நஜிப் விவகாரம்: தாமதம் ஏன்? மாமன்னரின் அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்காதீர்! - ஜாஹிட் ஹமிடி
- Shan Siva
- 09 Nov, 2026
கோலாலம்பூர், நவ 9: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கை வீட்டுக்காவலில் வைக்கும் உத்தரவை அமல்படுத்துவதில் மேலும் தாமதம் ஏற்படக்கூடாது என அம்னோ தலைவரும் துணைப் பிரதமருமான அஹமட் ஜாஹிட் ஹமிடி வலியுறுத்தியுள்ளார்.
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் தனது நான்கு நாள் பயணத்தை முடித்துக்கொண்டு மலேசிய ஊடகங்களிடம் பேசிய அவர், இந்த விவகாரத்தை மீண்டும் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றார்.
சட்டங்கள் மற்றும் அரசியலமைப்பு விதிகளை விளக்க வேண்டிய பொறுப்பு சட்டத்துறை தலைமை அலுவலகத்திற்கே இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், மாமன்னரின் இறுதி முடிவின் அடிப்படையில் வீட்டுக்காவல் உத்தரவு அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும், நஜிப் ரசாக்கிற்கு விதிக்கப்பட்ட 5 கோடி ரிங்கிட் அபராதம் செலுத்தப்பட்டதும், மன்னிப்பு வாரியத்தின் உத்தரவும் முடிவும் தானாகவே நடைமுறைக்கு வரும் என சட்டத்துறை தலைமை அலுவலகம் ஏற்கெனவே தெரிவித்திருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.
சட்ட அமைப்புகள் மற்றும் சட்டத்துறை தலைமை அலுவலகத்தின் செயல்பாடுகளைத் தாம் மதிப்பதாகக் கூறிய ஜாஹிட் ஹமிடி, அவற்றின் நம்பகத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக மாமன்னர் சுல்தான் இப்ராஹிமைச் சந்தித்து விளக்கம் அளிக்க சட்டத்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமது டுசுக்கி மொக்தார் அனுமதி கோரியிருப்பதை அவர் வரவேற்றார்.
இருப்பினும், கூட்டரசு அரசியலமைப்பின் கீழ் மாமன்னருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் குறித்து இஸ்தானா நெகாரா வெளியிட்ட அறிக்கை தெளிவாக இருப்பதாகவும், மன்னிப்பு வாரியத்தின் தலைவரான மாமன்னரின் தனிச்சிறப்பு அதிகாரத்தை யாரும் கேள்விக்குள்ளாக்கக் கூடாது என்றும் ஜாஹிட் தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

