறித்த தெளிவான தகவல் இல்லை. ஆனால், விரைவில் அது நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறது என கூறப்பட்டுள்ள தகவல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *